பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்ட அபிநந்தனை நினைவிருக்கா? விமானப்படையில் திடீர் ஓய்வு.. என்ன நடந்தது?
டெல்லி: பாகிஸ்தானுடன் 2019ஆம் ஆண்டு நடந்த மோதலில் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு, அந்நாட்டில் 3 நாட்கள் சிறைபிடிக்கப்பட்ட இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் வர்தமான். இந்திய விமானப்படையில் பணியாற்றி வந்த இவர், முன்கூட்டியே ஓய்வு பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 22 ஆண்டுகள் இந்திய விமானப்படையில் பணியாற்றிய அவர், தற்போது தனியார் விமான நிறுவனத்தில் பைலட்டாக பணியில் இணைந்துள்ளாதக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் எப்போதுமே மோதல் போக்கே நிலவி வருகிறது. பாகிஸ்தான் நம்மிடம் நேரடியாக அத்துமீறாது. மாறாக பயங்கரவாதிகளை அனுப்பி அதன் மூலமாகவே அத்துமீறல் சம்பவங்களில் ஈடுபடும். இருப்பினும், இந்தியா சற்றும் தயங்காமல் அதற்கு தக்க பதிலடி கொடுக்கும். அப்படியொரு சம்பவம் தான் 2019ல் நடந்தது.

பயங்கரவாத தாக்குதல்
கடந்த 2019 பிப்ரவரியில் புல்வாமாவில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தனர். பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகளே இந்த தாக்குதலை நடத்தியிருந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. பாலகோட்டில் இருந்த ஜெய்ஷ்-இ-முகமது பயிற்சி முகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்தியா தெரிவித்தது.
இதற்கு அடுத்த நாள் பாகிஸ்தான் விமானப்படை பதிலடி தாக்குதலை நடத்தியது. அப்போது இந்திய விமானப்படை சார்பில் மிக்-21 பைசன் விமானத்தில் சென்ற விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான், பாகிஸ்தான் விமானப்படையின் எஃப்-16 போர் விமானத்தை வீழ்த்தினார். அப்போது பாகிஸ்தான் விமானப்படை நடத்திய அத்துமீறல் தாக்குதலில் அபிநந்தன் விமானமும் சுட்டு வீழ்த்தப்பட்டது.
பாகிஸ்தானில் இறங்கினார்
விமானத்திலிருந்து வெளியேறிய அபிநந்தன், பாகிஸ்தான் பகுதியில் தரையிறங்கினார். அங்கு அவர் பிடிபட்டார். சுமார் 3 நாட்கள் பாகிஸ்தான் வசம் இருந்த அவர், 2019 மார்ச் 1ஆம் தேதி இரவு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். விமானத்திலிருந்து வெளியேறியபோது ஏற்பட்ட காயங்களும் அவருக்கு இருந்தன. பாகிஸ்தான் ராணுவம் தன்னை முறையாகவே நடத்தியதாக அவர் கூறியிருந்தார்.
விருது
2019ஆம் ஆண்டின் பிற்பகுதியில், அந்த வான் மோதலின்போது கடமையில் சிறப்பாக செயல்பட்டதற்காக அவருக்கு இந்தியாவின் மூன்றாவது உயரிய போர்க்கால வீர விருதான வீர் சக்ரா விருதும் வழங்கப்பட்டது. இதனிடையே, 22 ஆண்டுகள் விமானப்படையில் பணியாற்றிய அபிநந்தன் வர்தமான் தற்போது முன்கூட்டியே ஓய்வு பெற்று, சிவில் விமானப் போக்குவரத்து துறையில் தனது புதிய வாழ்க்கையை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2024 மார்ச் மாதம் தனது விமான சேவையை தொடங்கிய FLY91 நிறுவனம் தற்போது ஆறு ATR 72-600 விமானங்களை இயக்கி வருகிறது. அந்த நிறுவனத்தின் முக்கிய தளங்கள் கோவா மற்றும் ஹைதராபாத்தில் உள்ளன. அபிநந்தன் ஆகஸ்ட் மாதம் FLY91-ல் விமானியாக இணைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பைலட்
அதாவது முன்னாள் குரூப் கேப்டனும் வீர் சக்ரா விருது பெற்றவருமான அபிநந்தன் வர்தமான், கோவாவை தலைமையிடமாக பிராந்திய விமான நிறுவனமான FLY91 நிறுவனத்தில் விமானியாக இணைந்துள்ளார். அவருக்கு ராணுவத்தில் பணிக்காலம் இருந்த போதிலும் முன்கூட்டியே ஓய்வு பெற்றுவிட்டு பைலட்டாக இணைந்துள்ளார். அவர் கடந்த ஆகஸ்ட் மாதமே அந்த நிறுவனத்தில் இணைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இது குறித்து அபிநந்தன் தரப்பில் இருந்து இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.


Click it and Unblock the Notifications
