Gen Zஐ மிஞ்சும் Gen Alpha.. பள்ளிக்காக போராடும் குட்டீஸ்.. நாடு முழுக்க என்ன தான் நடக்கிறது?
டெல்லி: நமது நாட்டில் போராட்டங்கள் என்பது அரசியல் கட்சிகளில் இருந்து மாறி மாணவர்கள் வசம் வந்துவிட்டது. கடந்த சில காலமாகவே நாடு முழுக்க மாணவர்கள் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக Gen Zஐ விட Gen Alpha போராட்டங்கள் நமது நாட்டின் பள்ளிகளில் உள்ள முக்கியமான பிரச்சினைகளை அம்பலப்படுத்துகிறது.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே போராட்டம் என்பதே மாறி வருகிறது. முன்பெல்லாம் பெரும்பாலான போராட்டங்களை அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் தான் நடத்தும். ஆனால், இப்போது அந்த நிலை மாறியுள்ளது. கடந்த மாதம் தான் நீட் தேர்வு குளறுபடிகளுக்கு எதிராக Gen Z இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். இதற்கு மத்திய அரசும் இறங்கி வந்தது.

மாணவர் போராட்டம்
இப்போது அதன் நீட்சியாக Gen Alpha எனப்படும் பள்ளி மாணவர்களும் கூட போராட்டங்களில் இறங்கியுள்ளனர். ஆசிரியர் வேண்டும், நல்ல கழிப்பறை வேண்டும், விளையாட்டு மைதானம் வேண்டும், பள்ளிக்கு செல்லும் சாலை வேண்டும் என பள்ளி குழந்தைகள் தங்களின் அடிப்படை தேவைகளுக்காக குரல் கொடுத்து வருகின்றனர்.
சமீபத்தில் ஹமீர்பூரில் சுமார் 300 மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் சாலை வசதியை ஏற்படுத்தக் கோரி 6 கி.மீ. தூரம் பேரணியாக சென்று ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். லக்னோவில் சுமார் 250 மாணவிகள் ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜெய்ப்பூரில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் கழிப்பறை மற்றும் பாதுகாப்பற்ற வகுப்பறைகள் குறித்து போராட்டம் நடத்தினர்.
நாடு முழுக்க
இவை தனித்தனி பகுதிகளில் நடக்கும் சிறிய பிரச்சினைகளாக தோன்றினாலும், இந்தியா முழுவதும் பள்ளிகளின் உள்கட்டமைப்பு மற்றும் ஆசிரியர் வசதிகளில் நிலவும் பெரிய ஏற்றத்தாழ்வுகளை இந்த சம்பவங்கள் காட்டுகிறது.
இப்போது இந்தியாவில் மொத்தம் 14,66,682 பள்ளிகள் உள்ளன. இதில் 10,03,051 பள்ளிகள் மாநில அரசுகளாலும், 2,194 பள்ளிகள் மத்திய அரசாலும் நடத்தப்படுகின்றன. மேலும் 3,41,689 தனியார் பள்ளிகளும், 79,261 அரசு உதவி பெறும் பள்ளிகளும் உள்ளன. நாட்டில் சுமார் 24.7 கோடி மாணவர்கள் கல்வி பயிலும் நிலையில், ஆசிரியர்களின் எண்ணிக்கை சுமார் 1 கோடியாக உள்ளது. ஒட்டுமொத்த மாணவர்- ஆசிரியர் விகிதம் 24 ஆக உள்ளது. ஆனால் மாநிலங்களுக்கு இடையேயும், பள்ளிகளுக்கு இடையேயும் நிலைமை ஒரே மாதிரியாக இல்லை.
