ஏ அமெரிக்காவே! இந்தியாவை நீ தொட முடியாது! இந்திய பெருங்கடலில் போர் கப்பலை நிறுத்திய ரஷ்யா! ரீவைண்ட்
டெல்லி: இன்று உலகம் முழுவதும் இந்தியா-ரஷ்யா உறவு பற்றி பேசப்படுகிறது. ஆனால் இந்த நட்பின் வேர்கள் எங்கே தொடங்குகின்றன தெரியுமா? 1947 ஏப்ரல் 13-ம் தேதி - இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பே, நேரு, சோவியத் யூனியனுடன் ராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தினார். கோப்பெருஞ்சோழன்-பிசிராந்தையார், மேரி க்யூரி-ஐன்ஸ்டீன், பிரசாந்த்-கரண், அப்பாஸ்-வினித் மாதிரி இந்தியா-ரஷ்யா நட்பும் காலத்தால் அழிக்க முடியாத காவியம்.
ஆரம்பத்தில், ஸ்டாலின் காலத்தில் இந்த உறவின் பிணைப்பு குறைவாகவே இருந்தது. ஆனால் 1955-ம் ஆண்டு, நேரு மாஸ்கோ சென்றபோதும், அதே ஆண்டு சோவியத் தலைவர் குருஷ்சேவ் இந்தியா வந்தபோதும் இந்த உறவு புதிய உயரத்தை அடைந்தது. இந்த சந்திப்புகளின் நேரடி விளைவுதான் பிலாய் மற்றும் போகாரோ எஃகு ஆலைகள்!

எல்லா காலநிலையும் தாங்கும் நட்பாக எப்படி மாறியது?
இந்த நட்பு பலமுறை அமில சோதனைக்கு உள்ளாகியுள்ளது. பல கடினமான தருணங்களை சந்தித்துள்ளது. ஆனால், ஒட்டிப் பிறந்த இரட்டைப் பிறவிகளைப் போல செயல்பட்டன இந்தியாவும், ரஷ்யாவும். 1962 சீன-இந்திய போரின்போது சீனா இந்தியா மீது தாக்குதல் நடத்தியபோது, மேற்கு நாடுகள் மவுனமாக இருந்த நேரத்தில், சோவியத் யூனியன் இந்தியாவுக்கு ஆதரவாக நின்றது.
ஆனால் இந்த நட்பின் உச்சக்கட்ட சோதனை 1971-ம் ஆண்டு பங்களாதேஷ் விடுதலைப் போரின்போது வந்தது. அமெரிக்கா மற்றும் சீனா பாகிஸ்தானுக்கு ஆதரவாக நின்றன. அமெரிக்க கடற்படை இந்தியாவை அச்சுறுத்த வங்காள விரிகுடாவில் நுழைந்தது. இந்த அபாயகரமான தருணத்தில் ஆகஸ்ட் 1971-ல் இந்தியா-சோவியத் நட்பு மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. சோவியத் கடற்படை, இந்தியப் பெருங்கடலில் சுறாபோல நுழைந்து அமெரிக்க அச்சுறுத்தலை எதிர்த்து நின்றது.
அணு ஆயுத நீர்மூழ்கி கப்பல்களையும் அனுப்பி வைத்தது ரஷ்யா. "என் உயிர்த் தோழன் இந்தியாவை தொடனும்னா, என்னை தாண்டிப் போ பார்ப்போம்.." என்று கர்ஜித்தது, வல்லரசு ரஷ்யா. வாலை சுருட்டியது அமெரிக்கா. இதுதான் இந்தியா-ரஷ்யா உறவின் "பொற்காலம்" எனப்படுகிறது.

UN-ல் 6 முறை வீட்டோ, இந்தியாவுக்காக நின்ற ரஷ்யா
1957-முதல் 1971 வரை ஐக்கிய நாடுகள் சபையில் சோவியத் யூனியன் 6 முறை வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்தியாவுக்கு ஆதரவாக நின்றது. இவற்றில் பெரும்பாலும் காஷ்மீர் பிரச்சினைகள் மற்றும் போர்த்துகீசிய ஆட்சியிலிருந்த கோவாவை இந்தியா இணைத்ததற்கான ஆதரவு அடங்கும்.
சோதனைகளை எதிர்கொண்ட காலங்கள்
1. சோவியத் யூனியன் உடைவு (1991): சோவியத் யூனியன் உடைந்தபோது இந்த நட்பு பெரும் சவாலை எதிர்கொண்டது. ரஷ்யாவின் பொருளாதார நெருக்கடி மற்றும் மாறிவரும் உலக சூழல் காரணமாக உறவுகள் தளர்ந்தன. ஆனால் 1993-ல் நட்பு மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் மூலம் உறவுகளை மீட்டெடுக்க முயற்சி நடந்தது.
