நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பா? இல்லையா? இந்தியா கூட்டணி கட்சிகளை தவிக்க விட்ட மமதா பானர்ஜி!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை மறுநாள் மத்திய அரசு கூட்டியுள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி பங்கேற்பது தொடர்பாக முரண்பட்ட தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இந்தியா கூட்டணி கட்சிகளின் முதல்வர்கள் நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக அறிவித்துவிட்ட நிலையில் மமதா பானர்ஜியின் நிலைப்பாடு குறித்து உறுதி செய்ய முடியாமல் அந்த கூட்டணி தத்தளித்துக் கொண்டிருக்கிறது.
நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருந்தார். இந்த பட்ஜெட்டில் பீகார், ஆந்திரா மாநிலங்களுக்கு நிதி உதவி, சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. ஆனால் பிற மாநிலங்களுக்கு எந்த ஒரு திட்டமும் அறிவிக்கப்படவில்லை.

இதனால் மத்திய பட்ஜெட்டுக்கு எதிராக 'இந்தியா' கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்துள்ளனர். அதேபோல திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜியும் மத்திய பட்ஜெட்டை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அத்துடன் மத்திய அரசு, பிரதமர் மோடி தலைமையில் நாளை மறுநாள் நடத்த உள்ள நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிக்கப் போவதாகவும் இந்தியா கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் அறிவித்துள்ளனர். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரளா முதல்வர் பினராயி விஜயன், கர்நாடகா முதல்வர் சித்தராமையா, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் உள்ளிட்டோர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிக்கின்றனர். டெல்லி முதவ்லர அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருப்பதால் அவரும் பங்கேற்க முடியாது.
அதேநேரத்தில் இந்தியா கூட்டணி கட்சிகளில் ஒன்றான திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜி, நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிப்பாரா? இல்லையா? என்பதில் முரண்பட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. மமதா பானர்ஜி இன்று டெல்லி பயணம் மேற்கொள்கிறார். டெல்லிக்கு வருகை தரும் மமதா பானர்ஜி இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். மேலும் திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்களுடனும் ஆலோசனை நடத்த உள்ளார்.
தற்போதைய நிலையில் நிதி ஆயோக் கூட்டத்தில் மமதா பானர்ஜி பங்கேற்பார் என ஒருதரப்பு ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. ஆனால் டெல்லி வரும் மமதா பானர்ஜி, இந்தியா கூட்டணித் தலைவர்களை மட்டும் சந்திப்பார்; நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கமாட்டார் என இன்னொரு தரப்பு தெரிவிக்கிறது. மமதா பானர்ஜி தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் வரை 'இந்தியா கூட்டணி' கட்சிகள் தத்தளித்துக் கொண்டுதான் இருக்க வேண்டும்!












Click it and Unblock the Notifications