ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு அனுமதி.. அப்படி என்ன ஸ்பெஷல்? ஏன் அத்தனை நாடுகளும் ரஷ்யாவிடம் செல்கிறது
டெல்லி: ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் அவசரக்கால பயன்பாட்டிற்கு இந்தியாவில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பூசி மற்ற தடுப்பூசிகளிலிருந்து சற்று வித்தியாசமானது. வளரும் நாடுகளும் ஏழ்மை நிலையுள்ள நாடுகளும் பெரும்பாலும் ஸ்புட்னிக் வி தடுப்பூசியையே பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Recommended Video
இந்தியாவில் தற்போது கொரோனா பரவலின் தாக்கம் மெல்ல அதிகரித்து வருகிறது. இதனால் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், மகாராஷ்டிரா, டெல்லி போன்ற மாநிலங்களில் தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் அவசரக்கால பயன்பாட்டிற்கு இந்தியாவில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. நேற்று மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரை செய்திருந்த நிலையில், இன்று ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மூன்றாவது தடுப்பூசியாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள ஸ்புட்னிக் வி குறித்து சில விரிவான தகவல்களைப் பார்க்கலாம்.

ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி
ரஷ்யாவின் கமலேயா தேசிய ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பூசிதான் ஸ்புட்னிக் வி. கடந்த ஆண்டு கொரோனா குறித்த ஆய்வுகளே முழுமை பெறாதபோது தடுப்பூசியைக் கண்டுபிடித்துவிட்டதாக ரஷ்யா அறிவித்திருந்தது. இதனால் பல நாடுகளும் ஸ்புட்னிக் வி தடுப்பூசியைப் பயன்படுத்தத் தயக்கம் காட்டின. இருப்பினும் மருத்துவ சோதனை முடிவுகளை வெளியனாதைத் தொடர்ந்து, தற்போது வரை 55 நாடுகளில் தடுப்பூசியின் அவசரக்கால பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

என்ன வித்தியாசம்
கோவிஷீல்டு தடுப்பூசியைப் போலவே இதுவும் ஒரு வைரல் வெக்டார் (Viral vector) வகை தடுப்பூசியாகும். ஆனால், கோவிஷீல்டு தடுப்பூசியில் இரண்டு டோஸ்களிலும் ஒரே வகையான வைரஸ் பயன்படுத்தப்படும். ஆனால், ஸ்புட்னிக் வி தடுப்பூசியில் இரண்டு டோஸ்களிலும் இரு வெவ்வேறு வைரல் வெக்டார் (rAd26-, rAd5-S) பயன்படுத்தப்படுகிறது.

எப்படி செயல்படுகிறது
இப்படி இரு வேறு வைரஸ்களை பயன்படுத்துவதால் உடலில் தோன்றும் நோய் எதிர்ப்புச் சக்தி அதிக காலம் நீடிக்கும் என ரஷ்யா ஆறாய்ச்சியளர்கல் தெரிவித்துள்ளனர். இந்த பலவீனப்படுத்தப்பட்ட வைரசால் நம் உடலுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. இவை கொரோனாவின் புரதங்களைக் கொண்டிருப்பதால், அடுத்த முறை கொரோனா வைரஸ் நமது உடலில் நுழையும்போது, அதை எளிதில் நமது உடல் அடையாளம் கண்டு கொண்டு அழிக்கும். ஸ்புட்னிக் வி தடுப்பூசி 21 நாட்கள் இடைவெளியில் இரண்டு டோஸ்களாக அளிக்கப்பட வேண்டும்.

சேமிக்கும் இடம்
ஸ்புட்னிக் வி தடுப்பூசியை அதன் திரவ வடிவத்தில் -18°C சேமிக்க வேண்டும். அதேநேரம் உலர்ந்த வடிவத்தில் அதை 2 முதல் 8 டிகிரியில் பராமரிக்கலாம். அதாவது சாதாரண ப்ரிட்ஜிலேயே ஸ்புட்னிக் வி தடுப்பூசியைச் சேமிக்க முடியும். அதாவது குளிர் சங்கிலி உள்கட்டமைப்பில் முதலீடு செய்யத் தேவையில்லை. இதனால், வளரும் நாடுகளும் ஏழ்மை நிலையுள்ள நாடுகளும் பெரும்பாலும் ஸ்புட்னிக் வி தடுப்பூசியையே பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தடுப்பாற்றல் எவ்வளவு
உலகிலேயே முதல் கொரோனா தடுப்பூசியாக ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி கருதப்படுகிறது. ரஷ்யா, இந்தியா, ஐக்கிய அமீரகம் என பல்வேறு நாடுகளில் ஸ்புட்னிக் வி தடுப்பூசி சோதனை நடைபெற்றது. அதில் இந்தத் தடுப்பூசி 91.6% வரை பலனளிக்கும் எனத் தெரியவந்துள்ளது. தற்போதுவரை ஈரான், ஐக்கிய அமீரகம், இலங்கை என 50க்கும் மேற்பட்ட நாடுகளில் ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் அவசரக்கால பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளித்துள்ளன.

பக்க விளைவுகள் என்ன
ஆக்ஸ்போர்ட் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கிய தடுப்பூசிகளை எடுத்துக்கொள்ளும் சிலருக்கு ரத்த உறைதல் பிரச்சினை ஏற்படுவதாக ஐரோப்பிய நாடுகள் தெரிவித்தன. இதன் காரணமாக சில நாடுகள் ஆக்ஸ்போர்ட் தடுப்பூசிக்குத் தற்காலிகமாகத் தடையும் விதித்தன. இதுபோல எவ்வித மோசமான பக்கவிளைவுகளும் ஸ்புட்னிக் வி தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களிடம் கண்டறியப்படவில்லை. இருந்தாலும்கூட மேற்கத்திய நாடுகள் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை எடுத்துக்கொள்ள இன்னும்கூட தயக்கம் காட்டியே வருகின்றன.

படையெடுக்க என்ன காரணம்
மேற்கத்திய நாடுகளும், ஐரோப்பிய நாடுகளும் தற்போது வரை பெரும்பாலும் பைசர், மாடர்னா, ஆக்ஸ்போர்ட் ஆராய்ச்சியாளர்களின் தடுப்பூசிகளையே பயன்படுத்துகின்றன. இந்தத் தடுப்பூசிகளுக்கு உலகளவில் பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு பற்றக்குறை இல்லை. உலக நாடுகள் ரஷ்யாவை நோக்கிப் படையெடுக்க இதுவும் முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications