ஆசியாவின் நம்பர் 1 பணக்காரர் ஆன கவுதம் அதானி! முகேஷ் அம்பானியை முந்தி முதலிடம்! சொத்து மதிப்பு என்ன?
டெல்லி: இந்திய தொழிலதிபர் கவுதம் அதானி ஆசியாவின் மிகப்பெரும் பணக்காரர் ஆகியுள்ளார். இதுவரை அந்த இடத்தில் இருந்த முகேஷ் அம்பானியைப் பின்னுக்குத் தள்ளி இந்த பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார் அதானி. சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில் இந்த மாற்றம் நிகழ்ந்தது.
அதானி குழுமப் பங்குகள் வளர்ச்சி அடைந்ததால் அவரது சொத்து மதிப்பும் எகிறியுள்ளது. ப்ளூம்பெர்க் இதனைத் தெரிவித்துள்ளது. கவுதம் அதானியின் நிகர மதிப்பு 92.6 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் ₹7,68,580 கோடி. அவர் உலக அளவில் 19வது பணக்காரர். ஆசியாவில் அவர் முதலிடத்தைப் பெற்றார்.

ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரர்
வணிகம், உள்கட்டமைப்பு முதல் எரிசக்தி வரை பல்வேறு தொழில்களில் அதானி குழுமம் ஈடுபட்டு வருகிறது. நடப்பு ஆண்டில் அதானியின் சொத்து மதிப்பு 8.1 பில்லியன் டாலர்கள் அதிகரித்துள்ளது. சுமார் ₹67,230 கோடி கூடியுள்ளதால், முகேஷ் அம்பானியை முந்தி முதலிடம் பிடித்துள்ளார். ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரர் ஆகியுள்ளார் கவுதம் அதானி.
முகேஷ் அம்பானி 90.8 பில்லியன் டாலர்களுடன் 2-வது இடத்தில் உள்ளார். இந்திய மதிப்பில் பார்த்தால் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ₹7,53,640 கோடியாகும். உலக அளவில் 20வது இடத்தில் முகேஷ் அம்பானி இருக்கிறார். அதானிக்கும் அம்பானிக்கும் இடையே சிறிய இடைவெளியே உள்ளது. அம்பானியின் சொத்து மதிப்பு 16.9 பில்லியன் அமெரிக்க டாலர்களாக குறைந்தது.
சுமார் ₹1,40,270 கோடி இந்த ஆண்டில் சரிந்துள்ளது. ரிலையன்ஸ் பங்குகள் ஏற்ற இறக்கங்களாக இருந்ததே இதற்கு காரணமாகும். ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தைப் பொறுத்தவரை தொலைத்தொடர்பு, சில்லறை வர்த்தகம், எரிசக்தி என பல்வேறு தொழில்களில் கோலோச்சுகிறது. இந்தியாவின் மிகப்பெரிய தனியார் நிறுவனமாக ரிலையன்ஸ் திகழ்கிறது.
அர்னால்டின் சொத்து மதிப்பும் குறைந்தது
பெரும் பணக்காரர்கள் பட்டியலில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் உலகப் பணக்காரர்களின் சொத்து மதிப்பில் நிகழும் ஏற்ற இறக்கத்தின் ஒரு பகுதியே ஆகும். சமீபத்திய வர்த்தக நாளில் சென்செக்ஸ் 123 புள்ளிகள் சரிந்தன. அதானி குழுமப் பங்குகள் பலவும் லாபமடைந்தன. அதானியின் சொத்து ஒரே நாளில் 3.56 பில்லியன் டாலர் உயர்ந்தது. இது சுமார் ₹29,550 கோடியாகும்.
அதே நேரத்தில், ரிலையன்ஸ் பங்குகள் பெரிய மாற்றம் காணவில்லை. அம்பானியின் சொத்து மதிப்பு 76.7 மில்லியன் டாலர்கள் மட்டுமே அதிகரித்தது. சுமார் ₹636 கோடி மட்டுமே அவருக்கு லாபம் கிடைத்தது. LVMH தலைவர் பெர்னார்ட் அர்னால்டும் சொத்து மதிப்பு குறைவை எதிர்கொண்டார். அர்னால்டின் சொத்து மதிப்பு சுமார் 44 பில்லியன் டாலர்கள் குறைந்தது.
சவால்களை எதிர்கொள்ளும் உலக பொருளாதாரம்
ஸ்டீவ் பால்மர், லாரி எலிசன், பில் கேட்ஸ், வாரன் பஃபெட் ஆகியோரும் இப்பட்டியலில் உள்ளனர். ஜாராவின் நிறுவனர் அமான்சியோ ஓர்டேகாவும் இழப்பை சந்தித்தார். பெரும் பணக்காரர்களுக்கு ஏற்பட்ட இந்த இழப்புகள் உலகச் சந்தைகளில் நிலவும் சவாலான சூழலை காட்டும் விதமாக உள்ளது.
தற்போதைய பொருளாதார சூழலை பிரதிபலிப்பதாக இது உள்ளது. இந்த தரவரிசை மாற்றங்கள் சந்தையின் நிலையற்ற தன்மையைக் காட்டுகின்றன. முதலீடுகளில் நிச்சயமற்ற தன்மையும் தெளிவாகத் தெரிகிறது. உலகப் பொருளாதாரம் தொடர்ந்து சவால்களை எதிர்கொள்கிறது.












Click it and Unblock the Notifications