ரசவாதம் தெரியும்.. ஆனா இது புதுசா இருக்கே! குப்பையிலிருந்து தங்கமாம்.. பாஜக அமைச்சர் தடாலடி பேச்சு
லக்னோ: குப்பையிலிருந்து தங்கத்தை உற்பத்தி செய்யும் மெஷின் ஒன்று ரெடியாகி வருவதாகவும், இது மட்டும் ரெடியானால் மீரட்டின் குப்பைகளிலிருந்து தங்கத்தை எடுக்க முடியும் என உத்தரப்பிரதேச பாஜக அமைச்சர் தர்ம்பால் சிங் கூறியுள்ளார்.
தங்கம் தொடர்பான செய்திகள் முக்கியத்துவம் பெற்று வரும் நிலையில், பாஜக அமைச்சரின் பேச்சும் கவனம் பெற்றிருக்கிறது.

செய்தியாளர் நரேந்திர பிரதாப் இது தொடர்பான வீடியோவை பகிர்ந்திருக்கிறார். அதில், உத்தரப்பிரதேச கால்நடை வளர்ப்பு மற்றும் பால் மேம்பாட்டுத் துறை அமைச்சர் தர்ம்பால் கூறியதாவது, "கால்வாய்களில் குப்பைகளை போடுவது பெரிய பிரச்சனையை ஏற்படுத்துகிறது. இதனை அகற்றுவதும் சிரமமானதாக இருக்கிறது. இருப்பினும் இந்த நடவடிக்கையை நாங்கள் மேற்கொண்டிருக்கிறோம்.
குப்பையிலிருந்து தங்கத்தை உருவாக்கும் திட்டம் ஒன்று இருக்கிறது. இதற்கான இயந்திரம் ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது. சில சிக்கல்கள் இருப்பதால் இயந்திரம் உருவாக்குதலில் தாமதம் இருக்கிறது. மெஷின் உருவாக்கப்பட்டதும், மீரட் குப்பையிலிருந்து தங்கம் உருவாக்கப்படும்" என்று கூறியுள்ளார்.
சில நாட்களுக்கு முன்னர் ஈயத்திலிருந்து விஞ்ஞானிகள் தங்கத்தை உருவாக்கி காட்டினார்கள். பல்வேறு பொருட்களிலிருந்து சில வேதியியல் முறைகளை பயன்படுத்தி தங்கத்தை உற்பத்தி செய்வது என்பது காலங்காலமாக இருந்து வரும் ஒரு யோசனையாகும். இதற்கு ரசவாதம் என்று பெயர். ஆனால் பாஜக அமைச்சர் சொல்லும் மெஷன் இந்த ரசவாத மெஷினா என்பது தெரியவில்லை. இருப்பினும் தங்கம் விற்கும் விலைக்கு குப்பையிலிருந்து தங்கம் கிடைக்கிறது என்றால் மக்கள் சும்மா இருப்பார்களா?
இதற்கு முன்னர் ராகுல் காந்தியின் இதேபோன்ற வீடியோ ஒன்று பயங்கரமாக டிரெண்ட் ஆனது. "ஒரு பேப்பரை எடுத்துக்கொண்டு அதன் ஒரு பக்கத்தில் உருளை கிழங்கை நுழைத்தால்(?) மறுபக்கத்தில் அது தங்க கட்டியாக வரும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். இது வேடிக்கையானது" என்று பேசியிருந்தார். ஆனால் நெட்டிசன்கள், மோடி சொன்னதாக சொல்லியதை கட் செய்துவிட்டு, பேப்பர்-உருளைக்கிழங்கு-தங்கம் இதை மட்டும் வெட்டி வீடியோவாக ஷேர் செய்திருந்தனர்.
ராகுல் காந்திதான் இந்த கதையை சொன்னதாக நெட்டிசன்கள் தொடங்கி அரசியல் தலைவர்கள் வரை நம்பிவிட்டனர். அசாம் பாஜக முதல்வர் ஒருபடி மேலே போய், ராகுல் காந்தியை கலாய்த்திருந்தார். ஆனால் இப்போது பாஜக அமைச்சரின் இந்த கதைக்கு நெட்டிசன்கள் என்ன சொல்லப்போகிறார்கள் என்று தெரியவில்லை.
என்ன மக்களே பாஜக அமைச்சரின் யோசனையை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? நமக்கும் குப்பையிலிருந்து தங்கம் கிடைக்குமா?












Click it and Unblock the Notifications