சட்ட பாடத்திட்டத்தில் மனுஸ்மிருதி.. கிளம்பிய கடும் எதிர்ப்பு!அதிரடி முடிவெடுத்த டெல்லி பல்கலைக்கழகம்
டெல்லி: டெல்லி பல்கலைக்கழகத்தின் சட்டப் படிப்புக்கான பாடத்திட்டத்தில் இருந்து மனுஸ்மிருதி நீக்கப்படுவதாக பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் யோகேஷ் சிங் அறிவித்திருக்கிறார்.
மனுஸ்மிருதி குறித்து பல்வேறு விமர்சனங்கள் சமீப நாட்களாக மேலெழுந்து வருகின்றன. மனுஸ்மிருதி என்பது சனாதனத்தை உயர்த்தி பிடிக்கிறது என்றும், சனாதனம் சமத்துவத்திற்கு எதிரானது என்றும் பல்வேறு தரப்பினரும் மனுஸ்மிருதிக்கு எதிராக போராடி வருகின்றனர். தென் மாநிலங்களில் குறிப்பாக தமிழ்நாட்டில் மனுஸ்மிருதிக்கு எதிரான இயக்கங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

முன்னதாக, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னையில் கடந்த 2023 செப்டம்பர் 2-ம் தேதி 'சனாதன ஒழிப்பு மாநாடு’ என்ற பெயரில் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்று பேசிய தமிழக இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,
“சனாதன தர்மம் சமூக நீதிக்கு எதிரானது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்க முடியாது. ஒழிக்கத்தான் வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் வேலை” என்று பேசியிருந்தார். இது நாடு முழுவதும் பெரும் விவாதங்களை கிளப்பியிருந்தது.
அதேபோல இந்தியாவில் மனுவுக்கு சிலை இருப்பதாகவும் அது அவமானத்தின் சிலை, எனவே உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சந்துரு கூறியிருந்தார்.
“மனு சாஸ்திரத்தில் பல காலகட்டங்களில் பல்வேறு விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. பிறப்பாலேயே சமமற்ற தன்மையை உருவாக்குவதுதான் மனுதர்மம் என்ற சாஸ்திரம். ஜாதியை பிரிவினை பேசுவதாகவே மனுதர்மம் உள்ளது. இந்தியாவிலே மனுவுக்கு என்று ஒரு சிலை உள்ளது. அது ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் உயர் நீதிமன்றத்தில் அமைந்துள்ளது. அது அவமானத்தின் சிலை.
சென்னையில் மட்டுமே அரசியல் அமைப்புச் சட்டத்தை வடிவமைத்த டாக்டர் அம்பேத்கருக்கு சிலை உள்ளது. அதுவும் அவருக்கு ஆயுள் தண்டனை கொடுத்து பூட்டி வைத்திருக்கிறோம். ஆனால் மனு சிலைக்கு எந்த பாதுகாப்பும் கிடையாது” என்று கூறியிருந்தார்.
இப்படியாக மனு குறித்தும் மனுஸ்மிருதி குறித்தும் பல்வேறு விவாதங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் இளங்கலை சட்ட படிப்பில், ஜூரிஸ்ப்ரூடன்ஸ் (சட்ட முறை) என்ற தாளில் 'மனுஸ்மிருதி' அறிமுகப்படுத்த இருப்பதாக பேச்சு அடிப்பட்டது. இது புதிய கல்விக்கொள்கையின் ஒரு அங்கம் என்று கூறி, டெல்லி பல்கலைக்கழகத்தின் 'சமூக ஜனநாயக ஆசிரியர்கள் முன்னணி' கடுமையாக எதிர்த்தது.
ஆசிரியர் முன்னணி இது குறித்து துணை வேந்தருக்கு எழுதியிருந்த கடிதத்தில், “மனுஸ்மிருதியின் பல பிரிவுகளில் பெண்களின் கல்வி மற்றும் சம உரிமைகள் எதிர்க்கப்பட்டிருக்கிறது. மனுஸ்மிருதியின் எந்தப் பிரிவையும் அல்லது பகுதியையும் அறிமுகப்படுத்துவது நமது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பு மற்றும் இந்திய அரசியலமைப்பின் கொள்கைகளுக்கு எதிரானது” என்று கூறியிருந்தது.
அதேபோல மாணவர் அமைப்பினரும் கடும் போராட்டங்களை மேற்கொண்டனர். இப்படி இருக்கையில், சட்டப்படிப்பில் இருந்து மனுஸ்மிருதி நீக்கப்படும் என டெல்லி சட்டப்பல்கலைக்கழக துணைவேந்தர் யோகேஷ் சிங் அறிவித்திருக்கிறார்.
“பாடத்திட்டத்தில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் குறித்து ஆசிரியர்கள் சிலர், சில அம்சங்களை முன்வைத்திருந்தனர். அதில் ஒன்றுதான் மனுஸ்மிருதியை இணைப்பது. இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருக்கிறது. இதுபோன்ற எதுவும் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட மாட்டாது” என்று துணை வேந்தர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications