"GenZ இப்போ எங்க பக்கம்!" டெல்லி பல்கலைக்கழக மாணவர் தேர்தலில் வெற்றி பெற்ற ABVP பெருமிதம்!
டெல்லி: டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்க(DUSU) தேர்தலில் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP) அமைப்பு பெரிய வெற்றியை பதிவு செய்திருக்கிறது.
இந்த வெற்றி GenZ இளைஞர்களின் ஆதரவை உறுதி செய்திருப்பதாகவும், தற்போது இளைஞர்கள் எங்கள் பக்கம்தான் இருக்கிறார்கள் என்றும் ஏபிவிபி தலைவர்கள் கூறியுள்ளனர்.

டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தலில் தலைவர் பதவி உட்பட 4 முக்கிய பொறுப்புகளில் 3ஐ ஏபிவிபி அமைப்பு கைப்பற்றி அமோக வெற்றியை பதிவு செய்திருக்கிறது. இந்த அமைப்பின் யஷ் தாபல் 24,576 வாக்குகள் பெற்று DUSU-வின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட NSUI அமைப்பின் விஜய் மீனாவை வீழ்த்தியுள்ளார். துணைத்தலைவர் பதவியை NSUI அமைப்பின் முன்னாள் உறுப்பினரான தீபன்ஷு சோகீன் கைப்பற்ற செயலாளர் மற்றும் இணைசெயலாளர் பதவிகளை ஏபிவிபி-ன் ரியா சாவ்டி மற்றும் லஷ்ய ராஜ்சிங் ஆகியோர் வென்றுள்ளனர். இந்த தேர்தலில் 40.46% வாக்குகள் பதிவாகின.
பதவி விலகும் DUSU தலைவர் ஆர்யன் மான், மாணவர்களுக்கான முக்கிய உள்கட்டமைப்பு தேவைகள் குறித்து பேசியிருக்கிறா். டெல்லி முதலைமைச்சரை சந்தித்து மனு அளித்ததன் பேரில், பல்கலைக்கழக வளாகத்திற்குள் 10,000 மாணவர்களுக்கான தங்குமிட விடுதிகள் வழங்க அரசு ஒப்புக்கொண்டுள்ளது. மேலும் தாக்கா வளாகத்தில் 2,300 படுக்கைகள் கொண்ட மாணவிகள் விடுதி திறக்கப்பட உள்ளது.
டெல்லி பல்கலைக்கழகத்தை சுற்றி மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கும் பிஜி மாஃபியாக்களை ஒழிப்பதே தங்களின் முதன்மை நோக்கம் என்றும்.. வாடகை கட்டுப்பாட்டு சட்டத்தை அமல்படுத்த தொடர்ந்து வலியுறுத்துவோம் என்றும் கூறியிருக்கிறார்.
எப்படி இருந்தாலும்.. இந்த வெற்றியில் ஒரு விஷயம் கவனத்திற்கு வந்திருக்கிறது. அதாவது சமீபத்தில்தான் டெல்லியில் கரப்பான் ஜனதா கட்சியினர் மிகப்பெரிய அளவில் போராட்டங்களை நடத்தியிருந்தனர். இருப்பினும் தற்போது டெல்லி பல்கலைக்கழக தேர்தலில் வலதுசாரியான ஏபிவிபி அணியினர் வெற்றி பெற்றிருப்பது எப்படி? என்று கேள்வி எழுந்திருக்கிறது.
ஒருவேளை ஏபிவிபி தலைவர்கள் சொல்வதை போல தற்போதை GenZ இளைஞர்கள் வலதுசாரி பக்கம் சாய தொடங்கியிருக்கின்றார்களோ? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.


Click it and Unblock the Notifications
