ஆரம்பமே இப்படியா.. தர்மேந்திர பிரதான் பதவியேற்றபோது இந்தியா கூட்டணி எம்பிகள் நீட் எதிர்ப்பு முழக்கம்
டெல்லி: நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கி நடந்து வரும் நிலையில், முதல் நாளான இன்றே நீட் விவகாரம் எதிரொலிக்க ஆரம்பித்துவிட்டது. மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று எம்பியாக பதவியேற்ற நிலையில், நீட் வினாத்தாள் கசிந்ததை விமர்சிக்கும் வகையில் எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர். இந்த கூட்டத்தொடரில் நீட் விவகாரத்தை முக்கிய பிரச்சினையாக எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாக நமது நாட்டில் நீட் தேர்வு மூலமாகவே மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.. தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் நீட் தேர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் மத்திய அரசு இந்தத் தேர்வைத் தொடர்ந்து நடத்தி வருகிறது.

நீட் விவகாரம்: இத்தனை ஆண்டுகள் நீட் தேர்வில் பெரிய பிரச்சினை ஏற்படவில்லை. ஆனால், இந்தாண்டு நீட் தேர்வு அறிவிக்கப்பட்டது முதலே பல்வேறு சர்ச்சைகள் தான். நீட் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட தேதிக்கு முன்பே திடீரென வெளியானது. அதில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகப்படியான மாணவர்கள் நீட் தேர்வில் முழு மார்க் பெற்றது முதல் சர்ச்சை. அடுத்து சுமார் 1500 பேருக்குக் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது அடுத்த சர்ச்சையானது. இதையடுத்து அந்த கருணை மதிப்பெண்களை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்தது.
இது ஒரு பக்கம் இருக்க இந்தாண்டு நீட் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்தது பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இது தொடர்பாக வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கு சிபிஐ வசம் மாற்றப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் முதற்கட்டமாகச் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். நீட் வினாத்தாளை முன்கூட்டியே வாங்கி படித்த 4 மாணவர்கள் கைது இதுவரை செய்யப்பட்டுள்ளனர். அதேநேரம் குறைந்தது 30 மாணவர்கள் இதில் பலனடைந்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அவர்களைக் கண்டறியும் முயற்சியிலும் அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.
முன்கூட்டியே லீக்: நீட் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்துள்ளது தேசியளவில் மிகப் பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. இதைக் கண்டித்து ஏற்கனவே காங்கிரஸ் மாணவரணி தீவிர போராட்டத்தில் இறங்கியுள்ளது. அதேபோல பல்வேறு மாணவர் அமைப்பினரும் நீட் விவகாரத்தைக் கையில் எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தச் சூழலில் இப்போது நாடாளுமன்றம் கூடியுள்ள நிலையில், அங்கேயும் இதைப் பெரிய விஷயமாக எடுத்துச் செல்ல எதிர்க்கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.
எரிந்து கிடந்த பேப்பரில் அப்படியே நீட் வினாத்தாள்! பள்ளி நம்பர் கூட அப்படியே இருக்கு! பரபர ரிப்போர்ட்
இந்தியா கூட்டணி எம்பிக்கள்: நாடாளுமன்றத்தின் முதல் நாளான இன்றே எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துவிட்டனர். லோக்சபாவில் நீட் தேர்வு முறைகேட்டைக் கண்டித்து "இந்தியா" எம்பிக்கள் முழக்கமிட்டனர். இன்று நாடாளுமன்றத்தில் அனைத்து எம்பிக்களும் பதவியேற்று வருகிறார்கள். அதன்படி மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று காலை எம்பியாக பதவியேற்றார். அப்போது நீட் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்தது தொடர்பாக விமர்சிக்கும் வகையில் எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர்.
நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தில் இந்த விவகாரத்தை மிக முக்கிய ஒன்றாக எதிர்க்கட்சியினர் எடுத்துச் செல்ல திட்டமிட்டுள்ளனர் என்பதையே இது காட்டுகிறது. முதல் நாளான இன்று தர்மேந்திர பிரதான் எம்பியாக பதவியேற்கும் போதே இது தொடர்பாக இந்தியா கூட்டணி எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவிக்கத் தொடங்கிவிட்டனர்.
முறைகேடு: முறைகேடு நடந்ததால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகிறார்கள். இருப்பினும், நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசு தயாராக இல்லை. இது குறித்து கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கமளித்திருந்தார். அதில் சில தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் மட்டுமே முறைகேடு நடந்தது என்று குறிப்பிட்ட அவர் நீட் தேர்வை ரத்து செய்தால் முறையாகத் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதால் நீட் தேர்வை ரத்து செய்வது நியாயமற்றது என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications