இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1.50 லட்சத்தை தாண்டியது-24 மணிநேரத்தில் உயிரிழப்புகள் 327
டெல்லி: இந்தியாவிலும் ஒருநாள் கொரோனா பாதிப்பு கோரத்தாண்டவமாடுகிறது. இந்தியாவில் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,59,632 ஆக அதிகரித்திருக்கிறது. கொரோனாவால் நேற்று மட்டும் 327 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் ஓமிக்ரான் எனும் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 3,623 ஆகவும் உயர்ந்துள்ளது.
Recommended Video
உலக நாடுகளில் கொரோனா 4-ம் அலை அதி உச்சமாக பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனா 3-வது அலை வேகமாக அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1,59,632 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 327 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் நேற்று மட்டும் கொரோனா பாதிப்பில் இருந்து 40,863 பேர் மீண்டுள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் குணமடைந்தோர் விகிதம் தற்போது 96.98 சதவீதம். இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,44,53,603 என அதிகரித்துள்ளது.

இந்தியாவில் ஆக்டிவ் கேஸ்கள்
இந்தியாவில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதாவது ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 5,90,611. கொரோனா சிகிச்சை பெறுபவர்களின் சதவீதம் 1.66 ஆக உள்ளது.

ஓமிக்ரான் பாதிப்பு
ஓமிக்ரான் எனும் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை இந்தியாவில் 3,623 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாடு, மகாராஷ்டிரா, டெல்லி, கேரளா, ராஜஸ்தான், குஜராத், ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட 27 மாநிலங்களில் உருமாறிய ஓமிக்ரான் தொற்று 3,623 பேரிடம் கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 1,409 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1009 பேருக்கும், டெல்லியில் 513 பேருக்கும், ஓமிக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளது. டெல்லியில் 57 பேரும், மகாராஷ்டிராவில் 439 பேரும் குணமடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் 185 பேருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா பரிசோதனைகள்
தினசரி பாதிப்பு விகிதம் 10.21 சதவீதம் ஆகும். வாராந்திர பாதிப்பு விகிதம் 6.77 சதவீதம் ஆகும். இதுவரை மொத்தம் 69 கோடி கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

கொரோனா தடுப்பூசி
தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இந்தியா இதுவரை 151.58 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தியுள்ளது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை, 155.95 கோடிக்கும் மேற்பட்ட (1,55,95,35,295) தடுப்பூசி டோஸ்கள் மத்திய அரசு மூலம் இலவசமாகவும் மற்றும் மாநிலங்களின் நேரடி கொள்முதல் மூலமும் வழங்கப்பட்டுள்ளன. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் 17.74 கோடிக்கும் மேற்பட்ட (17,74,25,761) தடுப்பூசி டோஸ்கள் இன்னமும் இருப்பில் உள்ளன.












Click it and Unblock the Notifications