Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Exit polls: ரிசல்ட் எப்படி வரும்? கடந்த 3 தேர்தல்களிலும் யார் சரியாக கணித்தார்கள்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: லோக்சபா தேர்தல் இன்று மாலையுடன் நிறைவடையும் நிலையில், அதன் பிறகு எக்ஸிட் போல் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாக உள்ளன. அதற்கு முன்பாக, முந்தைய தேர்தல் முடிவுகளும், அப்போதைய எக்ஸிட் போல் கருத்துக்கணிப்புகளையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

நாட்டின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான லோக்சபா தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 7 கட்டங்களாக நடைபெறும் லோக்சபா தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று 8 மாநிலங்களில் உள்ள 57 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது. கடைசி கட்ட வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் நிறைவடையும்.

lok sabha election 2024 bjp congress exit poll

லோக்சபா தேர்தல் இன்றோடு நிறைவு: 2024 மக்களவை தேர்தலில் 8,360 வேட்பாளர்களின் விதியை 97 கோடி வாக்காளர்கள் தீர்மானிக்க உள்ளனர். லோக்சபா தேர்தல் முடிவுக்கு வரும் சூழலில், வெற்றி, தோல்வி பற்றிய கணிப்புகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. வரும் ஜூன் 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன.

நாடு தழுவிய லோக்சபா தேர்தலின் முடிவுகள் வெளியாகும் நாளுக்காக அனைவரும் காத்திருக்கும் நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று மாலை முதல் வெளியிடப்பட உள்ளன. இதனையொட்டி, அரசியல் கட்சிகளும், அரசியல் திறனாய்வாளர்களும், பொதுமக்களும் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.

எக்ஸிட் போல் முடிவுகள்: தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் என்ன சொல்கிறது என்பது இன்று மாலை தெரியும். அதற்கு முன்பாக கருத்துக்கணிப்பு தொடர்பான சில விஷயங்களை நாம் புரிந்து கொள்வது அவசியம். 2009, 2014, 2019 மக்களவைத் தேர்தல் முடிவுகள் மற்றும் அதற்கு முன்பாக வெளியான எக்ஸிட் போல் கருத்துக்கணிப்பு முடிவுகளையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

கடந்த இரண்டு மக்களவைத் தேர்தல்களின்போது, பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்று கணிப்பதில் பெரும்பாலான ஊடகங்கள் சரியாக இருந்தனர். ஆனால் பாஜக பெறும் வெற்றியின் அளவை எந்த ஊடக கருத்துக்கணிப்பும் துல்லியமாக கணிக்க முடியவில்லை.

2019 தேர்தல் ஒப்பீடு: 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது, சராசரியாக 13 கருத்துக் கணிப்புகள் பாஜக கூட்டணி பெறும் மொத்த சீட்களின் எண்ணிக்கையை 306 ஆகவும், காங்கிரஸ் கூட்டணி பெறும் சீட்களின் எண்ணிக்கை 120 ஆகவும் இருப்பதாகக் கணித்தன. ஆனால், பாஜக, தேர்தல் முடிவுகளில் 353 இடங்களை வென்றது. ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 93 இடங்கள் மட்டுமே கிடைத்தன.

lok sabha election 2024 bjp congress exit poll

இதில் பாஜக தனியாக 303 இடங்களிலும், காங்கிரஸ் 52 இடங்களிலும் வெற்றி பெற்றன. இந்த எண்ணிக்கையை ஒட்டி இந்தியா டுடே - ஆக்சிஸ் கருத்துக்கணிப்பும், நியூஸ் 24 - சாணக்யா கருத்துக்கணிப்பும் கிட்டத்தட்ட கணித்திருந்தன.

2014 ரிசல்ட் ஒப்பீடு: 2014 ஆம் ஆண்டில், சராசரியாக எட்டு கருத்துக் கணிப்புகள் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி 283 இடங்களையும், காங்கிரஸ் தலைமையிலான யுபிஏ கூட்டணி 105 இடங்களையும் வெல்லும் என கணித்தன. அந்த ஆண்டு மோடி அலையின் வேகத்தை பெரும்பான்மையான ஊடக கருத்துக் கணிப்புகள் மதிப்பிடத் தவறின.

தேர்தல் ரிசல்ட் முடிவில் பாஜகவின் என்டிஏ கூட்டணி 336 இடங்களைப் பெற்றது. காங்கிரஸ் தலைமையிலான யுபிஏ கூட்டணி வெறும் 60 இடங்களை மட்டுமே பெற்றது. இதில் பாஜக தனியாக 282 இடங்களையும் காங்கிரஸ் தனியாக 44 இடங்களையும் வென்றன. எந்த ஒரு ஊடகமும் காங்கிரஸ் கட்சி இவ்வளவு குறைவான சீட்களைப் பெறும் என கணிக்கவே இல்லை.

lok sabha election 2024 bjp congress exit poll

2009 ரிசல்ட் vs கணிப்பு : 2009 ஆம் ஆண்டிலும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது, ​​சராசரியாக நான்கு கருத்துக் கணிப்புகள் காங்கிரஸின் வெற்றி எண்ணிக்கையை குறைத்து மதிப்பிட்டன. அவர்கள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 195 இடங்களையும், தேசிய ஜனநாயகக் கூட்டணி 185 இடங்களையும் பெறும் என கருத்துக்கணிப்பு முடிவை வெளியிட்டனர்.

ஆனால், இறுதியில் பாஜக கூட்டணி 158 இடங்களை மட்டுமே பிடித்தது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி இறுதியாக 262 இடங்களைப் பெற்று வெற்றி பெற்றது. இவற்றில் காங்கிரஸ் கட்சி 206 இடங்களையும் பாஜக 116 இடங்களையும் வென்றது. காங்கிரஸ், பாஜக இரு கட்சிகளுக்கு இடையே ஒருசில சீட்கள் மட்டுமே வித்தியாசம் இருக்கும் என எக்ஸிட் போல் கணிப்புகள் கூறிய நிலையில், தேர்தல் முடிவுகளில் பெரிய அளவில் மாற்றம் இருந்தது.

துல்லியம்?: கடந்த தேர்தல்களின் உண்மையான முடிவுகளையும், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, எக்ஸிட் போல் கருத்துக்கணிப்புகள் துல்லியமாக இருக்கும் என்று உறுதியாக கூற முடியாது. அரசியல் கட்சிகள் ஓரளவு ஆறுதல் அடைய வேண்டுமானால் இந்த கணிப்புகள் உதவும் என்கின்றனர் அரசியல் பிரமுகர்கள்.

இன்று மாலை பல்வேறு முன்னணி நிறுவனங்கள் எக்ஸிட் போல் முடிவுகளை வெளியிட உள்ளன. யார் துல்லியமாக கணித்திருப்பது, யாருடைய கணிப்பு உண்மையான ரிசல்ட்டுக்கு நெருக்கமாக இருக்கிறது என்பதெல்லாம் வரும் ஜூன் 4 ஆம் தேதி தெள்ளத் தெளிவாகப் புலனாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+