வழக்கம்போல சர்ச்சை கருத்து.. இந்த முறை விடாத காங்கிரஸ்! கங்கனா ரனாவத்! FIR பதிவு!
டெல்லி: சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசி விமர்சனங்களை எதிர்கொள்வது ஒன்றும், பாஜக எம்பியும் நடிகையுமான கங்கனா ரனாவத்துக்கு புதியது கிடையாது. ஆனால், இந்த முறை அவர் பேசிய கருத்துக்கள் ரொம்பவும் சீரியஸாக இருந்ததால், அவர் மீது FIR பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
நவ.10ம் தேதி கங்கனா தனது x பக்கத்தில் ஒரு போஸ்ட்டை போட்டியிருந்தார். அதில் இந்திரா காந்தி, சோனியா காந்தி ஆகியோர் குறித்தும், காந்தி குடும்பம் குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டிருந்தார். இந்த போஸ்ட், சோனியா காந்தியை டார்கெட் செய்வதை போல இருந்தது. இப்படி இருக்கையில் இந்த கருத்துக்கு எதிராக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சிம்லா போலீஸ் கங்கனா மீது FIR பதிவு செய்திருக்கிறது.

கங்கனா தனது பதிவில், சோனியா காந்தியை மர்மமான வெளிநாட்டவர் என்று குறிப்பிட்டிருந்தார். சஞ்சய் காந்தி மர்மமான முறையில் இறந்ததாகவம், அவரது இளம் மனைவி மேனகா காந்தி வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டதாகவும், அதன்பின் மாமியர் (இந்திரா காந்தி) மற்றும் கணவர் (ராஜீவ் காந்தி) ஆகியோர் அடுத்தடுத்து கொல்லப்பட்டதால் சோனியா காந்தி அரசாங்கத்தின் தலைவராக வந்ததாகவும், இது 'எவ்வளவு வசதியானது' என்றும் பதிவிட்டிருந்தார்.
வழக்கமாக அரசியல் தலைவர்கள் ஒருவரை, ஒருவர் விமர்சித்துக்கொள்வது இயல்பானதுதான். ஆனால், விமர்சனம் என்கிற அளவை தாண்டி.. களங்கப்படுத்தும் வகையில் விமர்சிப்பதையெல்லாம் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? என்று காங்கிரஸ் தலைவர்கள் கொந்தளித்திருக்கின்றனர்.
இவரது போஸ்ட் கடுமையான விமர்சனங்களை உருவாக்கியிருந்த நிலையில், சிம்லாவை சேர்ந்த அதுல் சர்மா என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கங்கனா மீது FIR பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இரு பிரிவினரிடையே பகைமை மற்றும் வெறுப்பை தூண்டுதல், பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்துதல் மற்றும் அவதூறு பரப்புதல் ஆகிய பிரிவுகளின் கீழ் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
ஆனால், இந்த FIR நடவடிக்கை காங்கிரஸின் பழிவாங்கும் நடவடிக்கை என்று பாஜக விமர்சிக்க தொடங்கியிருக்கிறது. பாஜக ஆளும் மாநிலங்களில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் மீது FIR, கைது எல்லாம் மிக சாதாரணம்தான். அப்படி இருக்கையில் காங்கிரஸ் ஆளும் மாநிலத்தில் பாஜக எம்பி மீது FIR பதிவு செய்தால்.. அது பழிவாங்கும் நடவடிக்கையா? என்று காங்கிரஸ் கட்சியினர் திருப்பி கேள்வி எழுப்பி வருகின்றனர்.
வழக்கமாக கங்கனாவின் கருத்துக்களுக்கு பதிலடி கொடுப்பதோடு காங்கிரஸ் நிறுத்திக்கொள்ளும். இருந்தாலும், இந்த முறை FIR அளவுக்கு போயிருப்பது, பாஜகவை டென்ஷனாகியிருக்கிறது.


Click it and Unblock the Notifications
