கோவா சட்டசபை தேர்தல்.. முதல் ஆளாக வேலையை தொடங்கிய காங்கிரஸ்.. முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
டெல்லி: கோவா சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 8 வேட்பாளர்களைக் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அடுத்தாண்டு தொடக்கத்தில் உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. அதில் பஞ்சாப் தவிர மற்ற மாநிலங்களில் பாஜகவே ஆளும் கட்சியாக உள்ளது.
இதற்கு முன் நடைபெற்ற தேர்தலைப் போலவே இதிலும் மிகப் பெரியளவில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் பாஜக களமிறங்குகிறது.

சட்டசபைத் தேர்தல்
அதேநேரம் 2024ஆம் ஆண்டு நடைபெறும் மக்களவை தேர்தலுக்கான ஒரு சிறு முன்னோட்டமாக அடுத்தாண்டு நடைபெறும் தேர்தல் இருக்கலாம் என அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு எதிராக மாபெரும் வெற்றியைப் பதிவு செய்த திரிணாமுல் காங்கிரஸ் கோவா உள்ளிட்ட மற்ற பகுதிகளிலும் கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியில் இருந்து பல முக்கிய தலைவர்களும் திரணாமுல் காங்கிரஸில் ஐக்கியமாகி வருகின்றனர். இது காங்கிரசுக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது.

வேலையை தொடங்கிய காங்கிரஸ்
இந்தச் சூழலில் கோவா தேர்தல் நடவடிக்கைகளை முதல் ஆளாகக் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. கோவா சட்டசபைத் தேர்தல் தொடர்பாக இன்னும் அறிவிப்பே வெளி வராத நிலையில், இதில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 8 தொகுதிகளில் போட்டியிடுவோர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

வேட்பாளர் பட்டியல் வெளியீடு
முன்னாள் கோவா முதல்வர் திகம்பர் வசந்த் காமத் கோவாவின் மார்கோ தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார். திகம்பர் வசந்த் காமத் கடந்த 2007 முதல் 2012 வரை கோவா முதல்வராக இருந்தவர், தற்போது கோவா சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக உள்ளார். அதேபோல கடந்த 2019இல் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்த சுதிர் கனோல்கர் கோவாவின் மபுசா சட்டமன்றத் தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார்.

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்
மொத்தம் 8 தொகுதிகளில் போட்டியிடுவோர் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது
தலீகா தொகுதி- டோனி ரோட்ரிக்ஸ்
போண்டா (Ponda) தொகுதியில் - ராஜேஷ் வெரேங்கர்
மர்முகா தொகுதி- சங்கல்ப் அமோன்கர்
கர்டோரிம் தொகுதி- அலெக்ஸியோ ரெஜினால்டோ லோரென்கோ
குன்கோலிம் தொகுதி- யூரி அம்மாவோ
க்யூபெம் தொகுதி - ஆல்டோன் டி'கோஸ்டா
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையிலான மத்திய தேர்தல் குழுவால் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டதாகவும் அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

2017 கோவா தேர்தல்
முன்னதாக, கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் கோவாவில் மொத்தம் உள்ள 40 இடங்களில் காங்கிரஸ் 17 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. பாஜகவால் வெறும் 13 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. இருப்பினும் அப்போது கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சியை அமைத்தது. கோவாவில் இந்த முறை பாஜக - காங்கிரஸ் - திரிணாமுல் காங்கிரஸ் என மும்முனை போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications