ஒரு மசோதாவை.. காலவரையறை இல்லாமல் நிறுத்திவைக்க ஆளுநருக்கு அதிகாரமில்லை! தெளிவாக சொன்ன உச்சநீதிமன்றம்
டெல்லி: மசோதாக்களில் முடிவெடுக்கும் விவகாரத்தில் ஆளுநருக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு நிர்ணயம் செய்ததிருந்தது. இது தொடர்பாக ஜனாதிபதி 14 கேள்விகளை எழுப்பியிருந்த நிலையில், இந்த விளக்கக் குறிப்பு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்தது. அந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பளித்துள்ளது. அதில் ஆளுநரால் காலவரம்பின்றி ஒரு மசோதாவை நிறுத்தி வைக்க முடியாது என்றும் அதற்கான அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
தமிழக மசோதாக்களுக்கு ஆளுநர் உரிய நேரத்தில் ஒப்புதல் கொடுக்காமல் காலம் தாழ்த்துவதாகச் சொல்லி தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் மசோதாக்களில் முடிவெடுக்க ஆளுநர்களுக்குக் காலக்கெடு நிர்ணயம் செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கு அப்போதே மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 14 கேள்விகளைக் கொண்ட விளக்கக்குறிப்பை அளித்திருந்தார்.

உச்சநீதிமன்றம்
அந்த விளக்கக் குறிப்பு தொடர்பான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்றது.. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.. அதேநேரம் இது விளக்கக் குறிப்பு தொடர்பான விசாரணை மட்டுமே என்றும் முந்தைய உத்தரவுகளை இந்த விசாரணை மாற்றாது என்பதை உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டது.
நிறுத்தி வைக்க முடியாது
இந்தச் சூழலில் தான் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் மசோதாவை காலவரம்பின்றி நிறுத்திவைக்க ஆளுநருக்கு அதிகாரமில்லை என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. குடியரசுத் தலைவருக்கு மசோதாவை அனுப்ப மட்டுமே ஆளுநரால் அதை நிறுத்தி வைக்க முடியும் என்றும் கூறியுள்ளது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசும் அந்த அமைச்சரவையும் மட்டுமே முடிவுகளை எடுப்பதில் முக்கியத்துவம் பெற முடியும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
3 வழிகள் தான்
மேலும், ஒரு மசோதா ஆளுநரிடம் வரும்போது, அவர் மூன்று ஆப்ஷன்களில் ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. அதாவது மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பது, அதைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்புவது, அல்லது மீண்டும் சட்டசபைக்கு திருப்பி அனுப்புவது ஆகிய 3ல் ஒன்றை மட்டுமே செய்ய முடியும்.. இதில் எதாவது ஒன்றைத் தேர்ந்தெடுப்பதற்கான அதிகாரம் ஆளுநர்களுக்கு உள்ளது என்றும் அந்த முடிவுகளை நீதிமன்றங்கள் ஆராய முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
நீதிமன்றம் தலையிடலாமா?
இருப்பினும், ஆளுநர்கள் மசோதாக்களை காலவரையின்றி நிறுத்தி வைக்கும்போது, அந்த அசாதாரண சூழ்நிலைகளில் மட்டும் நீதிமன்றங்கள் தலையிடலாம் என்றும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது. அப்போதும் கூட உரிய காலத்தில் செயல்படுமாறு ஆளுநர்களைக் கேள்ள மட்டுமே சுப்ரீம் கோர்ட்டால் முடியும்.. ஆளுநரின் முடிவு சரியா தவறா என்பது குறித்து எந்தவொரு கருத்தையும் தெரிவிக்காமல் இது மேற்கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த தீர்ப்பைத் தலைமை நீதிபதி பி. ஆர். கவாய் வாசித்தார். மேலும், ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்தத் தீர்ப்பை ஒருமனதாக வழங்கியிருப்பதாகத் தெரிவித்தார். அவர் மேலும், "இது ஒருமனதாக வழங்கப்பட்ட தீர்ப்பு.. ஒருமனதாகத் தீர்ப்பு வழங்க உதவிய நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் நீதிபதிகள் விக்ரம் நாத், பி.எஸ். நரசிம்மா, ஏ.எஸ். சந்தூர்கர் ஆகியோருக்கு நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.












Click it and Unblock the Notifications