"என்னால் முடியுமா?" இந்திரா படுகொலைக்கு பின் தயங்கிய ராஜீவ் காந்தி! பிரதமராக சம்மதிக்க வைத்த பிரணாப்
டெல்லி: முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984 அக்டோபர் 31ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, நாட்டின் அடுத்த பிரதமராக ராஜீவ் காந்தி பொறுப்பேற்றார். ஆனால், இந்த அதிகார மாற்றம் அவ்வளவு எளிதாக நடக்கவில்லை. இடைக்கால பிரதமரை நியமிப்பதா, ராஜீவ் காந்தியை உடனடியாக முழுநேர பிரதமராக்குவதா, யார் பதவி பிரமாணம் செய்து வைப்பார் என ஏகப்பட்ட விவாதங்கள் திரைக்கு பின்னால் நடந்துள்ளன.
இந்திய பிரதமராக இருந்த இந்திரா காந்தி 1984ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் வைத்தே படுகொலை செய்யப்பட்டார். அவருக்கு பாதுகாப்பு தர வேண்டிய வீரர்களில் சிலராலே அவர் சுட்டு கொல்லப்பட்டார். இந்திராவின் இந்த எதிர்பாராத மறைவு தேசிய அரசியலில் மிக பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியது.

ராஜீவ் காந்தி
பிரதமர் திடீரென உயிரிழந்ததால் அடுத்து பிரதமர் யார் என்ற கேள்வி எழுந்தது. அப்போது திரைக்கு பின்னால் என்ன நடந்தது.. ராஜீவ் பிரதமரானது எப்படி ஆகியவை குறித்த தகவல்களை முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தனது நினைவு குறிப்புகளில் விரிவாக பதிவு செய்துள்ளார்.
இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட செய்தி கிடைத்ததும், அப்போது மேற்கு வங்கத்தில் இருந்த மூத்த காங்கிரஸ் தலைவர்கள் டெல்லிக்குத் திரும்பினர். விமானத்தில் வரும்போதே அடுத்த பிரதமர் யார் என்பது குறித்து ஆலோசனை தொடங்கியது. இந்திரா காந்தி மறைவுக்கு பிறகு உடனடியாக இடைக்கால பிரதமரை நியமிக்க வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது. இதற்கு முன்பு ஜவஹர்லால் நேரு மறைவுக்கு பிறகும், லால் பகதூர் சாஸ்திரி மறைவுக்கு பிறகும் குல்சாரிலால் நந்தா இடைக்கால பிரதமராக பொறுப்பேற்றிருந்தார்.
நிலையான தலைமை
அதேபோன்ற நடைமுறையை பின்பற்றலாம் என்ற யோசனையை அப்போது காங்கிரஸ் தலைவராக இருந்த பல்ராம் ஜாக்கர் முன்வைத்ததாக பிரணாப் முகர்ஜி குறிப்பிட்டுள்ளார். ஆனால், பிரதமர் படுகொலை என்பது அசாதாரண சூழல். அப்போது இடைக்கால பிரதமர் என்பது குழப்பத்தை முழுமையாக தீர்க்க உதவாது. தீர்க்கமான நிலையான தலைமை உருவாக்கப்பட வேண்டும் என்று பிரணாப் கருதினார்.
அப்போது இந்திரா காந்தியின் அமைச்சரவையில் நம்பர் 2 இடத்தில் இருந்த பிரணாப் முகர்ஜி, ராஜீவ் காந்தியிடம் பிரதமர் பொறுப்பை ஏற்குமாறு கேட்டுக்கொண்டார். ராஜீவ் தயங்கிய போதும் அவருக்கு சப்போர்டாக இருந்துள்ளார். விமானத்தின் பின்பகுதிக்கு ராஜீவ் காந்தியை தனியாக அழைத்துச் சென்ற பிரணாப், பிரதமர் பொறுப்பை ஏற்று வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி முழுமையாக அவருக்கு ஆதரவளிக்கும் என்றும் உறுதியளித்தார்.
ராஜீவ் காந்தி சந்தேகம்
அப்போது ராஜீவ் காந்தி, "என்னால் இதை செய்ய முடியும் என்று நினைக்கிறீர்களா?" என்று கேட்டதாக பிரணாப் தனது நினைவுக் குறிப்புகளில் தெரிவித்துள்ளார். அதற்கு, கட்சியில் உள்ள அனைவரும் அவருக்கு ஆதரவாக இருப்பார்கள் என்று பிரணாப் நம்பிக்கை அளித்துள்ளார். அதன் பிறகே ராஜீவ் காந்தி பிரதமர் பதவியை ஏற்க சம்மதம் தெரிவித்துள்ளார்.
ராஜீவ் சம்மதித்த பிறகும் இன்னொரு சிக்கல் இருக்கிறது. அது பதவியேற்பை எப்படி எப்போது நடத்துவது என்பது.! ஏனென்றால் அப்போது குடியரசு தலைவராக இருந்த கியானி ஜெயில் சிங் வெளிநாட்டில் இருந்தார். இந்திரா காந்தியின் ஆட்சி காலத்தில் நடைபெற்ற ஆபரேஷன் ப்ளூஸ்டார் நடவடிக்கைக்குப் பிறகு, நேரு குடும்பத்துக்கும் குடியரசு தலைவருக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டு இருந்தது. எனவே, அவர் திரும்பி வந்தால் ராஜீவ் காந்தியை பிரதமராக நியமிக்க தயங்கக்கூடும் என்ற அச்சம் ராஜீவின் நெருங்கிய வட்டாரத்தில் சிலருக்கு இருந்தது.
துணை குடியரசு தலைவர்
இதனால் குடியரசுத் தலைவர் திரும்பும் வரை காத்திருக்காமல், குடியரசு துணைத் தலைவரை கொண்டு ராஜீவ் காந்திக்கு உடனடியாக பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என்று அருண் நேரு உள்ளிட்ட சிலர் வலியுறுத்தியதாக பிரணாப் குறிப்பிட்டுள்ளார். ஆனால், குடியரசு தலைவரை தவிர்த்து பதவியேற்பு என்பது அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணானது என்றும் அரசியல் ரீதியாகவும் அது சரியான முடிவாக இருக்காது என்றும் பிரணாப் உள்ளிட்டோர் வாதிட்டனர். இறுதியில் குடியரசுத் தலைவர் ஜெயில் சிங் டெல்லி திரும்பும் வரை காத்திருக்க முடிவு செய்யப்பட்டது. பின்னர் அவரே ராஜீவ் காந்திக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
ஓரம்கட்டப்பட்டார்
இதில் விஷயம் என்னவென்றால் ராஜீவ் காந்தி பிரதமராக பொறுப்பேற்பதற்கு இந்தளவுக்கு முக்கிய பங்காற்றிய பிரணாப் முகர்ஜியே, பின்னர் ராஜீவ் காந்தியின் அமைச்சரவையில் இருந்து ஓரம்கட்டப்பட்டார். இதனால் இந்திரா காந்தி மறைந்தபோது பிரணாப் தானே பிரதமராக முயற்சி செய்தார் என்றும் அதன் காரணமாகவே ராஜீவ் அமைச்சரவையில் இவர் இடம்பெறவில்லை என்றும் சொல்லப்பட்டது. ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை பிரணாப் முகர்ஜி தனது வாழ்நாள் முழுக்க மறுத்தே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




Click it and Unblock the Notifications
