10,000 அடி உயரம் வரை.. இனி விமானத்தின் ஜன்னல்களை திறக்க கூடாது! மத்திய அரசு திடீர் உத்தரவு.. பின்னணி
டெல்லி: பாகிஸ்தான் எல்லையோரம் இருக்கும் விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் புறப்படும்போதும், தரையிறங்கும்போதும் விமானங்களின் ஜன்னல்களை மூடி வைத்திருக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவின் பின்னணி பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் (DGCA or Directorate General of Civil Aviation) சார்பில் வெளியிடப்பட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

பாகிஸ்தான் எல்லைக்கு அருகே குறிப்பாக மேற்கு எல்லை பகுதியில் உள்ள விமான நிலையங்களில் இருந்து விமானங்கள் புறப்படும்போது 10 ஆயிரம் அடி உயரத்தை எட்டும் வரை விமானங்களில் ஜன்னல்கள் மூடப்பட்டு இருக்க வேண்டும். அதேபோல் விமானம் தரையிறங்கும்போதும் 10 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து விமானங்களின் ஜன்னல்கள் மூடப்பட்டு இருக்க வேண்டும். அவசர காலங்களுக்கு மட்டும் இது பொருந்தாது.
அதேபோல் ராணுவ தளங்களில் போட்டோ மற்றும் வீடியோ எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை விமான நிறுவனங்கள் மற்றும் விமான பணியாளர்கள் உறுதி செய்ய வேண்டும். விமான பயணத்தின்போதே பணியாளர்கள் இதுபற்றி பயணிகளுக்கு வார்னிங் செய்ய வேண்டும். முன்னறிவிப்புகளை வெளியிட வேண்டும்.
பயணிகளுக்கு புரியும் வகையில் விமானம் புறப்படும்போதும், தரையிறங்கும்போதும் ஜன்னல் கதவுகளை மூடவும், செல்போனில் போட்டோ, வீடியோ எடுக்காமல் இருப்பது பற்றிய அறிவிப்பை செய்ய வேண்டும் '' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தால் லே, ஸ்ரீநகர், ஜம்மு, பதான்கோட், ஆதம்பூர், சண்டிகர், பதிண்டா, ஜெய்சால்மர், நல், ஜோத்பூர், ஹிண்டன், ஆக்ரா, கான்பூர், பரேலி, மகாராஜ்பூர், கோரக்பூர், பூஜ், லோஹேகான், கோவா (டபோலிம்) மற்றும் விசாகப்பட்டினம் உள்ளிட்ட விமான நிலையங்களில் இருந்து புறப்படும் விமானங்கள் இந்த விதியை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே கடும் மோதல் நடந்தது. இருநாடுகள் இடையேயான சண்டை இப்போது நின்றாலும் கூட பதற்றம் என்பது தொடர்ந்து நிலவி வருகிறது. இப்படியான சூழலில் பாகிஸ்தான் ஏதேனும் சதிவேலைகளில் ஈடுபடலாம். இதற்கு பயணிகள் விமானப்படை தளங்களில் எடுக்கும் போட்டோ, வீடியோக்கள் உதவி செய்து விடக்கூடாது என்பதற்காக இந்த உத்தரவு என்பது பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி 26 பேரை கொன்றனர். இதற்கு நம் நாடு பதிலடி கொடுத்தது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பாகிஸ்தானின் 9 பயங்கரவாத முகாம்கள், 3 விமானப்படை தளங்கள் அழிக்கப்பட்டன. இதையடுத்து பாகிஸ்தான் எல்லையோர விமான நிலையங்கள், விமானப்படை தளங்களை குறிவைத்து ட்ரோன், ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதல்களை நம் நாடு வெற்றிகரமாக முறியடித்தது. நம் நாட்டில் தாக்குதலை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்ய கெஞ்சிய பிறகு நம் ராணுவம் ஓகே கூறியது. முன்னதாக பாகிஸ்தான் நம் நாட்டை குறிவைத்த நிலையில் எல்லை மற்றும் எல்லையில் இருந்து சிறிது தொலைவில் உள்ள 32 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன. தற்போது அந்த விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இருப்பினும் பாகிஸ்தானின் அச்சுறுத்தல் என்பது தொடர்ந்து நிலவுவதால் மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் இந்த உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.












Click it and Unblock the Notifications