ஜெம் வீரமணி வழக்கில்.. போலீஸ் அதிரடி ஆக்ஷன்! 5 பேருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
சென்னை: சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வழக்கின் ஜெம் வீரமணியுடன் தொடர்புடைய 5 பேருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருப்பதாக போலீஸ் தெரிவித்திருக்கிறது.
இது குறித்து விடுக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, "சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வழக்கின் எதிரி வீரமணி மீது மேலும் ஒரு சிறுமி கொடுத்த புகார் மீது வழக்கு பதிவு. வீரமணி, சாந்தி, மகேந்திர சிம்ஹன் மற்றும் எதிரி கணேசனுக்கு போலீஸ் காவல்.

சென்னை பெருநகர காவல்துறையின் விபச்சார தடுப்பு பிரிவில் சிறுமிகளிடம் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பிரபல கிரானைட் தொழிலதிபர் வீரமணி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த சாந்தி, மகேந்திரசிம்ஹன் ஆகியோர் கடந்த 29.08.2026 அன்று கைது செய்யப்பட்டனர். மேலும் இது தொடர்பான மற்றொரு வீடியோவை வைத்திருந்தும் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காத கணேசன் என்பவர் 22.09.2026 அன்று கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
வீரமணியின் பாலியல் வன்கொடுமை குற்றத்திற்கு சிறுமிகளை அழைத்து வந்து உடந்தையாக இருந்த ஓட்டுநர்கள் லாசர், பார்த்திபன் மற்றும் பாபு ஆகியோர்கள் 05.10.2026 அன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். வீரமணிக்கு உதவிய CNS நிறுவனத்தின் Manager சக்திவேல் என்பவர் 18.10.2026ம் தேதி கைது செய்யப்பட்டுள்ளார். இதுவரை இவ்வழக்குகளில் 8 எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே ஜெம் வீரமணி மீது 7 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், பாதிக்கப்பட்ட ஒரு சிறுமியின் புகார் மற்றும் வாக்குமூலத்தின் அடிப்படையில் 8 ஆவதாக மேலும் ஒரு வழக்கு 21.10.2026-ஆம் தேதி அன்று பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் குற்ற எண்.14/2026 வழக்கில் எதிரி வீரமணி 21.10.2026ம் தேதியும், மற்றொரு குற்ற எண்.15/2026 வழக்கில் எதிரிகள் வீரமணி மற்றும் லாசர் ஆகியோர் 22.10.2026ம் தேதியும் கைது செய்யப்பட்டனர். எதிரிகள் வீரமணி, சாந்தி, மகேந்திரசிம்ஹன் மற்றும் கணேசன் ஆகியோர் குற்ற எண்.174/2025 வழக்கில் போலீஸ் காவலில்
எடுக்கப்பட்டு உள்ளனர். நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பெரவள்ளூர் காவல் நிலையத்தில் வைத்து இவர்களிடம் சிறப்பு புலனாய்வு குழு கைப்பற்றிய சான்று பொருட்களின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எதிரி ஜெம் வீரமணியின் மகள் அர்ச்சனாவிடம் வீரமணியின் குற்றச் செயல்கள் குறித்தும் சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்பிப்பதற்கு செய்த பணப்பரிமாற்றங்கள் குறித்தும் விசாரணை நடைபெற்றது.
மேலும், வீரமணி மீதான வழக்குகளில் தொடர்புடையவர்களாக சந்தேகிக்கப்படும் 5 நபர்கள் வெளிநாட்டிற்கு தப்பி செல்லாமல் இருக்க Look Out Circular (LOC) Notice வழங்கப்பட்டுள்ளது. இதுவரை பாதிக்கப்பட்ட 12 சிறுமிகள் குறித்த புகார்களின் பேரில் வீரமணி மற்றும் பிற எதிரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜெம் வீரமணி மீதான வழக்கில் புலன் விசாரணை முடிக்கப்பட்டு, விரைவில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும்" என தெரிவிக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