மாறும் பிரச்சினைகள்
உதாரணமாக,சில மாநிலங்களில் ஆசிரியர் மாணவர் விகிதம் சிறப்பாக இருக்கிறது. அதேநேரம் கர்நாடகாவில் சுமார் 8,042 பள்ளிகள் ஒற்றை ஆசிரியர் பள்ளிகளாக உள்ளது. அதாவது அந்த ஒட்டுமொத்த பள்ளிக்கும் ஒரே ஆசிரியர். அவரே அனைத்து பாடங்களையும் எடுப்பார். கர்நாடகாவில் உள்ள மொத்த பள்ளிகளில் சுமார் 10.8% இதுபோல ஒற்றை ஆசிரியர் பள்ளிகளாக உள்ளன. மேலும், நாடு முழுவதும் 1,00,843 ஒற்றை ஆசிரியர் பள்ளிகளில் 2.9 கோடிக்கும் அதிகமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.
அதே நேரத்தில், 5,663 பள்ளிகளில் மாணவர்கள் ஒருவர் கூட சேரவில்லை என்றாலும் அந்தப் பள்ளிகளில் 20,667 ஆசிரியர்கள் பணியாற்றுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் ஆசிரியர்களை எங்கு, எப்படி பணியமர்த்துவது என்பதும் முக்கியமான கேள்வியாகிறது..
பள்ளிகள்
பள்ளிகளின் டிஜிட்டல் வசதிகளிலும் நிலைமை சமமாக இல்லை. இந்தியாவில் 67.4% பள்ளிகளில் மட்டுமே இணைய வசதி உள்ளது. 63.1% பள்ளிகளில் மட்டுமே கணினிகள் உள்ளன. வெறும் 7.1% பள்ளிகளில் தான் டிஜிட்டல் நூலகங்கள் உள்ளன. இதிலும் மாநிலங்களிடையே மிக பெரிய வேறுபாடு இருக்கிறது. உதாரணமாக கேரளாவில் 92.6% பள்ளிகளில் இணைய வசதி உள்ள நிலையில் மேற்கு வங்கத்தில் 19.7% பள்ளிகளில் மட்டுமே இணைய வசதி இருக்கிறது.
தமிழ்நாட்டில் சுமார் 99% பள்ளிகளில் இணைய வசதி இருந்தாலும், மாநில அரசு பள்ளிகளில் டிஜிட்டல் நூலக வசதி வெறும் 0.8% பள்ளிகளில் தான் உள்ளது. அதாவது இணைய வசதி கிடைத்துவிட்டாலே பள்ளிகளின் டிஜிட்டல் கல்வி உள்கட்டமைப்பு முழுமையாகிவிட்டது என்று கூற முடியாது. அதற்கு தமிழ்நாட்டின் நிலைமை ஒரு நல்ல உதாரணம்!
ஆசிரியர் பற்றாக்குறை
இப்படி இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு பிரச்சினைகள் உள்ளன. ஒரு மாநிலத்தில் ஆசிரியர் பற்றாக்குறை மிக பெரிய பிரச்சினையாக இருக்கிறது. இன்னொரு மாநிலத்தில் இணைய வசதி போதியளவு இல்லை. மற்றொரு பகுதியில் கழிப்பறை அல்லது விளையாட்டு மைதானம் இல்லாமல் இருக்கிறது.
இப்படி ஒவ்வொரு பகுதிக்கும் பிரச்சினை மாறுவதால் அதை கண்டறிந்து சரி செய்வது சிக்கலாக மாறுகிறது. இந்த இடத்தில் தான் Gen Alpha போராட்டங்கள் கவனம் பெறுகிறது. ஆசிரியர் வேண்டும், கழிப்பறை வேண்டும், சாலை வேண்டும் என்று இவர்களின் போராட்டம் சிறியதாக தோன்றினாலும், அவை இந்திய பள்ளி கல்வியின் அடிப்படை உள்கட்டமைப்பில் இருக்கும் பிரச்சினைகளை காட்டுகிறது.
Gen Alpha போராட்டம்
மாணவர்கள் தங்களின் பள்ளிக்காக நேரடியாக போராட தொடங்கியிருப்பது, கல்வி என்பது வெறும் மார்க்கை தாண்டிய ஒன்று என்பதை மீண்டும் உணர்த்துகிறது. அந்த வகையில் பார்த்தால் Gen Z மாணவர்களை தூக்கி சாப்பிடும் அளவுக்கே Gen Alpha போராட்டங்கள் அமைந்துள்ளன.


Click it and Unblock the Notifications
