டெல்லியில் தாக்குதலுக்கு சதி திட்டமா? 350 கிலோ வெடிபொருட்கள், துப்பாக்கிகள் பறிமுதல்! டாக்டர் கைது
டெல்லி: ஹரியானாவில் 360 கிலோ வெடி மருந்துகள் மற்றும் ஏகே 47 துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய காஷ்மீர் டாக்டர் ஒருவரையும் ஜம்மு காஷ்மீர் போலீசார் கைது செய்துள்ளனர். இதன் மூலம், பயங்கர சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா எடுத்தது. இந்த தாக்குதல் பயங்கரவாதிகளின் முதுகெலும்பை உடைக்கும் விதமாக அமைந்தது. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் இந்த தாக்குதலில் துல்லியமாக அழிக்கப்பட்டன.

உளவுத்துறை எச்சரிக்கை
இதனால் நிலைகுலைந்து போன பயங்கரவாதிகள், ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து ஜம்மு காஷ்மீர் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சந்தேகத்திற்டமான செயல்பாடுகளை போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.
360 கிலோ வெடி மருந்துகள்
இந்த நிலையில்தான், டெல்லி அருகே உள்ள பரிதாபாத்தில் ஐஇடி (IED) தயாரிக்கும் பொருட்கள் மற்றும் வெடிமருந்துகள் பெருமளவில் கைப்பற்றப்பட்டுள்ளன. அதாவது 360 கிலோ வெடி மருந்துகள் மற்றும் ஏகே 47 துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய காஷ்மீர் டாக்டர் ஒருவரையும் ஜம்மு காஷ்மீர் போலீசார் கைது செய்துள்ளனர். இதன் மூலம், பயங்கர சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா காவல்துறையினர் இணைந்து நடத்திய விசாரணையில் இவை கண்டெடுக்கப்பட்டன. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "ஞாயிற்றுக்கிழமை 360 கிலோ அமோனியம் நைட்ரேட் பறிமுதல் செய்யப்பட்டது. டாக்டர் முஸம்மில் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பேராசிரியர் கைது
பரிதாபாத் காவல் ஆணையர் இது தொடர்பாக கூறுகையில், "ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் கூட்டு நடவடிக்கையில் இந்த வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. டாக்டர் முஸம்மில் என்பவர் பிடிபட்டுள்ளார். 360 கிலோ எரியக்கூடிய பொருள் (அமோனியம் நைட்ரேட் என சந்தேகிக்கப்படுகிறது) நேற்று கண்டெடுக்கப்பட்டது, இது ஆர்டிஎக்ஸ் அல்ல.
கைது செய்யப்பட்டவர் அல்-ஃபலா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்துள்ளார். ஒரு துப்பாக்கி, 3 மகசீன்கள், 83 தோட்டாக்கள், ஒரு கைத்துப்பாக்கி, 8 தோட்டாக்கள், 2 காலி தோட்டா உறைகள், 2 கூடுதல் மகசீன்கள் கண்டெடுக்கப்பட்டன.
காஷ்மீரை சேர்ந்த மருத்துவர்
மேலும், 8 பெரிய சூட்கேஸ்கள், 4 சிறிய சூட்கேஸ்கள் மற்றும் ஒரு வாளியில் இருந்து சுமார் 360 கிலோ வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன என்றார். "இது அமோனியம் நைட்ரேட் என சந்தேகிக்கப்படுகிறது" என்று கூறினார். கைதான நபரின் பின்னணி, அவர்களுடன் தொடர்பில் இருப்பவர்கள் பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பாக உத்தரப் பிரதேசத்தில் காஷ்மீரை சேர்ந்த மருத்துவர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். ஜெய்ஷ்-எ-மொஹம்மது இயக்கத்திற்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டிய புகாரில் கைது செய்யப்பட்ட அந்த மருத்துவரிடம் விசாரணை நடத்தினர். அவர் அளித்த தகவலின் பேரில் நடத்தப்பட்ட சோதனையில்தான், பரிதாபாத்தில் உள்ள மருத்துவர் வீட்டில் இந்த வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதாக முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications