திடீரென இடிந்து விழுந்த 5 மாடி கட்டடம்.. இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்க சான்ஸ்.. டெல்லி சோகம்
டெல்லி: டெல்லியில் சற்று நேரத்துக்கு முன்பு 5 மாடி கட்டடம் திடீரென்று இடிந்து விழுந்தது. கட்டட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்கலாம் என்பதால் போலீசார், தீயணைப்பு வீரர்கள் உள்பட மீட்பு படையினர் மீட்பு பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

டெல்லியின் தெற்கு பகுதியில் மெஹ்ராலி என்ற இடம் உள்ளது. இங்குள்ள சயீதுலாஜாப் பகுதியில் சற்று நேரத்துக்கு முன்பாக 5 மாடிகள் கொண்ட அடுக்குமாடி கட்டடம் பயங்கர சத்தத்துடன் திடீரென்று இடிந்து விழுந்தது. கட்டடம் இடிந்து விழுந்தவுடன் அதில் இருந்து கிளம்பிய தூசி அந்த பகுதி முழுவதும் பரவி புகை மண்டலமாக மாற்றியது.
இதுபற்றி தகவல் அறிந்தவுடன் போலீசார், தீயணைப்பு வீரர்கள், அவசரகால மீட்பு குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணியை தொடங்கினர். பொதுமக்கள் யாரும் மீட்பு பணி நடக்கும் இடத்துக்கு வருவதை தடுக்கும் வகையில் சுற்றிலும் தடுப்புகள் வைக்கப்பட்டது. மீட்பு பணியில் தற்போது வரை 4 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இன்னும் சிலர் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதனால் தொடர்ந்து கட்டட இடிபாடுகளை அப்புறப்படுத்தி பொதுமக்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இடிந்து விழுந்த கட்டடத்துக்குள் எத்தனை பேர் இருந்தனர்? என்பது பற்றி இன்னும் அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. இதனால் எவ்வளவு பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர் என்பது உறுதியாக தெரியவில்லை. அதேபோல் கட்டடம் இடிந்ததற்கான காரணம் பற்றியும் தெரியவில்லை. இதுபற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications
