குஜராத் பயணிகள் விமான விபத்து.. டேக் ஆப் சமயத்தில் கீழே விழுந்தது ஏன்? காரணம் இதுவாகக்கூட இருக்கலாம்
அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து லண்டன் புறப்பட்ட பயணிகள் விமானம் ஒன்று கீழே விழுந்து நொறுங்கியுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்கான காரணம் என்ன என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொதுவாக விமானங்கள் டேக்-ஆப் மற்றும் லேண்ட் ஆகும்போதும்தான் விபத்தில் சிக்குகின்றன. அகமதாபாத் ஏர் இந்தியா விமானமும் டேக் ஆப் சமயத்தில்தான் விபத்தில் சிக்கியிருக்கிறது. அதாவது ஓடுபாதையிலிருந்து முழுமையாக விமானம் மேலெழுந்திருக்கிறது. ஆனால், அடுத்த சில நிமிடங்களில் விமானம் குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்தில் சிக்கியிருக்கிறது.

காரணங்கள் என்ன?
இப்படியான விபத்துகளுக்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. குறிப்பாக விமானியின் தவறு இதற்கான முக்கியமான காரணமாக இருக்கலாம். அதாவது, வானிலை, விமானத்தின் தொழில்நுட்ப நிலை அல்லது பிற சூழ்நிலைகளை சரியாக மதிப்பிடாமல் தவறும்பட்சத்தில் டேக் ஆப் செய்யும்போது பிரச்சனை ஏற்படும். இது திசை குழப்பம், கட்டுப்பாட்டை இழப்பது, அல்லது அவசர சூழ்நிலைகளில் தவறான முடிவுகளை எடுக்க வைத்தவிடும். இது முக்கிய காரணமாக இருந்தாலும், இது மட்டுமே காரணம் என்று சொல்லிவிட முடியாது.
என்ஜின் கோளாறு
இது இரண்டாவது மிக முக்கியமான காரணமாகும். விமானத்தின் என்ஜின் பழுதடைவது, எரிபொருள் தொடர்பான பிரச்சனைகள், இறக்கைகளில் ஏற்படும் சிக்கல்கள், இன்ன பிற தொழில்நுட்ப கோளாறு ஆகியவை விமானம் விபத்தில் சிக்குவதற்கு காரணமாக இருக்கலாம். சரியாக பராமரிக்காமல் இருப்பதாலும், விமான உற்பத்தியின்போது ஏற்படும் பிழைகளாலும் கூட தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்படலாம். இது விமான விபத்துக்கு வழி வகுக்கும்.
மோசமான வானிலை
இது மூன்றாவது காரணம். மழை, பனிமூட்டம் மட்டுமே மோசமான வானிலை என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் புறப்படும்போது திடீரென ஏற்படும் கடும் காற்று (crosswinds), காற்றுச் சுழற்சிகள் (turbulence) ஆகியவையும் விமான பயணத்திற்கு ஆபத்துதான். சில நாட்களுக்கு முன்னர் கூட, பயணிகள் விமானம் ஒன்று சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றது. ஆனால் 100 அடி உயர்த்தில் லேண்டிங்கை கைவிட்டு, மீண்டும் வானத்தில் பறந்தது. காரணம் கடும் காற்று பிரச்சனைதான். மீறி தரையிறக்கியிருந்தால் விமானம் விபத்தில் சிக்கியிருக்கும்.
பறவை மோதல் (Bird Strike)
இதுவும் விபத்துக்கு ஒரு காரணம். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஏறத்தாழ ஆயிரம் விமானங்கள் பறவை மோதல் பிரச்சனையால் பாதிக்கப்படுகிறது. விமானம் டேக்ஆப் ஆகும்போதும், லேண்டிங் செய்யும்போதும் குறைந்த உயரத்தில் பறக்கும். அப்போது அந்த வழியாக போகும் பறவைகள், விமானத்தில் என்ஜினில் அடிப்பட்டு பிரச்சனையை ஏற்படுத்திவிடும். இதனால் என்ஜின் செயலிழந்து, விபத்தில் சிக்குகிறது. விமான போக்குவரத்து துறை பறவை மோதல் தொடர்பான தகவல்களை தற்போது சேகரித்து வருகிறது.
இதர தவறுகள்
இது தவிர, வான் வழி போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் கொடுக்கும் சில தவறான தகவல்கள், போதிய எரிபொருள் இல்லாதது, அல்லது எரிபொருளில் ஏற்பட்டிருக்கும் கலப்படம் உள்ளிட்டவையும் கூட விபத்துக்கு காரணமாகும். அகமதாபாத்தில் விமானம் விபத்தில் சிக்கியதற்கு இதில் எது காரணம் என்பது விசாரணைக்கு பின்னர்தான் தெரிய வரும்.
இந்த விமானத்தில், 11 சிறுவர்கள், 2 குழந்தைகள் என மொத்தம் 230 பயணிகள் இருந்தனர். 230 பேரில் 169 பேர் இந்தியர்கள். 53 பேர் இங்கிலாந்தை சேர்ந்தவர்கள். ஒருவர் கனடா நாட்டை சேர்நதவர், 7 பேர் போர்த்துக்கீசியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications