ஏஆர் ரஹ்மானுக்கு இடம்.. உலகில் செல்வாக்குமிக்க முஸ்லிம்கள் யார்? டாப் 500 பட்டியலில் யார் யார்?
டெல்லி: உலகளவில் செல்வாக்கு மிக்க இஸ்லாமிய தலைவர்கள் யார் யார்? என்பது தொடர்பான டாப் 50 தலைவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் முதலிடத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப், பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீர் ஆகியோர் முதலிடத்திற்கு முன்னேறி உள்ளனர். இதில் இந்தியாவை சேர்ந்த ஒருவர் மட்டுமே 18 வது இடத்தில் உள்ளார். இவர் தவிர டாப் 500 பட்டியலில் கேட்டகிரி வாரியாக இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான், ஷாருக்கான், சல்மான் கான், அமீர் கான், ஏஐஎம்ஐஎம் கட்சியின் அசாதுதீன் ஓவைசி .ள்பட பலர் உள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஜோர்டான் நாட்டில் செயல்பட்டு வரும் 'ராயல் இஸ்லாமிய ஸ்ரேட்டஜிக் ஸ்டடீஸ் சென்டர்' சார்பில் உலகளவில் செல்வாக்கு மிக்க இஸ்லாமிய தலைவர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் உலகளவில் 2027 ம் ஆண்டில் செல்வாக்கு மிக்க டாப் தலைவர்களின் பெயர் பட்டியல்
'தி முஸ்லிம் 500' என்ற பெயரில் வெளியாகி உள்ளது.
இதில் உலகளவில் இஸ்லாமிய தலைவர்கள், பிரபலங்களின் செல்வாக்கு அடிப்படையில் இந்த மையம் 'ரேங்க்' வெளியிட்டு வருகிறது. இந்த பட்டியலில் 'டாப்' 50 தலைவர்களின் பெயர் பட்டியல் மட்டுமே தனித்தனியாக வெளியிடப்படும். மீதமுள்ள 450 பிரபலங்களின் பெயர்கள் கேட்டகிரி வாரியாக வெளியிடப்பட்டு வருகிறது. தற்போது அந்த பட்டியல் வெளியாகி உள்ளது.
அதன்படி இஸ்லாமியர்களில் செல்வாக்குமிக்க முஸ்லிம் தலைவர்களின் பட்டியலில் 5 பேர் முதலிடத்தில் உள்ளனர். அதன்படி சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான், பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், துருக்கி அதிபர் தையிப் எர்டோகன் ஆகியோர் முதலிடத்தில் உள்ளனர். இவர்களுடன் புதிதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப், பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீர் ஆகியோர் இணைந்துள்ளனர். இவர்கள் 2 பேரும் கடந்த ஆண்டு வெளியான பட்டியலில் டாப் 500 பட்டியலில் கூட இடம்பெறாத நிலையில்தற்போது கிடுகிடுவென முன்னேறி முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
இதற்கு முக்கிய காரணம் சவுதி அரேபியா மற்றும் துருக்கி நாடுகளுடன் பாகிஸ்தான் மேற்கொண்டுள்ள 'மெக்கா ஒப்பந்தம்' தான். இந்த ஒப்பந்தம் மூலம் 3 நாடுகளில் யாரை தாக்கினாலும் மற்ற 2 நாடுகளும் பதிலடி கொடுக்கும் என்பதாகும். 'பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும்' என்பது போல் செல்வாக்கு மிக்க சவுதி அரேபியா, துருக்கி உள்ளிட்ட நாடுகளுடன் சேர்ந்ததால் பாகிஸ்தான் பிரதமர், ராணுவ தளபதி ஆகியோர் இந்த பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் ஒருவருக்கு மட்டுமே முதலிடம் கொடுக்கப்பட்டு வந்த நிலையில் இந்த முறை 5 பேருக்கு முதலிடம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் இந்தியாவை சேர்ந்த ஒருவர் மட்டுமே இடம் பிடித்துள்ளார். அது யார் என்றால் 'ஜமியத் உலமா-ஏ-ஹிந்த்' அமைப்பின் தலைவர் மவுலானா முஹ்மத் மதானி ஆவார். இவர் இந்த பட்டியலில் 18 வது இடத்தில் உள்ளார். கடந்தஆண்டு 16வது இடத்தில் இருந்த நிலையில் தற்போது 2 இடம் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளார்.
மவுலானா முஹ்மத் மதனி உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர். இவர் ஆர்எல்டி கட்சி சார்பில் 2006 முதல் 2012ம் ஆண்டு வரை ராஜ்யசபா எம்பியாக இருந்தவர். 1919ல் தியோபந்தி அறிஞர்களால் நிறுவப்பட்ட ஜமியத் உலமா இ- ஹிந்து அமைப்பின் தலைமை பொறுப்பில் உள்ளார். இதற்கு முன்பு அவரது தாத்தா ஹுசைன் அகமது மதானியும், அதன்பிறகு தந்தை அசாத் மதானியும் இந்தஅமைப்பின் தலைமை பொறுப்பை வகித்து வந்தனர்.
ஒருவரின் தேசிய அடையாளத்தை மதம் மட்டுமே தீர்மானிக்கும் என்ற கருத்துக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் நிலையில் மவுலானா மஹ்மத் மதானி இந்த பட்டியலில் 18 வது இடத்தை பிடித்துள்ளார். இதில் டாப் 50 பேரின் பெயர் விவரங்கள் மட்டுமே தனித்தனியாக வெளியிடப்பட்டுள்ள நிலையில் மற்ற 450 பிரபலங்களின் பெயர்கள் அரசியல்வாதிகள், சொற்பொழிவாளர்கள், திரைக்கலைஞர்கள் என்று வெவ்வேறு பிரிவுகளில் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், இந்தியாவை சேர்ந்த ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி, சர்ச்சைக்குரிய இஸ்லாமிய சொற்பொழிவாளர் ஜாகீர் நாயக், விப்ரோ ஐடி நிறுவனத்தின் அசீம் பிரேம்ஜி, பாலிவுட் நடிகர்களான ஷாருக்கான், அமீர்கான், சல்மான் கான், இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் உள்ளிட்டோரும் இடம்பிடித்துள்ளனர். இருப்பினும் இவர்கள் தங்களின் துறை சார்ந்து செல்வாக்கு மிக்கவர்களாக உள்ளவர்களாக மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்களின் பெயர்கள் தனிப்பட்ட முறையில் வரிசைப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
