வளைகுடா போர்.. விளக்கமளித்த ஜெய்சங்கர்! விவாதம் நடத்தக்கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம்
டெல்லி: வளைகுடா போரில் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன. இந்நிலையில் இன்று பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்கிய நிலையில், இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நாடாளுமன்றத்தில் விளக்கமளித்துள்ளார். இருப்பினும் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து விவாதம் நடத்தக்கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் நிலவும் சூழல் குறித்து நாடாளுமன்ற ராஜ்ய சபாவில் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் விளக்கமளித்தார்.

ஜெய்சங்கர் விளக்கம்
அவர் பேசியதாவது, "வளைகுடா நாடுகளில் 1 கோடி இந்தியர்கள் வசிக்கின்றனர். பிரதமர் நிலவரங்களை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறார். இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து, அமைச்சகங்கள் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன" என்று கூறியுள்ளார்.
பேச்சுவார்த்தைதான் தீர்வு
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தரப்பில் நடத்தப்பட்டு வரும் தாக்குதல்கள் தீவிரமடைந்து வருவதை அவர் சபை உறுப்பினர்களுக்கு விளக்கினார். பதட்டத்தைத் தணித்து, அமைதியை நிலைநாட்டுவதற்கு, பேச்சுவார்த்தையும் இராஜதந்திர அணுகுமுறையுமே அனைத்துத் தரப்பினருக்கும் உகந்த வழி என இந்திய அரசின் நிலைப்பாட்டை ஜெய்சங்கர் மீண்டும் வலியுறுத்தினார்.
எதிர்க்கட்சிகள் முழக்கம்
மத்திய அரசு, இந்த மோதல் தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் 5ம் தேதியே ஒரு பயண ஆலோசனையை வெளியிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். இதில், அங்குள்ள இந்தியக் குடிமக்கள் அப்பகுதியை விட்டு வெளியேறவும், கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டனர்.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையில் முழக்கமிட்டு சலசலப்பு ஏற்படுத்திய பின்னணியிலேயே அமைச்சரின் இந்தக் கருத்துகள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம்
இந்த விவகாரம் குறித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் சரமாரியாக கேள்விகளை எழுப்பியிருந்தனர். இந்தியர்களின் பாதுகாப்பு, எரிபொருள் விலை உயர்வு குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால், கோரிக்கை ஏற்கப்படாததால், நாடாளுமன்ற அவைக்கு உள்ளேயும், வளாகத்திலும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்றத்தின் மகர துவாரா பகுதியில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்கள் இதில் கலந்துகொண்டனர். அவர்கள், 'வளைகுடா பற்றி எரிகிறது, எண்ணெய் நெருக்கடி. இந்தியர்கள் தவிக்கின்றனர். இந்தியாவுக்குத் தலைமை தேவை - மௌனம் வேண்டாம்' என்ற பதாகையை ஏந்தியிருந்தனர்.












Click it and Unblock the Notifications