மக்களின் மனநலனை காப்பதில் புது புரட்சி.. இந்திய மனநலக் கூட்டமைப்பில் இணைந்த 300 அமைப்புகள்!
- கல்வி, மகளிர் நலம், வேலைவாய்ப்பு மற்றும் மனநலத்திற்காகப் பணியாற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் அனைத்தும் இப்போது ஒரே குடையின் கீழ் இணைந்துள்ளன.
- இந்தியாவின் 30 மாநிலங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட அமைப்புகள் இந்தத் தேசியக் கூட்டணியில் சேர்ந்திருப்பது, மனநலத் துறையில் ஏற்பட்டுள்ள ஒரு மிகப்பெரிய முன்னேற்றமாகும்.
- "வளர்ச்சியடைந்த இந்தியா" உருவாக வேண்டுமானால், மக்களின் மனநலமும் மிக முக்கியம் என்பதை ஒரு தேசியக் கொள்கையாக மாற்றுவதே இந்த அமைப்பின் நோக்கம்.
டெல்லி: "வளர்ச்சியடைந்த பாரதம்" (Viksit Bharat) என்ற இலக்கை நோக்கி இந்தியா வேகமாக முன்னேறி வரும் வேளையில், நாட்டின் மிக முக்கியமான தேவையாக மனநலம் உருவெடுத்துள்ளது. இந்தியாவின் மனநலச் சூழலை வலுப்படுத்தும் நோக்கில் தொடங்கப்பட்ட 'இந்திய மனநலக் கூட்டமைப்பு' (India Mental Health Alliance - IMHA), இன்று ஒரு மிகப்பெரிய மைல்கல்லை எட்டியுள்ளது.
இந்தியாவின் 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட அமைப்புகள் இந்தக் கூட்டமைப்பில் இணைந்து சாதனை படைத்து உள்ளன. கல்வி நிறுவனங்கள், மகளிர் நல அமைப்புகள், வாழ்வாதார மேம்பாட்டு அமைப்புகள், அடிமட்ட அளவில் பணியாற்றும் மனநல நிறுவனங்கள் மற்றும் கல்வியாளர்கள் எனப் பல்வேறு தரப்பினர் ஒன்றிணைந்துள்ள இந்த நிகழ்வு, இந்திய மனநலத் துறையில் ஒரு புதிய விடியலாகப் பார்க்கப்படுகிறது.

சிதறிக் கிடந்த சக்திகள் இப்போது ஒன்றிணைந்துள்ளன
இந்தியாவில் மனநலம் சார்ந்த சேவைகள், பணிகள் நீண்ட காலமாக ஆங்காங்கே தனித்தனியாகவும், சிதறியும் செயல்பட்டு வந்தன. ஒரு பகுதியில் சிறந்து விளங்கும் ஒரு முறையை மற்றொரு பகுதியில் இருப்பவர்கள் அறிந்துகொள்வதில் சிரமங்கள் இருந்தன. ஆனால், IMHA-வின் இந்த அசத்தலான வளர்ச்சி, அந்த இடைவெளியைக் குறைத்துள்ளது.
இந்தக் கூட்டமைப்பு 2023-ல் தொடங்கப்பட்டபோது, மனநலம் என்பது வெறும் மருத்துவமனைகளுடன் மட்டும் முடிந்துவிடும் விஷயம் அல்ல என்பதைத் தெளிவாக உணர்த்தியது. இதில் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மட்டுமின்றி, மனநலப் பாதிப்பிலிருந்து மீண்டவர்கள் மற்றும் அவர்களின் பராமரிப்பாளர்கள் ஆகியோரின் அனுபவங்களும் மிக முக்கியம் என்பதை IMHA வலியுறுத்துகிறது.
நேஹா கிர்பால்: கூட்டு முயற்சியே வெற்றிக்கான வழி
IMHA-வின் இணை நிறுவனர் நேஹா கிர்பால் இது குறித்துப் பேசுகையில், "நம் அமைப்பு 300 உறுப்பினர்களை எட்டியுள்ளது என்பது வெறும் எண்ணிக்கை அல்ல; இது ஒரு மாபெரும் சாதனை. பல்வேறு கலாச்சாரப் பின்னணியில் இருந்து வரும் அமைப்புகள் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும்போது, ஒட்டுமொத்த மனநலச் சூழலும் வலிமையடையும். மனநலத்தை ஒரு ரகசியமான, அந்தரங்க விஷயமாகப் பார்க்காமல் பொதுவான விஷயமாக பார்க்க வேண்டும். நம் நாட்டின் வளர்ச்சித் திட்டத்தின் ஒரு முக்கிய அங்கமாக மனநலனை மாற்றுவதே எங்களின் நோக்கம்," என்றார்.
கடந்த ஓராண்டில் செய்த சாதனைகள் என்ன?
கடந்த ஓராண்டில் IMHA நான்கு முக்கியப் பணிகளில் கவனம் செலுத்தியுள்ளது: இணைத்தல் (Connect), ஒன்று கூடுதல் (Convene), ஒத்துழைத்தல் (Collaborate) மற்றும் திறன்களை வளர்த்தல் (Capacity Building).
- டிஜிட்டல் டைரக்டரி: அனைத்து உறுப்பினர் அமைப்புகளையும் எளிதில் கண்டறியும் வகையில் 'QR கோடு' வசதியுடன் கூடிய தேசிய பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் எல்லோரும் எல்லோருடனும் எளிதில் தொடர்பு கொள்ள முடியும்.
- வாட்ஸ்அப் சமூகம்: நாடு முழுவதும் உள்ள உறுப்பினர்கள் உடனுக்குடன் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளத் துடிப்பான வாட்ஸ்அப் குழுக்கள் செயல்படுகின்றன.
- திறன் மேம்பாடு: மாதந்தோறும் உலகளாவிய நிபுணர்களுடன் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. இதில் இளைஞர்களின் மனநலம், பொது சுகாதாரம் மற்றும் அரசுடன் இணைந்து செயல்படுவது குறித்த பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
சென்னை மற்றும் பிற நகரங்களில் அடுத்தகட்ட சந்திப்புகள்
மனநல விழிப்புணர்வை டெல்லியோடு மட்டும் சுருக்கிக் கொள்ளாமல், நாடு முழுவதும் கொண்டு செல்ல 'இந்தியாவை இணைப்போம்' (Connecting India for Mental Health) என்ற தொடரை IMHA தொடங்கியுள்ளது. இதன் முதல் கூட்டம் மும்பையில் வெற்றிகரமாக நடந்தது.
தொடர்ந்து, வரும் மே மாதம் குவஹாத்தியிலும், ஆகஸ்ட் மாதம் நமது சென்னையிலும், டிசம்பர் மாதம் பெங்களூரிலும் மண்டல அளவிலான சந்திப்புகள் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆண்டு அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் இரண்டாவது மாபெரும் வருடாந்திர மாநாடும் நடைபெறவுள்ளது.
அறிவுக் கருவூலமாக விளங்கும் 'Knowledge Centre'
IMHA-வின் இணையதளத்தில் 300-க்கும் மேற்பட்ட தரமான மனநல கட்டுரைகள், நூல்கள், கண்டெண்ட்கள் உள்ளன. இதில் வழிகாட்டிப் புத்தகங்கள், சட்டங்கள், கொள்கைகள் மற்றும் தரவுகள் அடங்கும். இதுவரை ஆங்கிலத்தில் அதிக கவனம் செலுத்தி வந்த இந்த மையம், இனி வீடியோ வழி கற்றல் மற்றும் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் அதிகத் தகவல்களை வழங்கத் திட்டமிட்டுள்ளது. இது சாதாரண மக்களும் மனநலம் குறித்த விழிப்புணர்வைப் பெற உதவும்.
வாஸ்வி பாரத் ராம்: "மனநலமே தேசத்தின் பலம்"
IMHA-வின் நிறுவனர் மற்றும் தலைவர் வாஸ்வி பாரத் ராம் கூறுகையில், "ஒரு நாடு உண்மையிலேயே வளர்ச்சியடைந்துள்ளது என்பதற்கு அந்த நாட்டு மக்களின் மனநலமே சான்று. பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் சமூக ஒற்றுமை என அனைத்தும் மக்களின் மன ஆரோக்கியத்துடன் பிணைக்கப்பட்டுள்ளன. அரசு, தனியார் நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள் என அனைவரும் நிதி மற்றும் உழைப்பைக் கொடுத்து உதவ வேண்டும்.. அப்போதே நம் நாட்டு மக்களின் மனநலம் பாதுகாக்கப்படும்" என்றார்.
இந்த லட்சியத்திற்கு வலுசேர்க்கும் வகையில், மனிஷா தவான் மற்றும் டாக்டர் பெரோசா கோத்ரெஜ் போன்ற கொடையாளர்கள் நீண்ட கால நிதி உதவியை வழங்க முன்வந்துள்ளனர்.
2047-ம் ஆண்டு இந்தியா ஒரு வல்லரசாக மாறும் பயணத்தில், மனநலம் என்பது ஒரு ஆடம்பரத் தேவையாக இல்லாமல், அடிப்படை உரிமையாக மாற வேண்டும். IMHA-வின் இந்த 300 உறுப்பினர்கள் சேர்க்கை என்பது ஒரு தொடக்கம்தான். சிகிச்சை பெறுபவர்களையும், அவர்களைக் கவனித்துக் கொள்பவர்களையும் மையமாக வைத்து உருவாக்கப்படும் இந்தத் திட்டம், எதிர்கால இந்தியாவை ஆரோக்கியமான நாடாக மாற்றும் என்பதில் ஐயமில்லை.












Click it and Unblock the Notifications