நாட்டை விட "இந்தியா" கூட்டணி தலைவர்களுக்கு தங்கள் குழந்தைகளின் நலன்தான் முக்கியம்! மோடி தாக்கு
டெல்லி: இந்தியா கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்களுக்கு தங்கள் சொந்த குழந்தைகளின் நலனே முக்கியம் என்று பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.
நமது நாட்டில் மொத்தம் ஏழு கட்டமாக லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில், அதில் 4 கட்ட தேர்தல் முடிந்துவிட்டது. மீதமுள்ள 3 கட்ட தேர்தலும் விரைவில் நடக்க உள்ள நிலையில், பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது.

பிரதமர் மோடி: இதற்கிடையே பிரபல ஆங்கில ஊடகமான என்டிடிவிக்கு பிரதமர் மோடி அளித்த பேட்டியில், இந்தியா கூட்டணியில் வாரிசு அரசியல் தான் இருப்பதாகச் சாடினார். இந்தியா கூட்டணியில் உள்ள தலைவர்களுக்குத் தேசத்தின் குழந்தைகள் மீது அக்கறை இல்லை என்றும் சொந்த குழந்தைகளின் நலனில் தான் அதிக அக்கறை இருக்கிறது என்றும் விமர்சித்துள்ளார்.
அக்கறை இல்லை: இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "நீங்கள் இந்தியா கூட்டணியில் உள்ள அனைவரையும் ஒரே இடத்தில் உட்கார வைத்துப் பாருங்கள்.. இவர் அவரது மகன்.. அவர் அவருடைய தந்தை என்றே இருக்கும்.. அந்தளவுக்கு அங்கு வாரிசு அரசியல் இருக்கிறது. இந்தியா கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்கள் தங்கள் குழந்தைகளின் நலனில் தான் அக்கறை செலுத்துகிறார்களே தவிர.. அவர்களுக்கு நாட்டின் குழந்தைகள் மீது எந்தவொரு அக்கறையும் இல்லை என்பது இதன் மூலம் தெளிவாகத் தெரிகிறது" என்றார்.
இந்த லோக்சபா தேர்தலில் பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கும் இடையே தான் பிரதான போட்டி நிலவுகிறது. இதில் மோடியை மூன்றாவது முறையாகப் பிரதமர் ஆக்குங்கள் என்ற முழக்கத்துடன் பாஜக தேர்தலை எதிர்கொண்டுள்ளது. 400+ இடங்களில் வெல்ல வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு பாஜக களமிறங்கியுள்ளது.
இந்தியா கூட்டணி: அதேநேரம் பாஜக மீண்டும் வெல்லக்கூடாது என்பதற்காக பல்வேறு கட்சிகள் ஒன்றாக இணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கி உள்ளது. இதில் காங்கிரஸ், சமாஜ்வாதி, திமுக, ஆர்ஜேடி, ஆம் ஆத்மி என பல்வேறு கட்சிகள் உள்ளன. இந்தக் கூட்டணி வாரிசு அரசியலின் கூட்டணி என்றே ஆளும் பாஜக தரப்பு சாடி வருகிறது. இப்போது பிரதமர் மோடியும் அதையே குறிப்பிட்டு விமர்சித்துள்ளார்.
சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டில் நிலவிய சாதிவெறி, ஊழல் மற்றும் வாரிசு அரசியலைக் கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி முடிவுக்குக் கொண்டு வந்து, நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளதாக பாஜக கூறுகிறது. இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக மாறுவதற்கு "இந்தியா" கூட்டணி தடையாக இருப்பதாகவும், ஊழல், வாரிசு அரசியல் இந்தியாவின் வளர்ச்சியைத் தடுப்பதாகவும் பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.
வாக்குறுதிகள்: அதேநேரம் நமது நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக ஓபிசி, தலித், சிறுபான்மையினர் உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளதாகக் கூறி இந்தியா கூட்டணி தேர்தலை எதிர்கொண்டுள்ளது. இட ஒதுக்கீட்டு உச்சவரம்பை நீக்குவது, ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் என பல்வேறு வாக்குறுதிகளை அளித்து காங்கிரஸ் இந்தத் தேர்தலை எதிர்கொண்டுள்ளது.
இதுவரை 4 கட்டங்களில் மொத்தம் 380 தொகுதிகளுக்குத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. 5ஆம் கட்ட தேர்தல் நாளை நடைபெறும் நிலையில், 6 மற்றும் 7ஆம் கட்ட தேர்தல் முறையே மே 25 மற்றும் ஜூன் 1ஆம் தேதிகளில் நடைபெற உள்ளன. இதில் பதிவாகும் வாக்குகள் எண்ணப்பட்டு ஜூன் 4ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.












Click it and Unblock the Notifications