பாஜகவில் இருந்து விலகும் கவுதம் கம்பீர்.. நட்டாவுக்கு வைத்த கோரிக்கை! ஆஹா.. அடுத்து என்னவாம்?
டெல்லி: பாஜகவுக்கு முழுக்கு போட முடிவெடுத்துள்ளார் முன்னாள் கிரிக்கெட் வீரர் கம்பீர். பாஜக சார்பில் எம்.பி ஆன கவுதம் கம்பீர், அரசியல் பொறுப்புகளில் இருந்து தன்னை விடுவிக்குமாறு பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவை கேட்டுக்கொண்டுள்ளார்.
முன்னாள் கிரிக்கெட் வீரரான கவுதம் கம்பீர் தற்போது டெல்லி கிழக்கு தொகுதி மக்களவை உறுப்பினருமாக இருக்கிறார். நாடு முழுவதும் விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வரும் தேர்தலில் கவுதம் கம்பீர் மீண்டும் போட்டியிடுவாரா இல்லையா என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில், அரசியலில் இருந்தே விலகும் முடிவை எடுத்துள்ளார் கவுதம் கம்பீர். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், கிரிக்கெட் தொடர்பான பொறுப்புகளில் கவனம் செலுத்த உள்ளதால் அரசியல் பணியில் இருந்து தன்னை விடுவிக்குமாறு பா.ஜ.க தலைவர் நட்டாவை கேட்டுக் கொள்கிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மக்களுக்கு சேவை ஆற்ற வாய்ப்பு அளித்த பிரதமர் மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கும் மனமார்ந்த நன்றி! ஜெய்ஹிந்த் என்றும் கவுதம் கம்பீர் பதிவிட்டுள்ளார். இதன்மூலம் அரசியலில் இருந்து கவுதம் கம்பீர் விலகும் முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
கவுதம் கம்பீர், கடந்த மார்ச் 2019 இல் பாஜகவில் சேர்ந்தார். அதன் பின்னர் டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய முகமாக மாறிவிட்டார். அவர் 2019 மக்களவைத் தேர்தலில் கிழக்கு டெல்லி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு 6,95,109 வாக்குகள் பெற்று, சுமார் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார்.
வரவிருக்கும் 2024 லோக்சபா தேர்தலில் கவுதம் கம்பீருக்கு மீண்டும் சீட் கிடைக்காது என்ற பேச்சுகள் நிலவி வந்தன. விரைவில் பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட உள்ளது. இந்த பரபரப்புகளுக்கு மத்தியில் அரசியலில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளார் கம்பீர்.
2007 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவின் வெற்றிகளில் முக்கிய பங்கு வகித்தவர் கவுதம் கம்பீர். குறிப்பாக, 2011 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் கவுதம் கம்பீர் அடித்த 97 ரன்கள், இந்தியாவை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலும் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார் கம்பீர். கம்பீரின் தலைமையின் கீழ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இரு முறை சாம்பியன் கோப்பை வென்றது. கம்பீர் தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியின் வழிகாட்டியாக உள்ளார்.
விரைவில் லோக்சபா தேர்தல் மற்றும், ஐபிஎஸ் கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ள நிலையில் கவுதம் கம்பீர் அரசியலில் இருந்து விலகி, கிரிக்கெட்டில் கவனம் செலுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications