டெல்லி முதல்வர் அதிஷி அதிகாரப்பூர்வ வீட்டில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டது ஏன்?
டெல்லி: டெல்லி முதல்வர் இல்லத்தில் இருந்து அதிஷி வெளியேற்றப்பட்டார். இந்த விவகாரம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜக உத்தரவின்பேரில் வலுக்கட்டாயமாக அவர் காலி செய்யப்பட்டதாகவும், அந்த வீட்டை பாஜக தலைவர் ஒருவருக்கு ஒதுக்க இருப்பதாகவும் ஆம் ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது. இதனிடையே டெல்லி முதல்வர் அதிஷி வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டது ஏன் என்பது குறித்து தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.
டெல்லி மாநில முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மாதம் ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய முதல்வராக அதிஷி பொறுப்பேற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால், தான் குடியிருந்து வந்த முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறினார். அத்துடன் அங்கிருந்து ஆம் ஆத்மி எம்.பி. ஒருவரின் வீட்டுக்கு சென்றார். அங்கு தான் தற்போது கெஜ்ரிவால் வசித்து வருகிறார்.

இதனிடையே டெல்லி முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்துக்கு அதிஷி கடந்த அக்டோபர் 7-ந் தேதி குடிபெயர்ந்தார். அரவிந்த் கெஜ்ரிவாலிடம் இருந்து சாவியை பெற்று அவர் அங்கு சென்று வசித்து வந்தாராம். ஆனால் அதிஷிக்கு அந்த இல்லம் அதிகாரப்பூர்வமாக ஆளுநரால் ஒதுக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. மத்திய பொதுப்பணித்துறையிடம் இருந்து இதற்கான எந்த கடிதமும் வழங்கப்படவில்லையாம்.
இதனால் அதிஷியை அங்கிருந்து வெளியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி நேற்று மதியம் அதிஷியின் வீட்டு உபயோக பொருட்கள் வெளியே எடுக்கப்பட்டது. மத்திய பொதுப்பணித்துறை அதிகாரிகள் வந்து வீட்டை பூட்டி சாவியை எடுத்துச் சென்றார்கள். இதன் மூலம் வரலாற்றில் முதல் முறையாக மாநில முதல்வர் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டது நடந்துள்ளதாக, ஆம் ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது. பாஜகவின் உத்தரவின்பேரில் வலுக்கட்டாயமாக அவர் காலி செய்யப்பட்டதாகவும், அந்த வீட்டை பாஜக தலைவர் ஒருவருக்கு ஒதுக்க இருப்பதாகவும் குற்றம் சாட்டி இருக்கிறது.
முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டை காலி செய்து, பொதுப்பணித்துறையிடம் கடிதம் அளித்து சாவியை ஒப்படைக்கவில்லை என்றும், அப்படி ஒப்படைத்து இருந்தால் முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கும் என்றும், இருந்தாலும் முதல்வருக்கு முறைப்படி அரசு இல்லம் ஒதுக்கப்படும் என்று டெல்லி ஆளுநர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனினும் டெல்லி முதல்வர் வீட்டை காலி செய்த இந்த விவகாரம், டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications