கள்ள உறவு இருந்தால் கொடுமைப்படுத்தியதாக அர்த்தமா? கோர்ட்டுக்கு ஓடிய கணவன்.. ஹைகோர்ட் பரபர உத்தரவு
டெல்லி: கள்ள உறவு வைத்திருந்தார் என்பதற்காக மனைவியை கொடுமைப்படுத்தியதாகவோ தற்கொலையை தூண்டியதாகவோ கருதப்படாது. கொடுமைப்படுத்தாவிடில், திருமணத்தை மீறிய உறவு, தற்கொலையை தூண்டுவதாகவோ தவறு என்றோ சட்டப்படி கருதப்படாது என்று வழக்கு ஒன்றில் டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது..
கள்ள உறவுகள் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் குவிந்து வரும் நிலையில், அது தொடர்பான உத்தரவுகளையும் நீதிமன்றங்கள் அவ்வப்போது பிறப்பித்து வருகின்றன.

தகாத உறவு
கடந்த 2018ம் ஆண்டு, தகாத உறவு விவகாரத்தில் ஆணுடன் பெண்ணுக்கும் தண்டனை வழங்கக்கோரும் வழக்கில் கருத்து கூறிய உச்சநீதிமன்றம், "பெண்ணின் எஜமானர் கணவன் அல்ல. ஆணுக்கு சமமாக பெண்ணையும் நடத்த வேண்டும். பெண்ணுக்கு எதிராக பாகுபாடு காட்டுவது சட்ட விதிகளை மீறுவதாகும்.
தகாத உறவில் ஈடுபடும் ஆணுக்கு மட்டுமே தண்டனை வழங்கும் சட்டப்பிரிவு அரசியல் சாசனத்திற்கு எதிரானது. தகாத உறவால் யாரும் தற்கொலைக்கு தூண்டப்படாத வகையில் அது கிரிமினல் குற்றம் இல்லை. 497-ஆவது பிரிவு சட்டவிரோதமானது" என்று உத்தரவிட்டிருந்தது.
மனைவி கள்ளக்காதல்
கடந்த 2 மாதத்துக்கு முன்பு, மத்திய பிரதேச ஐகோர்ட்டில் நடந்த வழக்கு ஒன்றில், "ஒரு மனைவி உடல் ரீதியான உறவுகள் இல்லாமல் வேறொருவர் மீது அன்பும் பாசமும் கொண்டிருந்தாலும், மனைவி கள்ளக்காதல் கொண்டிருக்கிறாள் என்று கூறுவதற்கு அதுவே போதுமானதாக இருக்க முடியாது.. மனைவி ஒருத்தர் தன் கணவனை தாண்டி வேறொரு நபருடன் உடல் ரீதியிலான உறவில் இல்லாமல் காதலிப்பது கள்ளக்காதல் ஆகாது.. கள்ளக்காதல் என்பது பாலியல் உடலுறவை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்" என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்நிலையில், கள்ளத்தொடர்பு காரணமாக மனைவியை கணவன் துன்புறுத்தவில்லை என்றால், அவரது தற்கொலையை தூண்டியதாக கணவனை குற்றஞ்சாட்ட முடியாது என்று டெல்லி ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.
இயற்கைக்கு மாறான மரணம்
டெல்லியை சேர்ந்த திருமணமான பெண் ஒருவர், கடந்த வருடம் மார்ச் 18ம் தேதி கணவனின் வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து போலீசார், இயற்கைக்கு மாறான மரணம், தற்கொலைக்குத் தூண்டியது, வரதட்சணை மரணம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, அப்பெண்ணின் கணவரை கைது செய்தனர்.
இந்த வழக்கில் கணவர் மீது விசாரணை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கில் தனக்கு ஜாமீன் வேண்டும் என்று கேட்டு, டெல்லி ஐகோர்ட்டில் கணவர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி சஞ்சீவ் நருலா பிறப்பித்த உத்தரவு இதுதான்:
ஆதாரங்கள் தாக்கல்
"மனுதாரர், திருமணத்திற்கு மாறான உறவில் இருந்ததற்கான ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த தொடர்புக்கும் வரதட்சணை கோரிக்கைக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படவில்லை. கள்ளத்தொடர்பு காரணமாக மனைவியை மனுதாரர் துன்புறுத்தியதாக அரசு தரப்பில் நிரூபிக்கப்படவில்லை. கள்ளத்தொடர்புக்கும் வரதட்சணை கோரிக்கைக்கும் தொடர்பு இல்லாத நிலையில், வரதட்சணை மரணத்திற்கு கணவரை சிக்கவைக்க அது ஒரு காரணம் அல்ல.
கள்ள உறவு வைத்திருந்தார் என்பதற்காக மனைவியை கொடுமைப்படுத்தியதாகவோ தற்கொலையை துாண்டியதாகவோ கருதப்படாது. கொடுமைப்படுத்தாவிடில், திருமணத்தை மீறிய உறவு, தற்கொலையை துாண்டுவதாகவோ தவறு என்றோ சட்டப்படி கருதப்படாது.
வரதட்சணை புகார்
அந்தப் பெண் உயிருடன் இருந்தபோது, அந்தப் பெண்ணோ அல்லது அவரது குடும்பத்தினரோ வரதட்சணை புகாரோ கொடுமைப்படுத்துவதாக புகாரோ தரவில்லை. எனவே, வரதட்சணை தொடர்பான துன்புறுத்தல் கோரிக்கையின் உடனடித்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை முதற்கட்டமாக நீர்த்துப்போக செய்கிறது.
மனுதாரரை தொடர்ந்து சிறையில் வைத்திருப்பது, எந்த நோக்கத்திற்கும் உதவாது. விசாரணை விரைவில் முடிவடைய வாய்ப்பில்லை. ஆதாரங்களை சிதைப்பதற்கோ அல்லது நீதியிலிருந்து தப்பிச் செல்வதற்கோ எந்த வாய்ப்பும் இல்லை" என்று தீர்ப்பளித்து கணவரை விடுவித்து உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications