ஏசு காலத்திற்கும் முந்தையது.. 3500 ஆண்டுகள் பழமையான கரடி! உறைந்துபோன ஆய்வாளர்கள்! இது எப்படி
3500 ஆண்டுகள் பழமையான கரடி ஆய்வாளர்களைத் திகைக்க வைத்துள்ளது.
டெல்லி: சுமார் 3500 ஆண்டுகளாக அப்படியே புதைந்து கிடந்த கரடியை ஆய்வாளர்கள் இப்போது கண்டுபிடித்துள்ளனர். இத்தனை ஆண்டுகள் பழமையான கரடி முழுமையாகக் கண்டறிவது இதுவே முதல்முறையாகும்.
இப்போது நாம் இருக்கும் பூமி என்பது கடந்த காலங்களில் எப்போதும் இப்படியே இருந்தது இல்லை. அவை பல கோடி ஆண்டுகளாக மெல்ல மெல்ல பரிணாம வளர்ச்சி அடைந்தே இப்போது இருக்கும் நிலையை எட்டியுள்ளது.
கடந்த காலங்களில் வாழ்ந்த பல விலங்குகள் இப்போது இல்லை. அவை பல்வேறு காரணங்களால் முழுமையாக அழிந்துவிட்டது. டைனாசர்கள் தொடங்கி இதற்கு நாம் விலங்குகளை உதாரணமாகச் சொல்லலாம்.

கரடி
இருப்பினும் டைனாசர்களின் எலும்புகள், அவற்றின் புதை படிவங்களைக் கொண்டு கடந்த காலங்களில் வாழ்ந்த விலங்குகள் குறித்து நாம் ஆய்வு செய்து வருகிறோம். அப்படிதான் இப்போது ஆய்வாளர்களுக்கு சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு விலங்கு குறித்து ஆய்வு செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது.. கிழக்கு சைபீரியாவின் உறைந்த காடுகளில் அப்படித்தான் மிகவும் சரியான நிலையில், சுமார் 3,500 ஆண்டுகளாக ஒரு பழுப்பு கரடி உறைந்து இருக்கிறது. ஆர்க்டிக்கில் உள்ள ஒரு ஆள்நடமாட்டம் இல்லாத தீவில்தான் இந்த பழுப்பு கரடியை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

3500 ஆண்டுகள்
அதன் உடல் உறைந்த நிலையில் இருந்ததால் இத்தனை ஆண்டுகள் ஆகியும் அது அழுகிவிடவில்லை. இதனால் 3500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த விலங்கை உடற்கூராய்வு செய்யும் ஒரு வாய்ப்பு ஆய்வாளர்களுக்குக் கிடைத்துள்ளது. இது மிகவும் தனித்துவமானது என்றும் அந்தக் காலத்தில் வாழ்ந்த பழுப்பு கரடியின் முழுமையான சடலம் கிடைப்பது இதுவே முதல்முறை என்றும் கிழக்கு சைபீரியாவின் ஃபெடரல் பல்கலைக்கழக ஆய்வாளர் மாக்சிம் செப்ரசோவ் தெரிவித்துள்ளார்.

எங்கே இருந்தது
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து கிழக்கே 4,600 கிமீ தொலைவில் உள்ள நியூ சைபீரிய தீவுக்கூட்டத்தின் ஒரு பகுதியான போல்ஷோய் லியாகோவ்ஸ்கி தீவில் பெர்மாஃப்ரோஸ்ட் என்ற பகுதியில் தான் இந்த கரடி கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 2020இல் அங்கு ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சிலர், இந்த கரடி குறித்து தகவல் தெரிவித்துள்ளனர். இது போல்ஷோய் ஈதெரிகன் ஆற்றுக்கு அருகே கண்டுபிடிக்கப்பட்டதால் இதற்கு ஈதெரிகன் பழுப்பு கரடி என்றே பெயரிட்டுள்ளனர்.

ஏன் முக்கியம்
தீவில் இருந்த குளிர்ச்சியான வெப்பநிலை கரடியின் மென்மையான திசுக்களை 3,460 ஆண்டுகளாகப் பாதுகாப்பாக வைத்துள்ளது. பறவை இறகுகள் மற்றும் தாவரங்களைக் கொண்ட அதன் இறுதி எச்சமும் அங்குப் பத்திரமாக இருந்துள்ளது.. அந்தக் கரடி 1.55 மீட்டர் (5.09 அடி) உயரம், சுமார் 78 கிலோ எடை கொண்டதாக இருந்துள்ளது. இத்தனை ஆண்டுகள் பழமையான விலங்கு ஆய்வாளர்கள் கைகளில் கிடைப்பது இதுவே முதல் முறை.. அதன் உள் உறுப்புகள் குறித்து ஆய்வு செய்யவும் மூளையை ஆய்வாளர்கள் ஆய்வு செய்கிறார்கள்.

அப்படியே இருந்த பாகங்கள்
அந்த கரடியை உடற்கூராய்வு செய்யும்போது, அதன் இளஞ்சிவப்பு திசு மற்றும் மஞ்சள் கொழுப்பு அப்படியே இருந்துள்ளது. மேலும், ஆய்வுக்காக அதன் மூளையையும் தனியாக எடுத்துள்ளனர். ரஷ்யாவின் வடகிழக்கில் இப்போது காணப்படும் நவீனக் கால கரடிகளின் டிஎன்ஏவில் இருந்து இந்த பழங்கால கரடிகளுக்குப் பெரிய வேறுபாடு இல்லை என்பதை மரபணு பகுப்பாய்வு காட்டுகிறது.. கரடி சுமார் 2-3 வயதில் உயிரிழந்திருக்கும் என்றும் அதன் முதுகுத் தண்டுவடத்தில் ஏற்பட்ட காயம் காரணமாகவே அது உயிரிழந்திருக்கக் கூடும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

அங்கு சென்றது எப்படி
அதேநேரம் இந்த தீவு நிலப்பரப்பில் இருந்து 50 கிமீ தனித்து இருக்கிறது. இந்த இடத்திற்கு அந்தக் கரடி எப்படி வந்தது என்பதும் யாருக்கும் தெரியவில்லை. முன்பு அங்கு முழுக்க பனிக்கட்டி இருந்து இருக்கலாம்.. அதன் மீது அப்படியே கடந்து சென்றிருக்கலாம். அல்லது இடைப்பட்ட தூரத்தை நீந்தி கடந்திருக்கலாம்.. அதுவும் இல்லையென்றால்.. அப்போது தீவு நிலப்பரப்பின் ஒரு பகுதியாகவே இருந்திருக்கலாம் என்று கணித்துள்ளனர். லியாகோவ்ஸ்கி தீவுகளில் பல பொக்கிஷங்கள் உள்ள நிலையில், அங்கு ஆய்வாளர் தொடர்ந்து முகாமிட்டு வருகின்றனர்












Click it and Unblock the Notifications