1000 கிமீ நீண்ட மழை மேகங்கள்.. கொட்டி தீர்க்குதே கனமழை.. இப்படி ஒன்று நடந்ததே இல்லை போல
சென்னை: வழக்கமாக மார்ச் மாதம் இந்தியா முழுக்கவே வெப்பம் அதிகரித்துவிடும். ஆனால், இந்த முறை வழக்கத்திற்கு மாறாக பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. ஆப்கானிஸ்தானில் ஆரம்பித்து சுமார் 1000 கிமீ தொலைவுக்கு உருவாகியுள்ள மிக நீளமான மழை பேண்ட் தான் இதற்குக் காரணம் என்கிறார்கள். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இந்தியாவில் ஏப்ரல்- மே தான் கோடைக் காலம் என்றாலும் கடந்த சில ஆண்டுகளாகவே பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் தொடக்கத்திலேயே வெப்பம் ஆரம்பித்துவிடும். நாடு முழுக்கவே பரவலாக வெப்பம் அதிகமாகவே இருக்கும். ஆனால், இந்த முறை இந்தியாவின் பல பகுதிகளிலும், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் முழுவதும் வழக்கத்திற்கு மாறான வானிலை நிலவுகிறது.

மழை
இதன் காரணமாகவே கோடைக் காலம் தொடங்கும் மார்ச் மாதத்தில் பல பகுதிகளில் இடியுடன் கூடிய காற்று, கடும் மழை அவ்வளவு ஏன் ஆலங்கட்டி மழை கூட பெய்கிறது. இந்த வினோதமான வானிலை உருவானதே கூட மிகவும் தனித்துவமானது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்!
1000 கிமீ மழை மேகம்
இந்த வானிலை நிகழ்வு சுமார் 1,000 கி.மீ. நீள மழை பேண்ட்டை கொண்டு வருகிறது. இது ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்குள் பரவியுள்ளது. வழக்கமாக மேற்கு டிஸ்டர்பென்ஸ் மத்திய தரைக்கடல் தாழ்வுகளிலிருந்து உருவாகி, வடகிழக்கு நோக்கிச் சென்று, குளிர்காலத்தில் பனி மற்றும் குளிரைத் தருகின்றன. ஆனால், தற்போது straight trough உருவாகியுள்ளது. இதுவே இந்த வினோத வானிலைக்குக் காரணம். சமீப காலங்களாக கிளைமேட் இப்படி தான் கணிக்கவே முடியாதவையாக மாறி வருகின்றன.
வடக்கு பாகிஸ்தான் மீதுள்ள தீவிர மேற்கு திசை சுழற்சி, வடமேற்கு இந்தியாவில் பரவலான இடியுடன் கூடிய மழை, மணிக்கு 40-80 கி.மீ வேகத்தில் காற்று, ஆங்காங்கே ஆலங்கட்டி மழையை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாகவே இமாச்சல பிரதேச அடிவார பகுதிகள், மேற்கு வங்கம், சிக்கிமில் ஏற்கனவே கனமழை முதல் மிகக் கனமழை பதிவாகியுள்ளது. தென் கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தமிழகத்தில் கனமழையும், பல மாநிலங்களில் ஆலங்கட்டி மழையும் பெய்துள்ளது.
மேற்கு திசை சுழற்சி
இந்த மேற்கு திசை சுழற்சியானது வட மத்தியப் பிரதேசம், கிழக்கு உத்தரப் பிரதேசம், மேற்கு ராஜஸ்தான், ஹரியானா, வடகிழக்கு அசாம், கடலோர ஆந்திரா, உள் தமிழகம், கேரளா ஆகிய பகுதிகளில் உள்ள பல கீழ்மட்டச் சுழற்சிகளுடன் இணைகிறது. மேற்கு இமயமலை, அதை ஒட்டிய சமவெளிப் பகுதிகளில் மேற்கு திசை சுழற்சி இன்றும் ஆக்டிவாகவே இருக்கும். அதன் தீவிரம் பின்னர் தான் குறையுமாம்.
மத்திய தரைக்கடல்
மத்திய தரைக்கடல், காஸ்பியன், கருங்கடல், பாரசீக வளைகுடாப் பகுதிகளில் இருந்தே இந்த வழக்கத்திற்கு மாறான மேற்கு திசை சுழற்சிக்குத் தேவையான முக்கிய ஈரப்பதம் கிடைக்கிறது. இது மத்திய கிழக்கு வழியாகக் கிழக்கே செல்லும்போது, இமயமலையின் புவியியல் அமைப்பு அரபிக்கடல் ஈரப்பதத்தை அதிகரிக்கிறது. இது தீவிர மழைக்குக் காரணமாக மாறுகிறது.
இதன் காரணமாகவே வரும் நாட்களில் வட இந்தியாவில் மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக மார்ச் மாதமே வெப்பம் அதிகரிக்கும் சூழலில், இப்போது அதற்கு நேர்மாறான வானிலை இருக்கிறது. மழையும் அதிகரிக்கிறது.












Click it and Unblock the Notifications