"ஓ இதுதான் மேட்டரா.." பறவை எல்லாம் நூல் பிடித்த மாதிரி நேர்கோட்டில் செல்ல என்ன காரணம் தெரியுமா
டெல்லி: வானத்தில் பறவைகள் எப்போதும் நேர்கோட்டில் ஒரே பாதையில் பயணிப்பது பலரும் ஆச்சரியமாகவே இருக்கும்.. இதற்கு என்ன காரணம் என்பது குறித்து எளிமையாகப் பார்க்கலாம்.
பல பறவை இனங்கள் நீண்ட தூரம் பறந்து செல்வதை வாடிக்கையாக வைத்திருக்கும். இனப்பெருக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பறவைகள் இப்படி நீண்ட தூரத்திற்குப் பறந்து செல்லும்.
ஒவ்வொரு முறையும் பாதை மாறாமல் எங்குச் செல்ல வேண்டுமோ அங்கே துல்லியமாகச் சென்று சேர்ந்துவிடும். இதன் காரணமாகவே புறாக்களை முன்பு கடிதங்களைப் பரிமாறக் கூட பயன்படுத்தினார்கள்.

பறவைகள்: புறாக்கள் எப்படி இப்படி நேர்கோட்டில் பாதை மாறாமல் பயணிக்கிறது என்பது பலருக்கும் ஆச்சரியமாகவே இருக்கும். இது குறித்து விரிவாகப் பார்க்கலாம். சூரியனில் இருந்து வரும் ஆபத்தான காஸ்மிக் கதிர்கள், பிளாஸ்மா ஆகியவற்றில் இருந்து பூமியின் காந்தப்புலம் தான் நம்மை காக்கிறது. ஆனால், இந்த காந்தப்புலத்தை சில விலங்குகள் தங்கள் பாதையைக் கண்டறியப் பயன்படுத்திக் கொள்கிறது. இதற்கான சிறப்புத் திறன்களை அவை பெற்றுள்ளன.
இது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், புலம்பெயர்ந்த பறவைகளுக்குக் காந்தப்புல தகவல்களை பிராசஸ் செய்யும் திறன் இருக்கிறதாம். நாம் எப்படி அருகில் பிடித்த பாடல் ஒலிபரப்பினால் கேட்கிறோம். பிடிக்காத பாடல் அருகிலேயே பிளே ஆனாலும் கவனிக்காமல் இருந்துவிடுகிறோமோ.. அதேபோல பறவைகளால் தேவைப்பட்ட போது மட்டும் காந்தப்புல தகவல்களை பிராசஸ் செய்து கொள்ள முடியுமாம்.
ஆய்வு: கனடாவில் உள்ள வெஸ்டர்ன் ஒன்டாரியோ பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவில் உள்ள பவுலிங் கிரீன் ஸ்டேட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து இந்த ஆய்வை நடத்தியுள்ளனர். பறவைகள் தங்கள் மூளையில் இருக்கும் கிளஸ்டர் என் என்ற பகுதியை வைத்து காந்தப்புலத்தைக் கண்டறிந்து அதை பிராசஸ் செய்கிறதாம். அதுவும் இடம்பெயரும் காலத்தில் மட்டும் திசையைக் கண்டறிய இந்த கிளஸ்டர் N பகுதி ஆக்டிவ் மோடிற்கு வருகிறதாம்.
இதற்கு முன்பு வரை பறவைகள் தங்கள் விழித்திரையில் அமைந்துள்ள க்ரிப்டோக்ரோம்கள் எனப்படும் காந்த உணர்திறன் புரதங்களைப் பயன்படுத்தி பாதையைக் கண்டுபிடிக்கலாம் என ஆய்வாளர்கள் நினைத்தனர். இருப்பினும், நீண்ட தூரச் செல்ல கிளஸ்டர் N பகுதியையே பயன்படுத்துவதை ஆய்வாளர்கள் இப்போது உறுதி செய்துள்ளனர்.
ஆன்/ ஆப்: இது குறித்து அவர்கள் வெள்ளை சிட்டுக்குருவிகளை வைத்து ஆய்வு செய்துள்ளனர். இந்த பறவை இரவில் புலம்பெயரும் போது கிளஸ்டர் N பகுதியைப் பயன்படுத்துகிறது. பகல் நேரத்தில் ரெஸ்ட் எடுக்கும் போது அதைச் சீண்டுவதே இல்லை. இது குறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், "புவி காந்த திசைக்காட்டியைச் செயல்படுத்த மூளையின் இந்தப் பகுதி மிகவும் முக்கியமானது.. நாங்கள் நடத்திய ஆய்விலும் அதுவே தெரிய வந்துள்ளது" என்றனர்.
கிரகத்தின் மையத்தில் உருவாகும் காந்தப்புலம் வெளியே விண்வெளியில் பரவுகிறது. இந்த காந்தப்புலத்தை மனிதர்களால் பார்க்க முடியாது என்ற போதிலும், சில விலங்குகளால் இந்த காந்தப்புலத்தை பிராசஸ் செய்ய முடிகிறது. இது அவை நீண்ட தூரம் பயணிக்கும்போது பாதையைக் கண்டுபிடிக்க உதவுகிறது.
பறவை இடம்பெயர்வில் அவை அப்படி நகர்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் நமது செயல்பாடுகள் பறவைகளை எப்படிப் பாதிக்கிறது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும். அதேநேரம் பறவைகள் காந்தப்புலத்தை மட்டும் பயன்படுத்தி வழியைக் கண்டுபிடிப்பதில்லை. அவை சூரியனையும் நட்சத்திரங்களையும் வைத்தும் பாதைகளைக் கண்டறியுமாம்.












Click it and Unblock the Notifications