நடந்து எங்க போறீங்க.. கார்ல வாங்க... தொண்டரிடம் கனிவு காட்டிய பிரியங்கா காந்தி! குவியும் பாராட்டு
டெல்லி: டெல்லி ஜந்தர் மந்தரில் காங்கிரஸின் ஆர்ப்பாட்டத்துக்கு ராகுல்காந்தியின் தீவிர ஆதரவாளர் நடந்து சென்றார். இதை பார்த்த பிரியங்கா காந்தி அவரை தனது காரில் ஏற்றி தன்னுடன் அதை்து சென்றார். இதுதொடர்பான வீடியோ தற்போது வேகமாக பரவி வருகிறது.
நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணைக்கு ராகுல் காந்தி இன்று மீண்டும் ஆஜராகி உள்ளார். இதையடுத்து வழக்கம்போல் டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள் ஆர்ப்பாட்டத்தை துவங்கினர்.
டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள், தொண்டர்கள் என ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அமலாக்கத்துறை சார்பில் ராகுல்காந்திக்கு சம்மன் வழங்கப்பட்டு விசாரணை நடத்தப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டது. இத்தகைய செயலை கைவிட வேண்டும். மேலும் முப்படையின் ஆள்சேர்ப்பு நடவடிக்கையான அக்னிபாத் திட்டத்தை கைவிட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தின் மூலம் வலியுறுத்தப்பட்டது.

ராகுலின் தீவிர ஆதரவாளர்
முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க பிரியங்கா காந்தி தனது காரில் வீட்டில் இருந்து ஜந்தர் மந்தர் நோக்கி புறப்பட்டு சென்றார். அவர் செல்லும் வழியில் ராகுலின் படம் வரையப்பட்ட ஆடையை ஒருவர் அணிந்து நடந்து சென்றார். அவர் ராகுல் காந்தியின் தீவிர ஆதரவாளராக இருக்கலாம் என பிரியங்கா காந்தி நினைத்தார். இதனால் காரை நிறுத்த கூறினார். சிறிது தொலைவு சென்று கார் நின்றது.

காரில் ஏறிய தொண்டர்
இதையடுத்து கார் கதவை திறந்து பிரியங்கா காந்தி அந்த நபரை அழைத்தார். அவரை போலீஸ்காரர் அழைத்து வந்தார். அவரிடம் எங்கு செல்கிறீர் என பிரியங்கா காந்தி கேட்டார். அதற்கு அவர் ஆர்ப்பாட்டத்துக்கு செல்வதாக கூறினார். இதையடுத்து தனது காரில் ஏறிக்கொள்ளும்படி பிரியங்கா காந்தி கூறினார். இதை கேட்டு உற்சாகமடைந்த அந்த தொண்டர் போலீசாருக்கு ‛டாட்டா' காட்டிவிட்டு மகிழ்ச்சியாக சென்று காரில் ஏறினார்.
|
வீடியோ
இதையடுத்து கார் அங்கிருந்து ஜந்தர் மந்தர் பகுதிக்கு சென்றது. இந்நிலையில் தான் தொண்டரிடம் பேசி அவரை பிரியங்கா காந்தி காரில் ஏற்றி செல்லும் வீடியோ வெளியாகி வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் பிரியங்கா காந்தியின் செயலை பாராட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications