வெளிநாட்டவர் செட்டிலாக விரும்பும் நாடுகள்! மோசமான இடத்தில் இந்தியா! சீனா, பாகிஸ்தானுக்கு என்ன இடம்
டெல்லி: 2022க்கான எக்ஸ்பாட் இன்சைடர் தரவரிசை எனப்படும் வெளிநாட்டவர் செட்டில் ஆக விரும்பும் நாடுகளின் பட்டியல் இப்போது வெளியாகி உள்ளது.
வெளிநாட்டிற்குச் சுற்றுலா செல்லும்போது, அங்கு இருக்கும் வசதிகள், அந்நாட்டு மக்களின் அன்பைக் கண்டு சில சமயங்களில் அங்கேயே இருந்துவிடப் பலரும் விரும்புவார்கள்.
அப்படி வெளிநாட்டவர் செட்டில் ஆக விரும்பும் நாடுகளின் பட்டியல் ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான பட்டியல் இப்போது வெளியாகி உள்ளது.

நியூசிலாந்து
பல்வேறு மனிதவளக் குறியீடுகளில் முன்னிலையில் இருக்கும் நியூசிலாந்து, அனைவருக்கும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் இந்தப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. அதேநேரம் வெளிநாட்டினரால் மிகவும் விரும்பப்படும் இடங்களுள் ஒன்றாக மெக்சிகோ உள்ளது. வெளிநாட்டவர் குடியேறுவதற்கான எளிமை, உள்ளூர்வாசிகளின் நட்பு, சுவையான சமையல் உள்ளிட்டவை இதற்கான காரணங்களாக உள்ளன.

என்ன பிரச்சினை
நியூசிலாந்து, ஹாங்காங், லக்சம்பர்க் மற்றும் பிரிட்டன் போன்ற கடைசி இடங்களில் உள்ள நாடுகளில் விலைவாசியே முக்கிய பிரச்சினையாகக் கூறப்பட்டு உள்ளது. ஹாங்காங்கில் அதிகரிக்கும் மக்கள் போராட்டமும் ஒரு முக்கிய காரணமாகச் சொல்லப்பட்டு உள்ளது. நியூசிலாந்தில் சம்பளம் குறைவாக உள்ளதாகவும் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே வேற்றுமை அதிகரித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

டாப் 5 மற்றும் கடைசி 5 இடங்கள்
மெக்சிகோவில் தங்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதாக 91 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். இந்தோனேசியா, தைவான், போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் ஆகியவை முதல் ஐந்து இடங்களிலும், குவைத், நியூசிலாந்து, ஹாங்காங், சைப்ரஸ் மற்றும் லக்சம்பர்க் ஆகியவை கடைசி ஐந்து இடங்களிலும் உள்ளன.

இந்தியா
52 நாடுகளைக் கொண்ட இந்தப் பட்டியலில் இந்தியா 36ஆவது இடத்தைப் பிடித்தது. இந்தியாவின் குறைந்த விலைவாசியும், முறையான சுகாதார பாதுகாப்பு இந்தியாவுக்கு இந்த இடம் கிடைக்க உதவி உள்ளது. அதேநேரம் காற்றின் தரத்தில் இந்தியாவுக்குத் தான் கடைசி இடம். சுற்றுச்சூழல், பயணம், போக்குவரத்து வசதிகள் பிரிவுகளில் இந்தியா கடைசி இடத்திற்கு முந்தைய இடத்தையே பிடித்துள்ளது.

சீனா
இந்தப் பட்டியலில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், வியட்நாம், தாய்லாந்து, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் நாடுகள் 6 முதல் 10 இடங்களைப் பெற்று உள்ளன. இந்தப் பட்டியலில் அமெரிக்கா 14வது இடத்திலும் கனடா 23வது இடத்திலும் உள்ளன. அண்டை நாடான சீனா இந்தியாவுக்கு சில இடங்களுக்கு முன்பு, அதாவது 33ஆவது இடத்தை பிடித்து உள்ளது. பாகிஸ்தான், வங்கதேசம், உள்ளிட்ட அண்டை நாடுகள் இந்தப் பட்டியலில் இடம் பெறவே இல்லை.












Click it and Unblock the Notifications