“இந்தி பாட்டு பாடுவார்.. ஆனா” நிர்மலா சீதாராமன் கிண்டல்.. கூலாக எழுந்து பதிலடி கொடுத்த திருச்சி சிவா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடாளுமன்ற ராஜ்யசபாவில், "திருச்சி சிவா அழகாக இந்தி பாடல்கள் பாடுவார்.. ஆனால் இந்தி தெரியாதது போல் பேசுகிறார்" என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசிய நிலையில், அவருக்கு உடனடியாக பதிலடி கொடுத்தார் திமுக எம்.பி திருச்சி சிவா.

வக்ஃப் சட்டத்திருத்த மசோதா எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் நிறைவேறியது. மாநிலங்களவையில் வக்ஃப் சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு அதன் மீது நேற்று (ஏப்ரல் 3) விவாதம் நடைபெற்றது. வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மாநிலங்களவையில் உள்ள திமுக உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து வந்திருந்தனர்.

FM Nirmala Sitharaman Slams Tiruchi Siva Over Hindi DMK MP Responds Lightheartedly

திருச்சி சிவா பேச்சு

வக்ஃப் சட்டத்திருத்தம் குறித்த விவாதத்தில் திமுக ராஜ்யசபா எம்.பி திருச்சி சிவா பேசுகையில், "பாஜகவின் மோசமான அணுகுமுறையால் இப்போது இஸ்லாமியர்கள் பாதிக்கப்படுகின்றனர். பொது சிவில் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டால் கிறிஸ்தவர்கள், பார்சிக்கள் உள்ளிட்டோரும் பாதிக்கப்படுவர். நிர்மலா சீதாராமனுக்கு விருப்பமான திருக்குறள் ஒன்றைச் சொல்கிறேன்.

அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை

என திருக்குறள் கூறுகிறது. அதன்படி சிறுபான்மையினரின் கண்ணீர் இந்த அரசின் அணுகுமுறையால் அவர்களின் கண்ணீர் ரத்தமாக மாறி உங்கள் அரசை அகற்றும்" என்று திருச்சி சிவா ஆவேசமாகப் பேசினார்.

சப்கா சாத், சப்கா விகாஸ்

மேலும் திருச்சி சிவா பேசுகையில், "பாஜகவிடம் பெரும்பான்மை இருக்கும் நிலையில் அவர்கள் மக்களுக்கு நல்லது செய்யவில்லை. அவர்கள் அனைவரையும் சமமாகக் கருதுவதில்லை. "சப்கா சாத், சப்கா விகாஸ்" என்ற உங்கள் மேற்கோள் நடைமுறையில் இல்லை. குறிப்பாக இதுபோன்ற திருத்தங்கள் ஒரு பிரிவை மட்டுமே பாதிக்கும் போது நீங்கள் பாகுபாடு காட்டுகிறீர்கள்." என்று விமர்சித்தார்.

திருச்சி சிவா பேசும்போது பாஜகவினரின் முழக்கமான"சப்கா சாத் சப்கா விகாஸ்" என்பதை சொல்லும்போது திணறினார். தமிழ்நாடு அரசும், திமுகவும் மத்திய அரசின் இந்தி திணிப்பு முயற்சிகளை எதிர்த்து வரும் சூழலில் திருச்சி சிவா, பாஜகவின் இந்தி வாசக முழக்கத்தை சொல்லத் திணறியது ராஜ்யசபாவில் கவனம் பெற்றது.

நிர்மலா சீதாராமன் கிண்டல்

இதனையடுத்து, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் எழுந்து, "திருச்சி சிவா நன்றாக இந்தி பாடல்கள் பாடக்கூடியவர் என்பது இங்கு இருக்கும் அனைத்து எம்பிக்களுக்கும் தெரியும். நீங்கள் இந்தி பாடல்களைப் பாடுவீர்கள்.. ஆனால் ' சப்கா சாத் சப்கா விகாஸ் ' என்று சொல்ல முடியாதா?" என்று அவர் கேலி செய்தார்.

நிர்மலா சீதாராமனின் இந்தப் பேச்சால் அவையில் சிரிப்பலை எழுந்தது. இதையடுத்து எழுந்த திமுக எம்.பி திருச்சி சிவா, இந்தி திரை இசையின் மீதான தனது அபிமானத்தை ஒப்புக்கொண்டார். திருச்சி சிவா பேசுகையில் "நான் இந்தி பாடல் வரிகளை ஆங்கிலத்தில் படித்துவிட்டுப் பாடுகிறேன். சில சமயங்களில் அவற்றின் அர்த்தத்தைக் கூட கேட்கிறேன்" என்றார்.

திருச்சி சிவா ரிப்ளை

மேலும், முகமது ரஃபியின் கிளாசிக் ' பஹரோன் பூல் பர்சாவ் ' பாடலைப் பற்றிக் குறிப்பிட்ட திருச்சி சிவா, நான் 'பஹாரோன் பூல் பர்சாவ்' பாடலைப் பாடியபோது, ​​அதன் அர்த்தத்தை பாகேல் என்னிடம் கேட்டார், எனக்குத் தெரியாது என்று சொன்னேன். இப்பய்டி பல பாடல்களுக்கு அவர் அர்த்தம் கூறியுள்ளார் என்றார்.

மேலும், "எனது இசைத் தேர்வுகள் அரசியல்மயமாக்கப்பட்டால், எனது பாடல் பட்டியலை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும்" என்று கிண்டலாக கூறினார். அதோடு "திமுகவின் நிலைப்பாடு இந்தி அல்லது இந்தி பேசும் மக்களுக்கு எதிரானது அல்ல, எனவே தயவுசெய்து இதை அரசியல் ஆக்காதீர்கள்" எனக் கூறினார். நிர்மலா சீதாராமனுக்கு திருச்சி சிவா அளித்த பதிலால் திமுக உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் மேஜையைத் தட்டினர்.

காது இருக்கிறது ஆனால் கேட்காது

முன்னதாக வக்ஃப் சட்டத்திருத்தம் குறித்த விவாதத்தில் பேசிய திருச்சி சிவா, "இந்த சட்ட மசோதாவை எதிர்க்கிறேன். தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்த சட்டத்திருத்தம் முழுமையாக திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே, இந்த சட்டத்திருத்தத்தை நாங்கள் முழுமையாக புறக்கணிக்கின்றோம்.

இது சட்டப்படி குறைபாடுடையது, தார்மீக ரீதியாக கண்டிக்கத்தக்கது. ஏன் இந்த ஆட்சியில் குறிப்பிட்ட சமூகம் மீது குறி வைக்கப்படுகிறது என்பது கேள்வியாக இருக்கிறது. இந்த அரசுக்கு காது இருக்கிறது. எதிர்கட்சிகளின் கருத்துகளை அது கேட்பதில்லை. கண்கள் இருக்கிறது. ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் மீது அதன் பார்வை படாது. வாய் இருக்கிறது. அது அவதூறுகளை மட்டுமே பரப்பும். கைகள் இருக்கிறது. அது தன் அதிகாரத்தை கொண்டு பாதிக்கப்பட்டவர்களை ஒடுக்க மட்டுமே செய்கிறது" எனப் பேசினார் திருச்சி சிவா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+