“டெல்லி குண்டுவெடிப்பு பயங்கரவாத தாக்குதல்! விரைவில் குற்றவாளிகள் கைதாவார்கள்”- அஸ்வினி வைஷ்ணவ்
டெல்லி: டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் பயங்கரவாத தாக்குதல் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் கூறியிருக்கிறார். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் விரைவில் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் கூறியிருக்கிறார்.
இந்த தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் 13 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். சம்பவத்திற்கு தொடர்புடைய சிலரை போலீசார் கைது செய்திருக்கின்றனர். ஆனால், சிஎன்ஜி கேஸ் வெடிப்பால் கூட இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்று பேசப்பட்ட நிலையில், மத்திய அரசு இந்த சம்பவத்தை பயங்கரவாத தாக்குதல் என்று அறிவித்திருக்கிறது.

இது குறித்து விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில், "பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, நேற்று முன்தினம் மாலை டெல்லியில் செங்கோட்டை அருகே கார் வெடிகுண்டு மூலம் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் ஏற்பட்ட உயிர் இழப்புகளுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தது. உயிர்களை இழந்த அப்பாவி மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அமைச்சரவை இரண்டு நிமிடங்கள் மௌனம் அனுசரித்தது.
அமைச்சரவையில் இது தொடர்பாக சில முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. குறிப்பாக தேச விரோத சக்திகளால் நிகழ்த்தப்பட்ட இந்த கொடூரமான பயங்கரவாதச் செயலை நாடு கண்டிருக்கிறது. இந்த கோழைத்தனமான செயலை அமைச்சரவை வெளிப்படையாகக் கண்டிக்கிறது.
இந்த வன்முறைச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு தனது ஆழ்ந்த மரியாதையை செலுத்தியதுடன், அவர்களது குடும்பத்தினருக்கு மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்தது. மேலும், காயமடைந்த அனைவரும் விரைந்து குணமடைய பிரார்த்தித்தது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிய மருத்துவப் பணியாளர்கள் மற்றும் அவசரகால மீட்புக் குழுவினர் மேற்கொண்ட உடனடி மற்றும் ஒருங்கிணைந்த முயற்சிகளை அமைச்சரவை பாராட்டியது.
பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களுக்கும் எதிராக பூஜ்ஜிய சகிப்புத்தன்மை என்ற இந்தியாவின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை அமைச்சரவை மீண்டும் வலியுறுத்தியது. உலகின் பல்வேறு அரசாங்கங்கள் இந்த நேரத்தில் இந்தியாவுக்கு வழங்கிய ஒற்றுமை மற்றும் ஆதரவு அறிக்கைகளுக்கு அமைச்சரவை தனது நன்றியை பதிவு செய்தது.
இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள், அவர்களுக்கு உதவியவர்கள் மற்றும் ஆதரவளித்தவர்களை அடையாளம் கண்டு, தாமதமின்றி நீதியின் முன் நிறுத்த, மிகவும் அவசரத்துடனும், தொழில்முறை அணுகுமுறையுடனும் விசாரணையை மேற்கொள்ளுமாறு அமைச்சரவை உத்தரவிடுகிறது.
தேசப் பாதுகாப்பு மற்றும் அனைத்து இந்தியர்களின் உயிர்களையும் நலனையும் பாதுகாக்க அரசு உறுதியாக இருக்கும் என்று அமைச்சரவை மீண்டும் உறுதிப்படுத்தியது" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications