இந்தியா போட்டுக்கொடுத்த பாதை.. பட்டென பிடித்துக்கொள்ளும் சீனா.. வசமாக வலையில் சிக்கும் அமெரிக்கா!
டெல்லி: இந்தியாவை போல ரஷ்யாவுடன் எண்ணெய் வர்த்தகத்தை சீனா அதிகரிக்க உள்ளது. இது அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட மேற்கு உலக நாடுகளுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தொடர்ந்து 6 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. ஆனால் உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் வீதம் கொஞ்சம் சீராகவே உள்ளது. அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் எரிபொருட்கள் வேகமாக உயர்ந்து வருகின்றன.
இதற்கு காரணம் இந்தியா ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலையில் தள்ளுபடியில் கச்சா எண்ணெயை வாங்குகிறது. இந்தியன் ஆயில் நிறுவனத்தை தொடர்ந்து இந்துஸ்தான் பெட்ரோல் நிறுவனமும் ரஷ்யாவிடம் இருந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்க முடிவு செய்துள்ளது.

இந்தியா அள்ளிப்போடுகிறது
இரண்டு நிறுவனங்களும் சேர்ந்து மொத்தமாக 2 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. இதனால் இந்தியாவில் இப்போதைக்கு கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த டிசம்பரில் இருந்து மார்ச் வரை ரஷ்யாவிடம் இருந்து ஒரு பேரல் கூட வாங்காத இந்தியா அதன்பின்பு மட்டும் 5 கார்கோ கப்பலில் மொத்தம் 6 மில்லியன் பேரல்களை வாங்கி உள்ளது. கடந்த வருடம் மொத்தமாக வாங்கிய கச்சா எண்ணெயில் பாதி அளவை இந்த வருடம் வெறும் ஒன்றரை மாதத்தில் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தள்ளுபடி விலையில் வாங்கி உள்ளது.

வாங்க ஆளில்லை
ரஷ்யாவின் மீதான பொருளாதார தடை காரணமாக அந்த நாடு எண்ணெய் ஏற்றுமதியை முறையாக செய்ய முடியவில்லை. இதனால் ரஷ்ய நிறுவனங்கள் தள்ளுபடி விலையில் எண்ணெய்யை விற்க முடிவு செய்தது. ஆனால் இந்தியாவை தவிர வேறு நாடுகள் இதை வாங்க ஆர்வம் காட்டவில்லை. அமெரிக்காவின் நட்பு நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து கூடுதல் எண்ணெய் வாங்க விரும்பவில்லை. அதேபோல் ஆப்ரிக்க நாடுகள் எண்ணெய் குறைந்த விலையில் கிடைத்தாலும் அதை வாங்கும் பொருளாதார சூழ்நிலை இல்லாமல் இருக்கிறது.

சீனாவும் திட்டம்
இந்தியா மட்டுமே இப்போது ரஷ்யாவிடம் இருந்து கூடுதல் கச்சா எண்ணெய்களை வாங்கி வருகிறது. இந்த நிலையில்தான் இந்தியாவை போல ரஷ்யாவுடன் எண்ணெய் வர்த்தகத்தை சீனா அதிகரிக்க உள்ளது. இது அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட மேற்கு உலக நாடுகளுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சிஎன்பிசி ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் ரஷ்யாவிடம் இருந்து சீனா விரைவில் தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்கும்.

இரண்டு நாடுகளுக்கு பயன்
ரஷ்யாவிடம் அதிகம் எண்ணெய் வாங்கும் நாடுகளில் தற்போது முதலிடத்தில் இருப்பது சீனாதான். தினமும் 1.6 மில்லியன் பேரல் எண்ணெய்களை ரஷ்யாவிடம் இருந்து சீனா கடந்த வருடம் வாங்கியது. இப்போது தள்ளுபடி விலையால் ரஷ்யாவிடம் ஏகப்பட்ட கச்சா எண்ணெய் பேரல்கள் உள்ளன. அமெரிக்காவிற்கு செல்ல வேண்டிய எண்ணெய்கள் கிடங்கில் உள்ளன. இதில் பாதியை இந்தியா வாங்கி வரும் நிலையில், சீனாவும் விரைவில் தள்ளுபடி விலையில் எண்ணெய் வாங்கும் என்று சிஎன்பிசி தெரிவித்துள்ளது.

மற்ற நாடுகளுக்கு உயரும்
இது அமெரிக்கா உள்ளிட்ட மற்ற நாடுகளின் கச்சா எண்ணெய் மார்க்கெட்டை பாதிக்கும். ஏனென்றால் அமெரிக்கா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவது இல்லை. அதோடு வெனிசுலா, ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்கும் ஒப்பந்தங்கள் இறுதி ஆகவில்லை. மேலும் சவுதி கூடுதல் எண்ணெய் ஏற்றுமதி செய்ய ஒப்புக்கொள்ளவில்லை . இதனால் அமெரிக்கா எண்ணெய் தட்டுப்பாட்டை எதிர்நோக்கி உள்ளது. சரியாக சொல்ல வேண்டும் என்றால் அமெரிக்கா ரஷ்யாவிற்கு விரித்த வலையில் தானே சிக்கி உள்ளது.

ரஷ்யா எதிர்ப்பு
ஐரோப்பா நாடுகளுக்கும் இதே கதிதான். ஐரோப்பா நாடுகள் ரஷ்யாவை எதிர்த்தாலும் தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கிக்கொண்டுதான் இருக்கிறது. இருந்தாலும் இந்தியாவை போல கூடுதல் எண்ணெய் வாங்க மாட்டோம் என்று தெரிவித்துவிட்டது. இப்போது ரூபிளில் வர்த்தகம் செய்ய ஐரோப்பாவை ரஷ்யா நெருக்கி வருவதால் இந்த எண்ணெய் வர்த்தகமும் பாதிக்கும். இதனால் அந்த நாடுகளிலும் எண்ணெய் விலை உயரும். ஆனால் இதன் அர்த்தம் இந்தியா, சீனாவில் எண்ணெய் விலை உயராது என்பது அல்ல.. இந்தியா, சீனாவிலும் எண்ணெய் விலை உயரும்.. ஆனால் மேற்கு உலக நாடுகள் அளவிற்கு வேகமாக உயரும் வாய்ப்புகள் குறைவே என்கிறார்கள் உலக அரசியல் வல்லுனர்கள்.












Click it and Unblock the Notifications