நேபாள ஆற்றில் அசுரத்தனமான வெள்ளம்.. இந்தியாவுக்கும் ஆபத்தா? உ.பி, பீகாரில் ஹை அலர்ட்!
டெல்லி: நேபாளத்தின் கோஷி ஆற்றில் ஏற்பட்ட பெருவெள்ளம் கண்டக் ஆற்றில் கலந்து பாதிப்பை ஏற்படுத்தப்படும் என்று அச்சம் ஏற்பட்டுள்ளதால், பீகார் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் நிலமை உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இரு மாநிலங்களுக்கும் தேசிய பேரிடர் மீட்பு படை விரைந்துள்ளது.
நேபாளத்தின் வடக்கு ரசுவா மாவட்டத்தில் கோஷி ஆற்றில் பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திடீரென சீனா - நேபாள எல்லைப் பகுதியில் திபெத் பக்கத்தில் உள்ள இமயமலைப் பிராந்தியத்தில் உற்பத்தியாகும் இந்த ஆற்றில் ஏற்பட்ட பயங்கர வெள்ளம் ஆற்றங்கரையோரம் உள்ள கட்டிடங்கள், பாலங்களை துவம்சம் செய்தது.

2 மணி நேரத்தில் பீகாரை அடையும்
இந்த ஆறு போட்டே கோசி ஆற்றில் உருவாகி கண்டக் ஆறு வரை பல்வேறு கிளைகளாக பிரிந்து வருகிறது. கோசி, கண்டக் ஆறுகள் நேபாளம் மட்டுமின்றி இந்தியாவிலும் ஓடுகின்றன. இதனால், நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கு, இந்தியாவின் பீகார், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
காட்டாற்று பெருவெள்ளம் ஆற்றின் கீழ்பகுதியை நோக்கி பாய்ந்து வருவதால் இன்னும் 2 மணி நேரத்தில் பீகாரை தாக்கும் என அச்சம் ஏற்பட்டுள்ளது. பீகாரின் வால்மிகி நகரை இன்னும் சற்றேறக்குறைய 3 மணி நேரத்தில் தாக்கும் என கணிக்கப்பட்டுள்ளதால், அதிகாரிகள் உஷார் நிலை பிறப்பித்துள்ளனர். உத்தர பிரதேசம், பீகாருக்கு தேசிய பேரிடர் மீட்பு படையும் விரைந்துள்ளது.
மக்கள் செல்ல வேண்டாம்
பீகார் முதல்வர் சம்ராத் சவுத்ரியிடம் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்ய தயாராக இருப்பதாக உறுதி அளித்துள்ளார். பீகார் அரசும் வெள்ள சூழலை கண்காணிக்க உயர்மட்ட அளவிலான குழுவை அமைத்துள்ளது. தலைமை செயலாளர் மற்றும் டிஜிபி உள்ளிட்டோரும் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும், தேவைப்பட்டால், நானே அங்கு செல்வேன் என்று பீகார் முதல்வர் கூறியுள்ளார்.
நதிக்கரையோரம் தேவையில்லாமல் மக்கள் செல்ல வேண்டாம் என்றும் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை கவனமாக பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்கள் பீதி அடைய வேண்டிய அவசியம் இல்லை. எனினும், கவனமாக இருந்தால் போதும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் மகாராஜ்கஞ்ச் மற்றும் குஷிநகர் மாவட்டங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.கண்டக் மற்றும் நாராயணி நதிகளில் நீர் மட்டம் உயர்ந்து வருவதால் ஹை அலர்ட்டில் உபி அரசும் உள்ளது.
பாதிப்பு ஏற்படுமா?
நேபாளத்தில் நாராயணி ஆறு என்று அறியப்படும் கண்டக் ஆறு, நேபாளத்தில் இருந்து இந்தியாவுக்குள் வருகிறது. இந்த ஆறு பீகார் மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாய்கிறது. இந்த ஆற்றில் நேபாளத்தில் ஏற்படும் இயற்கை பேரிடர் காலங்களில் நீர் மட்டம் அதிகரிப்பது வழக்கம். தற்போது பெருவெள்ளம் ஏற்பட்டு இருப்பதால், ஆறுகளின் நீர்மட்டம் உயர்வதோடு வெள்ளமும் ஏற்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
