நாக்பூர் கலவர குற்றவாளி என குறி! புல்டோசர் பாலிடிக்ஸ் டூ கவுன்சிலர்! ஜெயித்து காட்டிய இஸ்லாமியர்
டெல்லி: ஔரங்கசீப் கல்லறையை அப்புறப்படுத்த வேண்டும் என்று கடந்த ஆண்டு நாக்பூரில் வெடித்த கலவரத்தில், ஃபஹிம் ஷமீம் கான் என்பவர் குற்றம்சாட்டப்பட்டார். அவரது வீடும் இடித்து தள்ளப்பட்டது. ஆனால் தற்போது அவரது மனைவி இதே நாக்பூர் மாநகராட்சியின் கவுன்சிலராக வெற்றி பெற்றிருக்கிறார். கலவரம், சிறைவாசம், வீட்டை இழந்தது இந்த பிரச்சனைகளை எதிர்கொண்டு தற்போது ஃபஹிம் ஷமீம் கான் வெற்றி பெற்றிருக்கிறார்.
முகலாய பேரரசர் ஔரங்கசீப் கல்லறையை அப்புறப்படுத்த வேண்டும் என்று கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாக்பூரில் விஷ்வ இந்து பர்ஷித் மற்றும் பஜ்ரங்தள் உள்ளிட்ட இந்து அமைப்புகள் போராட்டத்தை நடத்தின. இந்த போராட்டத்தில் இஸ்லாமியர்களின் புனித நூல் எரிக்கப்பட்டதாக வதந்தி பரவியது. இதனையடுத்து, நாக்பூரின் மஹால் எனும் பகுதியில் இரு தரப்பினரிடையே மோதல் வெடித்தது.

நாக்பூர் கலவரம்
இந்த கலவரத்தில் ஒருவர் கொல்லப்பட்டார். 33 போலீசார் உட்பட மொத்தம் 38 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியது காவல்துறை. முதல் குற்றவாளியாக ஃபஹிம் ஷமீம் கான் என்பவரை கைது செய்தது. சிறையில் அடைக்கப்பட்ட அவர் 4 மாதங்களுக்கு பிறகு ஜாமீன் பெற்று வெளியே வந்தார். ஆனால், அவர் வெளியே வருவதற்கு முன்னர் எல்லாம் தலைகீழாய் மாறி போய் இருந்தது.
வீட்டை இழந்த கான்
வன்முறை கூட்டத்தைத் தூண்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டதன் பேரில் உடனடியாக, நாக்பூரிலுள்ள அவரது வீடு இடித்துத் தள்ளப்பட்டது. இந்த வீடு, கானின் 65 வயது தாயான மெஹருனிசா கான் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது. மாநகராட்சி அதிகாரிகள், வீட்டின் சில பகுதிகள் அங்கீகரிக்கப்படாதவை என்றும், கானின் குடும்பத்திற்குச் சொந்தமான நிலத்தின் குத்தகை காலம் முடிவடைந்துவிட்டதாகவும் கூறி இடிப்பை நியாயப்படுத்தினர்.
புல்டோசர் அரசியல்
ஆனால், அதிகாலையில் வந்த புல்டோசர்கள், அங்கீகரிக்கப்படாத பகுதிகளை மட்டுமல்லாமல், முழு வீட்டையும் இடித்துவிட்டது. இந்த இடிப்பு நடவடிக்கையை சில மணி நேரங்களிலேயே உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. முதற்கட்ட விசாரணையில், உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்த கட்டாய 15 நாள் அறிவிப்புக் காலம் உட்பட உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
மாநகராட்சி ஆணையர் அபிஜித் சௌதரி நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து நகராட்சி அதிகாரிகளுக்குத் தெரியாது என்று அவர் வாதிட்டார். கானைத் தவிர, கலவரத்தில் பெயர் குறிப்பிடப்பட்ட உறவினர்களைக் கொண்ட மேலும் இரண்டு குடும்பங்களுக்கும் மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது.
கான் மீதான குற்றச்சாட்டுகள்
தன் மீதான கலவரக் குற்றச்சாட்டுகளை மறுத்த கான், கலவரம் வெடித்தபோது தான் மஹால் பகுதியில் இல்லை என்றும், தனது மொபைல் இருப்பிடத் தரவுகள் இதை உறுதிப்படுத்துவதாகவும் கூறுகிறார். இந்த வழக்கு குறித்து அவரது வழக்கறிஞர் கூறுகையில், "எங்களிடம் ஆதாரங்கள் உள்ளன, எஃப்ஐஆர்ஐ ரத்து செய்ய நீதிமன்றத்தைக் கேட்டுள்ளோம். நியாயமான விசாரணைக்கு ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைக்கவும் கோரியுள்ளோம்" என்று கூறியுள்ளார்.
வழக்கு ரத்து?
இந்த வழக்கில் தாமதம் ஏற்பட்டதை அரசு வழக்கறிஞர் நிதின் டெல்கோடே, தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸுக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார். குற்றப்பத்திரிகை இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை. நாங்கள் செயல்முறையை விரைவுபடுத்த முயற்சித்து வருகிறோம், ஆனால் இதற்கு சிறிது காலமாகும் என்று அவர் தெரிவித்தார். எனவே இந்த வழக்கிலிருந்து கான் விடுவிக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது.
அரசியல் அதிகாரம்
இந்த நெருக்கடிகளுக்கு மத்தியில்தான் ஜனவரியில் நாக்பூர் மாநகராட்சிக்கு தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் கானின் மனைவி அலிஷா பெற்ற வெற்றி பெற்றிருக்கிறார். AIMIM கட்சி சார்பில் பிரபாக் 3 வார்டில் கவுன்சிலராக போட்டியிட்ட அவர் பெற்றி பெற்றிருக்கிறார். தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய அலிஷா, "எங்கள் குடும்பத்திற்குச் செய்யப்பட்ட அநீதியே இந்தத் தேர்தலில் போட்டியிட காரணம். அநீதிக்கு எதிராகக் குரல் எழுப்ப அரசியல் அதிகாரம் அவசியம்" என்று கூறியிருக்கிறார். பல சமூகத்தினரும் அலிஷாவை ஆதரித்துள்ளனர்.
ஒரு கலவரம், அதைதொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்கை, புல்டோசர் அரசியலால் வீடு இடிப்பு என பல துயரங்களை சந்தித்த கான், இறுதியில் நீதிமன்றம் சென்று வெற்றி பெற்றிருக்கிறார்.












Click it and Unblock the Notifications