டிரம்புக்கு சாட்டையடி.. சீனாவுடன் வர்த்தக பாதையை திறந்த இந்தியா! நமக்கு என்னவெல்லாம் கிடைக்கும்?
டெல்லி: இந்தியா மீது அமெரிக்கா தற்போது 50% அளவுக்கு வரியை விதித்திருக்கிறது. இந்த வரி மேலும் அதிகரிக்கும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார். இந்நிலையில், சீனாவுடன் வர்த்தகம் செய்ய இந்தியா தனது எல்லையை திறந்திருக்கிறது. இந்த வழியாக இந்தியாவின் தனிச்சிறப்பு மிக்க பொருட்களும், சீனாவின் பாரம்பரிய பொருட்களும் பரிமாறிக்கொள்ளப்படுகிறது.
ஏற்கெனவே சீனாவுடன் உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்கள் வழியாக இந்தியா வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தது. கடந்த 2019ம் ஆண்டு இந்த வர்த்தகம் நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் வர்த்தகத்தை இந்தியா தொடங்கியிருக்கிறது.

மத்திய அரசுக்கு நெருக்கடி
இந்தியாவிலிருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி அதிகரித்திருப்பதால், அவற்றின் விலையும் அமெரிக்காவில் உயர்ந்திருக்கிறது. எனவே, இந்திய வர்த்தகம் கொஞ்சம் அடிவாங்கியிருக்கிறது. இந்த வர்த்தக பாதிப்பை சரி செய்ய மத்திய அரசு அனைத்து வழிகளையும் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அதை செய்யவில்லை எனில் நாடு முழுவதும் வர்த்தக பாதிப்பு எதிரொலித்து, இலங்கையில் நடந்ததை போல இங்கும் மக்கள் கிளர்ந்து எழுவார்கள்.
எனவே மத்திய அரசு வேறு வழியில்லாமல் சீனாவுடனான வர்த்தகத்தை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்திருக்கிறது. குறிப்பாக மேலே சொன்னதை போல, எல்லை வர்த்தகத்தை அதிகரித்திருக்கிறது.
எல்லை வர்த்தகம்
உத்தரகாண்ட் மாநிலத்தில் லிபுலேக் கணவாய் வழியாகவும், இமாச்சலப் பிரதேசம் ஷிப்கி லா கணவாய் வழியாகவும், சிக்கிமின் நாது லா கணவாய் வழியாகவும் இதற்கு முன்னர் வர்த்தகம் நடைபெற்று வந்தது. ஆனால் 2019ல் கால்வான் பள்ளத்தாக்கில் இந்தியா-சீனா வீரர்கள் மோதிக் கொண்டதால் இந்த வர்த்தகம் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் அமெரிக்க வரியை சமாளிக்க மீண்டும் இந்த வர்த்தகம் தொடங்கப்பட்டிருக்கிறது.
என்ன லாபம்?
இந்த எல்லை வழி வர்த்தகத்தில், கம்பளி, பட்டு, சீன தேநீர், காலணிகள், ஆடைகள், போர்வைகள், கம்பளங்கள், உப்பு, போராக்ஸ் (கனிம உப்பு), ஆயுர்வேத மூலிகைகள் போன்ற சில உள்ளூர் தயாரிப்புகள் இறக்குமதி சீனாவிலிருந்து செய்யப்பட்டன. அதேபோல இந்தியாவிலிருந்து விவசாய உபகரணங்கள், போர்வைகள், காபி, தேநீர், அரிசி, மாவு, காய்கறிகள், மசாலாப் பொருட்கள், சிகரெட்டுகள், எழுதுபொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் போன்றவை ஏற்றுமதி செய்யப்பட்டன.
இந்த வர்த்தகம் எல்லையோர மாநிலங்களின் வளர்ச்சிக்கு பெரிய அளவில் உதவியாக இருந்தது. அமெரிக்க வரியை எதிர்கொள்ள இந்த வர்த்தக பாதையை இந்திய மீண்டும் திறந்திருப்பது வரவேற்புக்குரியது என பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
பிரிக்ஸ்
அதேபோல பிரிக்ஸ் நாடுகளுடனான வர்த்தகத்தையும் தீவிரப்படுத்த இந்தியா முயன்று வருகிறது. குறிப்பாக வர்த்தகத்தை கடந்து இன்ன பிற பொருளாதார நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறது. பிரிக்ஸ் நாடுகள் அமெரிக்க டாலருக்கு எதிராக உள்ளூர் கரன்சியில் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன.
மத்திய அரசு செய்ய வேண்டியது
குறிப்பாக அமெரிக்காவின் தடைகளுக்குப் பிறகு, ரஷ்யாவும் இந்தியாவும் தங்களது வர்த்தகத்தில் உள்ளூர் கரன்சிகளை அதாவது ரூபாய் மற்றும் ரூபிள்-ஐ பயன்படுத்தி வருகின்றன. இது இரு நாடுகளுக்கும் இடையே சுமார் 90% இருதரப்பு வர்த்தகத்தை உள்ளடக்கியதாக உள்ளது. அதேபோல இந்தியா, ஐக்கிய அரபு அமீரகத்துடன் உள்ளூர் கரன்சி செட்டில்மென்ட் சிஸ்டம் மூலம் வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ளது. விரைவில் சீனா உள்ளிட்ட மற்ற நாடுகளுடனும் இந்தியா உள்ளூர் கரன்சியை பயன்படுத்த தொடங்கும் பட்சத்தில், அமெரிக்காவின் வரியை கண்டு நாம் அச்சப்பட வேண்டியதில்லை.












Click it and Unblock the Notifications