ஒரு நிமிஷம்.. முகத்தை பார்த்திருந்தா உயிர் தப்பியிருக்கலாமோ! ஹனிமூன் கொலை வழக்கில் இதை கவனிச்சீங்களா
டெல்லி: மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த புதுமண ஜோடி ஒன்று சமீபத்தில் மேகாலயாவுக்கு ஹனிமூன் சென்றிருக்கிறது. அங்கு கணவனை திட்டமிட்டு மனைவியே கொலை செய்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இவர்களின் திருமண வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோவில் மனைவி முறைத்தபடி இருப்பது தெளிவாக தெரிகிறது. அப்போதே உஷாராகி இருந்தால் இந்நேரம் கணவன் உயிர் தப்பியிருக்கலாமே என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்தவர் இளைஞர் ராஜா ரகுவன்ஷி. இவர் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த சோனம் என்பவரை கடந்த மே மாதம் 10ம் தேதி திருமணம் செய்துக்கொண்டார். இருவரும் மே 20ம் தேதியன்று மேகாலயாவுக்கு ஹனிமூன் சென்றிருக்கின்றனர். தொடக்கம் எல்லாம் நன்றாகத்தான் இருந்தது. மே.23ம் தேதி இவர்கள் ஓட்டலிலிருந்து வெளியே சென்ற பின்னர் மீண்டும் திரும்பவில்லை. இது ஓட்டல் நிர்வாகத்திற்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மறுபுறம், அன்றைய தினம் புதுமாப்பிள்ளையிடம் பேச வேண்டும் என்று, ராஜாவின் உறவினர்கள் போன் செய்திருக்கின்றனர். ஆனால், லைன் கிடைக்கவில்லை. சரி புதுசா கல்யாணம் ஆனவர்கள், வாழ்க்கையை ரசிக்க வேண்டும் என்று நினைத்திருப்பார்கள். தொந்தரவு எதற்கு என செல்போனை சுவிட்ச் ஆப் செய்து வைத்திருப்பார்கள் என்று, அவர்களுக்கு அவர்களே சமாதானம் சொல்லிக்கொண்டு அமைதியாகிவிட்டார்கள்.
ஆனால், அடுத்த நாளும் மாப்பிள்ளை போனுக்கு லைன் போகவில்லை. மருமகள் சோனத்திற்கு அழைக்கலாம் என்று முயற்சித்திருக்கிறார்கள் அவருக்கும் லைன் கிடைக்கவில்லை.
எனவே மாப்பிள்ளையின் பெற்றோர் உடனடியாக போலீசில் புகார் அளித்தனர். புகாரையடுத்து விசாரணையை தொடங்கிய போலீசார், முதற்கட்டமாக தம்பதியினர் தங்கியிருந்த ஓட்டலின் சிசிடிவி கேமராக்களை பரிசோதித்துள்ளனர். அதில், அவர்கள் மே.23தேதிக்கு பிறகு மீண்டும் ஓட்டலுக்கு திரும்பவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
எனவே அடுத்தகட்டமாக இவர்கள் பயன்படுத்திய கார் தேடப்பட்டது. கார் ஒரு கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டது. அங்கிருந்து ராஜாவை தேடும் பணியை போலீசார் தீவிரப்படுத்தினர். சுமார் 8 நாட்களுக்கு பிறகு, அதாவது ஜூன்.1ம் தேதி வெய் சாவ்டோங் நீர்வீழ்ச்சிக்கு கீழே இருந்த பள்ளத்தாக்கில் ராஜாவின் உடல் சடலமாக அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. அதே இடத்தில் ஒரு கத்தியையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். என்ன நடந்தது என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டும் எனில் மனைவி சோனம் தேவை. அவரும் காணவில்லை.
ஒருவேளை இருவரும் தற்கொலை செய்துக்கொண்டிருப்பார்களோ? என்று சந்தேகம் எழுந்திருந்தது. ஆனால் பள்ளத்தாக்கில் ராஜாவின் உடல் மட்டுமே கிடைத்தது. சோனம் உடல் கிடைக்கவில்லை. எனவே சோனத்தை போலீசார் தீவிரமாக தேடினர். அதே நேரத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை கைது செய்து தங்களது ஸ்டைலில் விசாரித்தனர். விசாரணையில் மூவரும் கூலிப்படையை சேர்ந்தவர்கள் என்பதும், சோனம் அழைத்ததின் பேரில் இந்த கொலையை செய்ததாகவும் ஒப்புக்கொண்டனர்.
விஷயம் ஒவ்வொன்றாக வெளியே கசிந்த நிலையில், சோனம் உத்தரப் பிரதேச காவல்துறையில் இன்று காலை சரணடைந்துள்ளார். அவர்தான் கணவரை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டிருக்கிறார். ஆனால் என்ன காரணம்? எப்படி கொலை நடந்தது என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
இதெல்லாம் ஒருபுறம் இருக்கையில், மறுபுறம் இந்த கொலை வழக்கு சோஷியல் மீடிக்களில் விவாதங்களை அதிகரித்திருக்கிறது. குறிப்பாக ராஜா-சோனம் திருமண வீடியோ பரவலாக பகிரப்பட்டு வருகிறது. அதில், சோனத்திற்கு ராஜா, நெற்றியில் குங்குமத்தை வைக்கிறார். இந்த நெகிழ்ச்சியான தருணத்தில் ராஜா உட்பட அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி தெரிகிறது. சோனம் மட்டும் மௌனமாக, வாழ்க்கையே விதி என இருப்பதை போல அமைதியாக அமர்ந்திருக்கிறார்.
முகத்தில் மகிழ்ச்சி துளி கூட இல்லை. சம்பிரதாயத்திற்கு கூட புன்னகைக்கவில்லை. முகம் இறுக்கமாகவும், வைராக்கியத்தை வெளிப்படுத்தும் வகையிலும் இருக்கிறது. முறைப்பதை போன்று தெரிந்தாலும், ஏதோ ஒரு விஷயத்தில் பிடிவாதமாக இருப்பதை போல தெரிகிறது.
இந்த சமயத்தில் சிரித்துக்கொண்டிருந்த ராஜா, கொஞ்சம் திரும்பி சோனத்தின் முகத்தை பார்த்திருந்தால் உயிர் பிழைத்திருக்கலாமோ என்னவோ? என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications