ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி முதல் வினேஷ் போகத் வரை வென்ற விஐபிக்கள் யார் யார்?
டெல்லி: பா.ஜனதா ஆளும் ஹரியானாவில் கடந்த 5-ந்தேதி சட்டசபை தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 90 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நடந்த இந்த தேர்தலில் 67.90 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. ஹரியானா மாநில முதல்வர் நயாப் சிங் சைனி, முன்னாள் முதல்வர் பூபந்தர் ஹூடா, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் உள்பட இந்த தேர்தலில் போட்டியிட்ட முக்கிய வேட்பாளர்களின் முன்னிலை நிலவரம் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்..
நயாப் சிங் சைனி : ஹரியானா மாநில முதல்வர் நயாப் சிங் சைனி (வயது 54), பா.ஜ., சார்பில் லத்வா தொகுதியில் போட்டியிட்டார். இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மேவா சிங் போட்டியிட்டார். இதில் மொத்தம் 16 சுற்று முடிவில் முதல்வர் நயாப் சிங் 70177 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் மேவா சிங் 54123 வாக்குகள் பெற்றுள்ளார். இதன் மூலம் 16054 வாக்குகள் வித்தியாசத்தில் நயாப் சிங் சைனி வெற்றி பெற்றார்.

பூபிந்தர் சிங் ஹூடா: ஹரியானா மாநில காங்கிரஸ் தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா. இவருக்கு வயது 77. இவர் கர்ஹி சாம்ப்லா- கிலோய் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார். இறுதியாக 17 சுற்றுகள் முடிவில் பூபிந்தர் சிங் 108539 பெற்று வெற்றி பெற்றார். பாஜக வேட்பாளர் மஞ்சு 37074 வாக்குகள் மட்டுமே பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தார். கிட்டத்தட்ட பாஜக வேட்பாளர் மஞ்சுவைவிட, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் 71465 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
அனில் விஜ்: அம்பாலா கன்ட் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டவர் அனில் விஜ் . இவர் ஹரியானா மாநிலத்தில் பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவர் ஆவார். இவர் சித்ரா சர்வாரா என்ற சுயேட்சை வேட்பாளருடன் கடும் போட்டியை சந்தித்தார். எனினும் கடைசி சுற்றான 16வது சுற்று முடிவில், பாஜகவின் அனில் விஜ் 59858 வாக்குகள் பெற்று பெற்றார். சுயேட்சை வேட்பாளர் சித்ரா சர்வார் 52581 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தார். இதில் மூலம் சுயேட்சை வேட்பாளர் சித்ராவை, பாஜக வேட்பாளர் அனில் விஜ், 7277 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். காங்கிரஸ் வேட்பாளர் பர்வீந்தர் பால் பாரி 14469 வாக்குகளுடன் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
வினேஷ் போகத்: காங்கிரஸ் சார்பில் ஜூலானா தொகுதியில் போட்டியிட்டவர் இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத். இவர் 15 சுற்றுகள் முடிவில் 65080 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அடுத்ததாக பாஜக வேட்பாளர் யோகேஷ் குமார்59065 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார், வினேஷ் போகத், பாஜக வேட்பாளரை விட 6015 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
ஸ்ருதி சவுத்ரி: ஹரியானா சட்டசபை தேர்தலில் தோஷம் தொகுதியில் பாஜக சார்பில் ஸ்ருதி சவுத்ரி என்பவர் போட்டியிட்டார். இவர் பாஜகவின் முக்கிய வேட்பாளர்களில் ஒருவர். 17 சுற்றுகள் முடிவில் ஸ்ருதி சௌத்ரி 76414 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் அனிருத் சௌத்ரி 62157 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். இதன் மூலம் பாஜக வேட்பாளர் ஸ்ருதி சவுத்ரி 14257 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
சாவித்ரி ஜிண்டால்: ஹரியானா மாநிலம் ஹிசார் தொகுதியில், நாட்டின் பணக்காரப் பெண்மணி சாவித்ரி ஜிண்டால் சுயேச்சையாக போட்டியிட்டு 18941 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 12 சுற்றுகள் முடிவில். சாவித்ரி ஜிண்டால் 49231 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் ராம் நிவாஸ் ராரா 30290 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தையே பிடித்தார். பாஜக வேட்பாளர் டாக்டர் கமல் குப்தா 17385 வாக்குகள் பெற்று 3வது இடத்தையே பிடித்தார்.
துஷ்யந்த் சிங்: ஹரியானாவின் முன்னாள் துணை முதல்வரும் ஜனநாயக் ஜனதா கட்சி (ஜேஜேபி) தலைவருமான துஷ்யந்த் சிங் சவுதாலா, கடந்த முறை வென்ற உச்சன கலன் தொகுதி மீண்டும் போட்டியிட்டார். இந்த தொகுதியில் பாஜகவின் தேவேந்தர் சத்தர்புஜ் அட்ரி வெறும் 32 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் பிரிஜேந்திர சிங்கை தோற்கடித்ததார். தேவேந்தர் சத்தர்புஜ் அட்ரி 48968 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் பிர்ஜேந்திர சிங் 48936 வாக்குகள் பெற்று 2வது இடம் பிடித்தார். சுயேட்சையாக போட்டியிட்ட விஜேந்தர் 31456 வாக்குகள் பெற்று 3வது இடத்தை பிடித்தார். ஆனால் துஷ்யந்த் சிங் சவுதாலா 7950 வாக்குகள் மட்டுமே பெற்று 5வது இடத்தை பிடித்தார்.












Click it and Unblock the Notifications