மசூதியில் மோதல், வீடியோ கால், கடைசியில் கண்ணீர் புகை குண்டு.. லஷ்கர் தீவிரவாதி கொல்லப்பட்டது எப்படி?
டெல்லி: காஷ்மீரில் மசூதிக்குள் பதுங்கியிருந்த லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி லத்தீப் பட்டை சரணடையுமாறு பலமுறை கேட்டு பிறகும் அவன் அதை ஏற்கவில்லை. நீண்ட நேர வீடியோ கால் பேச்சுவார்த்தைக்கு பிறகும் அவர் சரணடைய மறுத்ததால், மசூதிக்குள் கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டு வெளியே வரவழைக்கப்பட்டான். அங்கிருந்து தப்பியோட முயன்றபோது பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.
ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் இன்று அதிகாலை தொடங்கிய இந்த என்கவுன்டர் பல மணி நேரம் நீடித்தது. இந்தியாவில் பல்வேறு தாக்குதல்களை நடத்திய லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த லத்தீப் பட்டை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். இதனால் அவர் மசூதிக்குள்ள சிக்கிக் கொண்டார்.

என்ன நடந்தது!
மசூதிக்குள் தீவிரவாதி பதுங்கியிருந்ததால், வழிபாட்டுத் தலத்துக்கு சேதம் ஏற்படாமல் அவரை வெளியேற்றுவது பாதுகாப்பு படையினருக்கு சவாலாக இருந்தது. குல்காம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அனயத் அலி, லத்தீப் பட்டுடன் நீண்ட நேரம் வீடியோ கால் மூலம் பேசி சரணடையுமாறு வலியுறுத்தினார். 9 ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் படையின் கமாண்டிங் அதிகாரியும் அவரிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினார். சரணடைந்தால் உயிருடன் விடுவதாகவும் உறுதியளித்தனர்.
அப்போது, "நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். சரணடைந்தால் எல்லாம் முடிந்துவிடும்: என்று அதிகாரி ஒருவர் கூறியபோதும், "என்னுடன் இறைவன் மட்டுமே இருக்கிறார்" என்று பதிலளித்து லத்தீப் சரணடைய மறுத்ததாக கூறப்படுகிறது. பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், பாதுகாப்பு படையினர் மசூதிக்குள் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதையடுத்து வெளியே வந்த லத்தீப், தப்பியோட முயன்றபோது சுட்டு கொல்லப்பட்டார்.
தேடுதல் வேட்டை
கடந்த திங்கள்கிழமை லத்தீப் பட்டின் கூட்டாளியான உமர் நிசார் தார் என்கவுன்டரில் கொல்லப்பட்டதை தொடர்ந்து, லத்தீப்பை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. அவர் அங்கிருந்து தப்பியதால், தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. புதன்கிழமை அதிகாலை கிடைத்த உளவுத்துறை தகவலையடுத்து, குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்து தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். அப்போது லத்தீப் பதுங்கியிருந்த இடம் கண்டறியப்பட்டு, துப்பாக்கி சண்டை தொடங்கியது.
யார் இந்த லத்தீப் பட்?
லத்தீப் பட் கடந்த 2025 நவம்பர் 18ஆம் தேதி லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் இணைந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். எல்லை தாண்டி பயங்கரவாதத்தால் மூளைச்சலவை செய்யப்பட்ட ஒருவராகவே லத்தீப் பட் இருக்கிறார். மேலே இருந்து வந்த உத்தரவுகளின்படி காஷ்மீரில் அமைதி, சுற்றுலா மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை சீர்குலைக்க அவர் திட்டமிட்டதாக கூறப்படுகிறது.
பல குற்ற சம்பவங்களில் தொடர்பு
கடந்த நவம்பர் 11ஆம் தேதி குல்காமின் அக்ரான் பகுதியில் சிஆர்பிஎஃப் சோதனை சாவடி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3 வீரர்கள் காயமடைந்தனர். இந்த தாக்குதலில் லத்தீப் மற்றும் உமர் நிசார் தார் தொடர்புடையதாக போலீசார் சந்தேகித்தனர். தாக்குதலுக்கு முன்பு இருவரும் பல இடங்களில் நோட்டமிட்ட சிசிடிவி காட்சிகளையும் போலீசார் வெளியிட்டிருந்தனர்.
மேலும், ஜூலை 22ஆம் தேதி அனந்த்நாக் பகுதியில் போலீசார் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு காவலர் கொல்லப்பட்டது மற்றும் ஆகஸ்ட் 1ஆம் தேதி குல்காமில் 2 புலம்பெயர் தொழிலாளர்கள் கொல்லப்பட்ட சம்பவங்களிலும் லத்தீப்பிற்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.




Click it and Unblock the Notifications
