இதுதான் முக்கியமே! உலக தலைவர்களுக்கு உத்வேகம் கொடுத்த பிரதமர் மோடி! கவனம் ஈர்த்த ஜி20 மாநாடு
டெல்லி: டெல்லியில் ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உலக தலைவர்களை வரவேற்று பேசினார். அப்போது நம்பிக்கை குறைபாட்டுடன் இருக்கும் நாடுகளுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் பிரதமர் மோடி முழங்கியது அனைவரையும் ஈர்த்த நிலையில் உலக நாடுகளுக்கு பிரதமர் மோடி முக்கிய வேண்டுகோள் ஒன்றையும் விடுத்தார்.
டெல்லியில் இன்றும், நாளையும் ஜி20 உச்சி மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் உள்பட 20க்கும் அதிகமான தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இன்று காலையில் ஜி20 மாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் தொடங்கியது.

இந்த மைதானத்துக்கு வந்த தலைவர்களை பிரதமர் மோடி நேரில் வரவேற்றார். ஜி20 மாநாட்டுக்கு வருகை புரிந்த ஒவ்வொரு தலைவர்களையும் பிரதமர் மோடி கைக்குலுக்கியும், கட்டியணைத்தும் வரவேற்றார்.
அதன்பிறகு ஜி20 மாநாடு தொடங்கியது. ஜி20 உச்சி மாநாட்டுக்கு இந்தியா தலைமையேற்று இருப்பதால் உலக தலைவர்களை வரவேற்று பிரதமர் மோடி பேசினார். அப்போது பிரதமர் மோடி, ஜி20 மாநாட்டுக்கான தலைவர் என்ற முறையில் உலக தலைவர்களுக்கு முக்கிய கோரிக்கையை வைத்தார். இதுதொடர்பாக பிரதமர் மோடி கூறியதாவது:
21ம் நூற்றாண்டில் உலகிற்கு புதிய திசையை காட்டுவதற்கான முக்கிய நேரம் இது. பழைய பிரச்சனைகளுக்கு புதிய தீர்வை தேடுவதற்கான பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டிய நேரம் இது. இவை அனைத்தும் மனிதர்களையும், மனித நேயத்தையும் மையப்படுத்தி இருக்க வேண்டும்.
நம்மால் கோவிட் 19யை தோற்கடிக்க முடிகிறது என்றால் போர் பிரச்சனைக்கு நடுவே ஏற்பட்ட குறைபாடுகளை சரிசெய்து வெற்றி பெற முடியும். கோவிட் பரவலுக்கு பிறகான உலகம் என்பது நம்பிக்கை குறைபாட்டுடன் உள்ளது. அதோடு போர் (உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்துள்ள போர்) என்பது அதனை இன்னும் அதிகப்படுத்தி உள்ளது.
இதனால் நாம் அனைவரும் உலக நன்மைக்காக ஒன்றாக இணைந்து செயல்பட்டு பிரச்சனைகளை கடக்க வேண்டும். ஜி20 தலைவர் என்ற முறையில் ஒன்றை கூறுகிறேன். உலக நாடுகளுக்கு இந்தியா சார்பில் இந்த வேண்டுகோளை விடுக்கிறேன். இந்த நேரம் என்பது நாம் அனைவரும் ஒன்றாக சேர்ந்து செயல்பட வேண்டியதாக உள்ளது.
மேலும் இந்தியாவின் ஜி20 தலைமை என்பது நாட்டுக்குள்ளும், வெளியேயும் உள்ளவர்களை ஒன்றிணைப்பதற்கான அடையாளமாக மாறி உள்ளது'' என்றார்.












Click it and Unblock the Notifications