காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் தமிழக முன்னாள் டிஜிபி கருணாசாகர்.. தேர்தல் நேரத்தில் திடீர் முடிவு!
டெல்லி: தமிழக முன்னாள் டி.ஜி.பி கருணாசாகர், இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். லோக்சபா தேர்தல் நேரத்தில் கருணாசாகர், ஆர்ஜேடி கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் கருணாசாகர். 1991ஆம் ஆண்டு ஐ.பி.எஸ் கேடர் அதிகாரியான கருணாசாகர் தமிழ்நாட்டின் கும்பகோணம் ஏஎஸ்பி ஆகத் தனது பணியைத் தொடங்கினார்.

யார் இந்த கருணாசாகர்?: கலப்பட சாராயம் குடித்துப் பலர் பலியான நிலையில், கருணாசாகர் திறம்பட தீவிர சோதனை நடத்தி டன் கணக்கில் சாராயம் பறிமுதல் செய்து பாராட்டைப் பெற்றார். ஜாதி பிரச்சனை உச்சத்தில் இருந்த திண்டுக்கல், உசிலம்பட்டி பகுதிகளில் சிறப்பாகச் செயல்பட்டு சட்டம் ஒழுங்கை கருணாசாகர் பாதுகாத்தவர் கருணாசாகர்.
கருணாசாகர் டிஐஜி ஆக பணியாற்றிய போது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் வளர்ப்பு மகள் சுதாவின் கணவர் விஜயன் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட போது விரைந்து குற்றவாளிகளைக் கண்டுபிடித்து அவர்களுக்குத் தண்டனையை வாங்கி கொடுத்தவர் கருணா சாகர்.

அரசியலில் குதித்த கருணாசாகர்: சென்னை போக்குவரத்து துணை ஆணையராகப் பணியாற்றியபோது விபத்துகளை குறைக்க பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்தார். தமிழக காவலர் நலன் பிரிவு டி.ஜி.பி.யாக பணியாற்றி ஒய்வு பெற்றார். அதைத்தொடட்ந்து கடந்த ஆண்டு, லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியில் தேஜஸ்வி யாதவ் முன்னிலையில் இணைந்தார் கருணா சாகர்.
ஆர்.ஜே.டி கட்சியின் செய்தி தொடர்பாக செயல்பட்டு வந்தார் கருணாசாகர். இந்நிலையில் இன்று ஆர்ஜேடி கட்சியிலிருந்து விலகி பீகார் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் மோகன் பிரகாஷ் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார் கருணா சாகர்.

காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்: லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் - ஆர்.ஜே.டி இரு கட்சிகளும் இணைந்து போட்டியிடும் நிலையில் கருணா சாகர் ஆர்ஜேடி கட்சியுடனான உறவை முறித்துக்கொண்டு காங்கிரசில் இணைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருணாசாகர், ஜெகனாபாத் தொகுதியில் போட்டியிட சீட் கேட்டு வந்ததாக கூறப்படுகிறது. லோக்சபா டிக்கெட் கிடைக்காததால் அவர் ஆர்ஜேடியில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று டெல்லியில் தனது மனைவி அஞ்சுவுடன் காங்கிரஸில் இணைந்தார்.
மிக முக்கியமான நாள்: காங்கிரஸ் கட்சியில் இணைந்த பிறகு பேசிய கருணா சாகர், காங்கிரஸ் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, பீகார் காங்கிரஸ் பொறுப்பாளர் மோகன் பிரகாஷ் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார். காங்கிரஸ் உறுப்பினர் பதவியை ஏற்று பேசிய அவர், இன்று காங்கிரஸ் நடத்தும் போரில் என்னை அணில் போல் பார்க்கிறேன் என்றார்.
மேலும் பேசிய அவர், "இன்று காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராகச் சேர்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இன்று என் வாழ்வின் மிகப்பெரிய நாள். அதிகாரத்துவத்தில் இருந்து வரும், என்னைப் போன்ற மற்ற நிர்வாக அதிகாரிகள் தற்போதைய காலகட்டத்தில் எப்படி உணர்கிறார்கள் என்பதை நான் அறிவேன்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications