ஆளுநர்கள் தங்கள் அதிகாரத்தை எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும்.. உச்ச நீதிமன்றம் கருத்து
டெல்லி: ஆளுநர்கள் தங்கள் அதிகாரத்தை எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும் எனவும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடுவதால் அரசாங்கம் கவிழும் என்பதையும் அறிந்து இருக்க வேண்டும் என்றும் சிவசேனா வழக்கில் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் ஆளும் கட்சிக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகள் காரணமாக நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு உத்தரவிடுவதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் கவிழும் என்றும் நீதிமன்றம் கூறியது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா மற்றும் காங்கிரஸ் , தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து மகா விகாச் அகாடி என்ற பெயரில் கூட்டணி ஆட்சி நடத்தி வந்தன.
இந்த நிலையில், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சி எம்.எல்.ஏக்கள் அவருக்கு எதிராக திடீரென போர்க்கொடி தூக்கினர். சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 34 எம்.எல்.எக்கள் தனி அணியாக சென்றனர்.

உத்தவ் தாக்கரே விவகாரம்
இதனால், மகா விகாஸ் அகாடி கூட்டணி கட்சி பெரும்பான்மை இழந்தது. இதைத்தொடர்ந்து மகராஷ்டிர மாநிலத்தின் அப்போதைய ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி சட்டப்பேரவையில் பெரும்பான்மையை காட்ட உத்தவ் தாக்கரேவிற்கு உத்தரவிட்டார். பெரும்பான்மை இல்லாத நிலை இருந்ததால் உத்தவ் தாக்கரே தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, பாஜக ஆதரவுடன் உத்தவ் தாக்கரே முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

ஆளுநரின் செயல்பாடு குறித்து
இவ்விவகாரம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி ஒய் சந்திர சூட் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்த போது ஆளுநரின் செயல்பாடு குறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியது. உச்ச நீதிமன்றம் கூறுகையில், ஆளுநர் தனது அதிகாரத்தை மிகவும் எச்சரிக்கையாக பயன்படுத்த வேண்டும் என்றும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது அரசாங்கம் கவிழும் என்பதையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும் எனவும் கூறியது.

அரசாங்கம் கவிழ்வதற்கு வழி வகுக்கும்
மேலும், கட்சிக்குள் இருக்கும் வேறுபாடு காரணமாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடுவதாக அரசாங்கம் கவிழ்வதற்கு வழி வகுக்கும் என்று கூறியது. இந்த வழக்கில் ஆளுநர் தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா 2022ம் ஆண்டு மகாராஷ்டிராவில் நடந்த அரசியல் குழப்பத்தையும், அதை தொடர்ந்து ஆளுநர் எடுத்த நடவடிக்கைகளையும் விளக்கம் அளித்து வாதிட்டார். அப்போது நீதிபதிகள் கூறும்போது,' கட்சி கொள்கை, வளர்ச்சி நிதி ஒதுக்குதல் உள்ளிட்டவை தொடர்பாக ஒரு கட்சி எம்எல்ஏக்கள் மத்தியில் வேறுபாடுகள் ஏற்படலாம்.

ஆளுநரின் அதிகாரம் குறித்து கேள்வி
தங்கள் தலைவர் மீது சிவசேனா எம்.எல்.ஏக்களுக்கு நம்பிக்கை இல்லையென்றால் அவர்கள் வேறு ஒரு தலைவரை மாற்றியிருக்கலாம். ஆனால் கட்சியில் அதிருப்தி நிலவுவதால் முதல்வர் கண்டிப்பாக நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ள வேண்டும் என்று ஆளுநர் சொல்ல முடியுமா? நாங்கள் ஆளுநரின் அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பவில்லை. ஆனால் ஒரு அரசு மீது நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிடுவதற்கு இதுபோதுமானதா இருக்குமா? ஆனால், பிரச்சினை என்னவெனில் ஒரு அரசாங்கம் கவிழ்வதற்கான நடவடிக்கையை ஆளுநர் துரிதப்படுத்தக்கூடாது என்பதே.

ஜனநாயகத்திற்கு அதிர்ச்சி அளிக்கக்கூடிய
ஏனெனில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த உத்தரவிடுவது தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்க்கத்தான் உதவும் வகையில் இருக்கும். மக்கள் தான் ஆளும் கட்சியை தூக்கி எறிவார்கள். ஆனால் ஆளுநரால் இங்கு ஆளும் அரசு கவிழ்க்கப்படுவது ஜனநாயகத்திற்கு அதிர்ச்சி அளிக்கக்கூடிய காட்சியாக அமையும்" என்றனர். மேலும் மூன்று கட்சிகள் அடங்கிய கூட்டணியில் ஒரு கட்சிக்குள் அதிருப்தி நிலவுகிறது என்ற உண்மையையும் ஆளுநர் கண்டுகொள்ளாமல் இருக்கக் கூடாது எனவும் நீதிபதிகள் கூறினர். இந்த வழக்கின் வாதங்கள் இன்றும் நடைபெற உள்ளது.












Click it and Unblock the Notifications