டெல்லி அதிகாரிகள் நியமன அதிகார மசோதா.. லோக்சபாவில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றம்
டெல்லி: டெல்லி அதிகாரிகள் நியமன அதிகார மசோதா மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. மக்களவையில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை இருப்பதால் இந்த மசோதா எளிதாக நிறைவேறியது.
டெல்லி யூனியன் பிரதேசத்தில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு ஆட்சியில் உள்ளது. டெல்லி நாட்டின் யூனியன் பிரதேசம் என்பதால் துணை நிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் உள்ளது. இது தொடர்பாக துணை நிலை ஆளுநருக்கும் டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் மோதல் நடைபெற்று வருகிறது. இவ்விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி வழக்கு தொடர்ந்தது.

டெல்லி விவகாரத்தை விசாரித்த உச்சநீதிமன்றம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி அரசுக்குதான் அதிகாரிகள் நியமனம், மாறுதல் தொடர்பான அதிகாரம் இருக்கிறது என அதிரடியான தீர்ப்பை கொடுத்தது. இத்தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது. இதற்கு மத்தியில், உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை நீர்த்து போகச் செய்யும் வகையில் உடனடியாக மத்திய அரசு அவசர சட்டம் ஒன்றை கொண்டுவந்தது.
அதன்படி டெல்லி நிர்வாகத்தில் அதிகாரிகள் நியமனம், மாறுதல்கள் செய்ய மத்திய அரசுக்குதான் அதிகாரம் உண்டு. இந்த அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி திரவுபதி முர்முவும் ஒப்புதல் அளித்ததால் தற்போது அதிகாரிகள் நியமனம் உள்ளிட்டவற்றில் மத்திய அரசுக்கே அதிகாரம் உள்ளது. ஒரு அவசர சட்டம் கொண்டுவரப்பட்டால் அதற்கு மாற்றாக நாடாளுமன்ற இரு சபைகளிலும் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றி சட்டமாக்க வேண்டும் விதி.
எனவே, டெல்லி சேவைகள் தொடர்பான அவசர சட்டத்துக்கு மாற்றாக மத்திய அரசு மசோதாவை நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தாக்கல் செய்ய முடிவு செய்திருந்தது. எனினும் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே மணிப்பூர் விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இதனால், அவை நடவடிக்கைகள் முற்றிலும் முடங்கியது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் 11-அமர்வு நடைபெறும் இன்று ஓரளவு அலுவல்கள் நடைபெற்றது. இதற்கு மத்தியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று டெல்லியில் அதிகாரிகள் நியமனம் தொடர்பான மசோதாவை தாக்கல் செய்தார். இந்த மசோதாவுக்கு டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி உள்பட "இந்தியா" கூட்டணி எம்.பிக்கள்கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். காரசார வாதங்களும் நடைபெற்றது.
விவாதத்தில் பேசிய காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சூழலில், டெல்லி மசோதாவை நிறைவேற்ற நினைப்பது ஜனநாயக நெறிமுறைகளுக்கு விரோதமானது" என்றார். தொடர்ந்து பேசிய தேசியவாத காங்கிரஸ் எம்பி சுப்ரியா சுலே, சட்டப்பிரிவு 239AA-படி டெல்லி அரசிடம் இருந்து அதிகாரங்களைத் திரும்பப் பெற நாடாளுமன்றத்திற்கு எந்த வித அதிகாரமும் கிடையாது" என்றார்.
பின்னர் விவாதத்தில் பேசிய அமித்ஷா, டெல்லியில் ஆளும் ஆத்மி அரசை கடுமையாக சாடினார். டெல்லி அரசு தனது ஊழல்களை மறைக்கவே அதிகாரிகள் நியமன மசோதாவை எதிர்க்கிறது என்றும் இந்த அவசரச் சட்டம் உச்சநீதிமன்றத்தின் உத்தரவைக் குறிக்கிறது. தேசிய தலைநகர் பகுதியான டெல்லியில் எந்தவொரு பிரச்சினையிலும் சட்டங்களை இயற்ற நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் இருக்கு இருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் கூறுகிறது.
டெல்லிக்கான சட்டங்களைக் கொண்டு வரும் அதிகாரம் மத்திய அரசுக்கு இருக்கிறது. நமது அரசியலமைப்பு விதிகளில் இது தெளிவாக இருக்கிறது. நீங்கள் கூட்டணியில் இருப்பதால் மட்டும் டெல்லியில் நடக்கும் அனைத்து ஊழலுக்கும் ஆதரவளிக்க வேண்டாம் என்று அனைத்து கட்சிகளுக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன். நீங்கள் என்ன தான் கூட்டணியில் இருந்தாலும், பிரதமர் மோடி தேர்தலில் முழு பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவார்" என்றார்.
அமித்ஷா பேசிய பிறகு பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் டெல்லி அதிகாரிகள் நியமன மசோதா பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது. மக்களவையில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை இருப்பதால் இந்த மசோதா எளிதாக நிறைவேறியது. மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. மசோதா நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து மக்களவை நாளை காலை வரை ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications