கெஜ்ரிவால் போல இருமி கிண்டலடித்த விஷமிகள்.. கடுமையாக கண்டித்த கத்காரி!
Recommended Video

டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்ட அரசு நிகழ்ச்சியின்போது சில விஷமிகள் தேவையில்லாமல் கெஜ்ரிவால் இருமுவதைப் போல செய்து கிண்டலடித்தனர். இதைப் பார்த்த மத்திய அமைச்சர் நிதின் கத்காரி அவர்களை கடுமையாக கண்டித்தார்.
கெஜ்ரிவாலுக்கு சுவாசப் பிரச்சினை உள்ளது. எனவே கடும் குளிர் காலங்களில் அவருக்கு சுவாச சிரமங்கள் ஏற்படும். இதற்காக அவர் பெங்களூர் வந்து கூட கடந்த 2016ம் ஆண்டு சிகிச்சை எடுத்துக் கொண்டார். இந்த நிலையில் அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையில் சில முட்டாள்கள் நேற்று நடந்து கொண்டனர்.
டெல்லி விஞ்ஞான் பவனில் நேற்று அரசு விவா ஒன்று நடந்தது. தூய்மை கங்கா திட்டத்தின் கீழ் நடந்த இந்தக் கூட்டத்தில் கெஜ்ரிவால், மத்திய அமைச்சர்கள் கத்காரி, சுற்றுச்சூழல்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விஷமிகள்
கெஜ்ரிவால் பேசிக் கொண்டிருந்தபோது பார்வையாளர் வரிசையில் இருந்த சிலர் திடீரென இறுமத் தொடங்கினர். அதுவும் கெஜ்ரிவால் இறுமுவதைப் போல இறுமியதால் பரபரப்பும் சலசலப்பும் ஏற்பட்டது.

கோரிக்கை வைத்த கெஜ்ரிவால்
அவர்களைப் பார்த்த கெஜ்ரிவால் பேச்சை நிறுத்தி விட்டு சற்று அமைதியாக இருக்க முடியுமா என்று கேட்டுக் கொண்டு மீண்டும் பேச்சைத் தொடர்ந்தார். ஆனால் அந்த விஷமிகள் மீண்டும் கிண்டலாக இறுமினர்.

கத்கரி கடும் கோபம்
இப்போது மத்திய அமைச்சர் கத்காரிக்கு கடும் கோபம் வந்து விட்டது. சத்தமாக, வாயை மூடிக் கொண்டு இருக்க மாட்டீர்களா. இது அரசு விழா என்று கோபமாக கூறினார். இதையடுத்து விஷமிகள் அமைதியானார்கள்.

அநாகரீகம்
ஒருவரது உடல் நிலையைக் கிண்டலடிக்கும் அளவுக்கு ஒருவரது மன நிலை போய் விட்டது என்றால் அதை என்னவென்று சொல்வது. இதுபோன்ற விஷமிகளுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்று அங்கிருந்த ஆம் ஆத்மி கட்சியினர் குமுறலுடன் கூறினர்.

தொடரும் அவமரியாதை
டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலைக் குறி வைத்து தொடர்ந்து அவமரியாதைகள் தொடர்கதையாகி வருவது கவலை தருவதாக உள்ளது. ஆனால் எதையும் அவர் சட்டை செய்வதில்லை. அவர் பாட்டுக்கு போய்க் கொண்டே இருக்கிறார். இதுவே எதிரிகள் டென்ஷனாக பாதி காரணம் என்று சொல்லலாம். ஆனால் உடல் நிலையை கிண்டலடித்து கேலி செய்வது என்பது கடும் கண்டனத்துக்குரியது என்பதில் சந்தேகமே இல்லை.












Click it and Unblock the Notifications