"எனக்கு மீண்டும் பயம் வந்துவிட்டது.." பாலியல் பலாத்கார குற்றவாளிகள் விடுவிப்பு! பில்கிஸ் பானோ வேதனை
டெல்லி: 2002 குஜராத் கலவரத்தின்போது கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பில்கிஸ் பானோவின் வழக்கில் தண்டனை பெற்ற 2 குற்றவாளிகளின் ஆயுள் தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்து ஜாமீன் வழங்கியுள்ளது. இந்த உத்தரவு தனக்கு மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக பில்கிஸ் பானோ வேதனையுடன் தெரிவித்துள்ளார். மேலும், இந்த முடிவை எடுப்பதற்கு முன்பு தனது தரப்பை நீதிமன்றம் கேட்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
2002ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து குஜராத்தில் பெரும் கலவரம் வெடித்தது. அப்போது உயிரை காப்பாற்றி கொள்ள தப்பி சென்ற பில்கிஸ் பானோவை ஒரு கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது. அப்போது அவருக்கு 21 வயது.. 5 மாத கர்ப்பிணியாகவும் இருந்தார். அவரது 3 வயது மகள் உட்பட குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கொல்லப்பட்டனர்.

கூட்டு பலாத்காரம்
கர்ப்பிணி பெண் என்று கூட பார்க்காமல் அவரை அந்த கும்பல் கூட்டு பலாத்காரம் செய்தது. இந்த வழக்கில் மொத்தம் 11 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அப்படி இந்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர்கள் தான் பிபின் சந்திர ஜோஷி, பிரதீப் மோர்தியா. இருப்பினும், இவர்கள் இருவரின் ஆயுள் தண்டனையை உச்ச நீதிமன்றம் நேற்று நிறுத்தி வைத்தது. அவர்கள் 17 ஆண்டுகள் சிறையில் இருந்ததை குறிப்பிட்டு, அவர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கவும் உத்தரவிட்டது.
பில்கிஸ் பானோ
இது நாடு முழுக்க பேசுபொருளான நிலையில், இது தொடர்பாக தனது வழக்கறிஞர் மூத்த வழக்கறிஞர் ஷோபா குப்தா மூலம் பில்கிஸ் பானோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர், "என்னை அழைத்து கேட்காமலும், எனது தரப்பு வாதங்களை கேட்காமலும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊடகச் செய்திகள் மூலமாக தான் இதைத் தெரிந்துகொண்டேன். மீண்டும் அதே பழைய பயம் எனக்கு வந்துவிட்டது. எனக்காகவும், எனது குடும்பத்துக்காகவும், குழந்தைகளுக்காகவும் இப்போது மீண்டும் அச்சப்படுகிறேன்.
கலவரத்தின்போது எனது மகள், குடும்பம், வீடு மட்டுமின்றி மனிதநேயத்தின் மீதான நம்பிக்கையையும் இழந்தேன். கடந்த 24 ஆண்டுகளாக எனக்காவும் அனைத்து பெண்களுக்காகவும் நீதிக்காக தொடர்ந்து போராடி வருகிறேன். மக்களின் ஆதரவும் ஒற்றுமையும் தான் இந்த நீண்ட சட்ட போராட்டத்தை தொடர எனக்கு தைரியம் கொடுத்தது.. ஆனால், தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு தான் போராடி பெற்ற நீதியையே இழந்துவிட்டது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.
போராடுவேன்
நீதிமன்றத்தில் எனது குரல் கேட்கக்கூடாத? இந்த உத்தரவை எதிர்த்து நான் போராடுவேன். என் குழந்தைகள் வாழ்நாள் முழுவதும் பயத்துடனும் காயங்களுடனும் வாழக்கூடாது என்பதற்காக இதை செய்வேன். இந்நேரம் உயிருடன் இருந்திருக்க வேண்டிய எனது 3 வயது மகள் சலேஹாவுக்காகவும், அனைத்து பெண்களுக்காகவும் போராடுவேன்" என்று பில்கிஸ் தெரிவித்துள்ளார்.
பின்னணி
பிபின் சந்திர ஜோஷி, பிரதீப் மோர்தியா ஆகிய இருவரும் 17 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்ததை கருத்தில் கொண்டு உச்ச நீதிமன்றம் அவர்களின் தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது. அவர்களில் ஒருவருக்கு கடுமையான உடல் ஊனம் இருப்பதையும் கருத்தில் கொண்டே ஜாமீன் வழங்குவதாக நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், பி.பி. வரலே அடங்கிய அமர்வு தெரிவித்தது. நீதிமன்றம் விதித்துள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு இருவரையும் ஜாமீனில் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் பில்கிஸ் பானோ வழக்கில் சம்பவம் நடந்து 3 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டு இருந்தனர்.
இவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு, நீதிமன்றம் இவர்களை குற்றவாளி என்று தீர்ப்பளித்திருந்தது. இந்த சூழலில் தான் நீதிமன்றம் அவர்களுக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications
