மகிழ்ச்சியான நாடுகள் லிஸ்டை விடுங்க.. வெறுப்புணர்வில் இந்தியா முன்னிலை பெறப்போகிறது- ராகுல் காந்தி
டெல்லி: வெறுப்புணர்வு மற்றும் வெறி மிகுந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா விரைவில் முன்னிலை வகிக்கும் என காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபை ஆண்டுதோறும் உலகில் மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடுகளின் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
அதன்படி 2022 ஆம் ஆண்டில் உலகளவில் மகிழ்ச்சியான மக்களை கொண்டுள்ள 146 நாடுகளின் பட்டியலை நேற்று ஐ.நா. வெளியிட்டது.

பின்லாந்து முதலிடம்
இந்த பட்டியலில் வழக்கம்போல ஸ்கேண்டினேவியன் நாடு என்று அழைக்கப்படும் பின்லாந்து முதலிடம் பிடித்து இருக்கிறது. 2 வது இடத்தில் டென்மார்க்கும் மூன்றாவது இடத்தில் ஐஸ்லாந்தும் உள்ளன. 4 வது இடத்தை ஸ்விட்சர்லாந்தும் 5 வது இடத்தை நெதர்லாந்தும் பிடித்து இருக்கின்றன.

கடைசி வரிசையில் இந்தியா
146 நாடுகளை கொண்ட இந்த பட்டியலில் கடைசி 3 இடங்களில் ஜிம்பாப்வே, லெபனான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் உள்ளன. இதில் இந்தியா 136 வது இடத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. அந்தந்த நாடுகளில் வசிக்கும் மக்களின் மகிழ்ச்சி, பொருளாதாரம், சமூக ஒற்றுமை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது.

பாகிஸ்தானிடம் பின் தங்கிய இந்தியா
உலகின் மகிழ்ச்சியான நாடுகளுக்கான இந்த தரவரிசைப் பட்டியலில் இந்தியா அண்டை நாடுகளை காட்டிலும் பின் தங்கி இருக்கிறது. நேபாளம் 84 வது இடத்திலும், 94 வது இடத்தில் வங்கதேசமும், பாகிஸ்தான் 121 வது இடத்திலும் உள்ளன. இந்த பட்டியலை வெளியானதில் இருந்து அதனை பகிர்ந்து மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் உட்பட பலரும் விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.

ராகுல் காந்தி விமர்சனம்
ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள இந்த தரவரிசைப் பட்டியலை ட்விட்டரில் பகிர்ந்துள்ள காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி, இந்தியா பசி குறியீட்டில் 101 வது இடத்திலும் சுதந்திரமான உலக நாடுகளின் வரிசையில் 119 வது இடத்திலும், உலகளவில் மகிழ்ச்சியான நாடுகளின் வரிசையில் 136 இடத்திலும் இருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால், வெறுப்புணர்வு மற்றும் வெறிக்கான தரவரிசையில் இந்தியா முன்னிலை வகிக்கும் என அவர் பதிவிட்டு உள்ளார்.

பசி குறியீட்டு நாடுகள்
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிடப்பட்ட 116 நாடுகளுக்கான உலக பசி குறியீட்டு வரிசையில் இந்தியா 101 வது இடத்தை பிடித்து உள்ளது. இதிலும் அண்டை நாடுகளான நேபாளம், வங்கதேசம், பாகிஸ்தான் ஆகியவை இந்தியாவை விட முன்னிலையில் உள்ளன.

சுதந்திரமான நாடுகளின் தரவரிசை
இந்த ஆண்டு வெளியிடப்பட்ட சுதந்திரமான நாடுகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்தியா 119 வது இடத்தில் உள்ளது. 165 நாடுகளை வைத்து எடுக்கப்பட்டு இந்த பட்டியலில் பாகிஸ்தான், வங்கதேசத்தை விட இந்தியா முன்னேறி இருக்கிறது. ஆனால், நேபாளம், இலங்கை ஆகிய நாடுகள் இந்தியாவை விட முன்னேறியுள்ளன.


Click it and Unblock the Notifications