2. இந்தியாவின் அணுசக்தி சோதனை (1998): இந்தியா 1998-ல் அணுசக்தி சோதனை நடத்தியபோது மேற்கு நாடுகள் பொருளாதாரத் தடைகள் விதித்தன. ஆனால் ரஷ்யா இந்தியாவுடன் ஒத்துழைப்பைத் தொடர்ந்தது.
3. இந்தியா-அமெரிக்கா நெருக்கம்: 2000-களில் இந்தியா அமெரிக்காவுடன் நெருங்கியபோது, குறிப்பாக அணுசக்தி ஒப்பந்தம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பின்போது, ரஷ்யா கவலை அடைந்தது. ஆனால் இருபுறமும் புத்திசாலித்தனமாக செயல்பட்டு உறவுகளை பாதுகாத்தன.
புதிய சகாப்தம் - 2000 முதல் இன்று வரை
அக்டோபர் 3, 2000-ல் புடின் மற்றும் வாஜ்பாய் கையெழுத்திட்ட "இந்தியா-ரஷ்யா மூலோபாய கூட்டணி பிரகடனம்" இந்த உறவுக்கு புதிய வடிவம் கொடுத்தது. பின்னர் 2010 டிசம்பரில் இது "சிறப்பு மற்றும் சலுகைபெற்ற வியூக கூட்டணி" ஆக உயர்த்தப்பட்டது.
உக்ரைன் போர் - மீண்டும் ஒரு பெரிய சோதனை
2022-ல் ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்தபோது, மேற்கு நாடுகள் இந்தியா மீது ரஷ்யாவைக் கண்டிக்க அழுத்தம் கொடுத்தன. ஆனால் இந்தியா தனது மூலோபாய சுயாட்சி கொள்கையை கடைப்பிடித்து, ரஷ்யாவுடனான எண்ணெய் வர்த்தகத்தைத் தொடர்ந்தது. இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் இறக்குமதி 2% முதல் 40% வரை உயர்ந்தது.
வர்த்தக உறவுகளில் பெரும் வளர்ச்சி
இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தகம் 2021-22-ல் $13 பில்லியனிலிருந்து 2022-ல் $27 பில்லியனாக உயர்ந்தது. 2030-க்குள் $100 பில்லியன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு ஒத்துழைப்பு
இந்தியாவின் பாதுகாப்பு உபகரணங்களில் 50% க்கும் மேல் ரஷ்ய தயாரிப்புகள். S-400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு (சமீபத்தில் நம்மை, பாகிஸ்தான் தாக்கியபோது அரண்போல காத்ததே அந்த அமைப்பு), சுகோய் விமானங்கள், பிரம்மோஸ் ஏவுகணை உற்பத்தி போன்ற முக்கிய ஒத்துழைப்புகள் உள்ளன.
அணுசக்தி ஒத்துழைப்பு
கூடங்குளம் அணுமின் நிலையம் இந்தியா-ரஷ்யா நட்பின் சிறந்த உதாரணம். தமிழ்நாட்டில் 6 அணுமின் நிலையங்கள் கட்ட 2024-ல் புதிய ஒப்பந்தம் கையெழுத்தானது.
விண்வெளி ஒத்துழைப்பு
இந்தியாவின் ககன்யான் திட்டத்துக்கு ரஷ்யா விண்வெளி வீரர் பயிற்சி அளிக்கிறது. கிளோனாஸ் செயற்கைக்கோள் வழிசெலுத்தல் ஒத்துழைப்பும் உள்ளது.
எதிர்கால சவால்கள்
இன்றைக்கு சில சவால்கள் உள்ளன: ரஷ்யா-சீனா நெருக்கம், இந்தியா-அமெரிக்க உறவுகள், வர்த்தக ஏற்றத்தாழ்வு, பாகிஸ்தான் குறுக்கே போய் உறவை பேண முயல்வது என்று சில சவால்கள் வருகின்றனதான். ஆனால், நமது வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சொன்னது போல் "கடந்த அரை நூற்றாண்டில் உலக அரசியலில் ஒரே மாறாத விஷயம் இந்தியா-ரஷ்யா உறவுதான்".
77 ஆண்டுகளாக பல்வேறு சோதனைகளை எதிர்கொண்டு வெற்றிகரமாக நீடித்திருக்கும் இந்த நட்பு, இன்றைய உலக அரசியலில் "உலக ஒழுங்கு" கட்டமைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. டிரம்பின் தற்போதைய வரி தொடர்பான அச்சுறுத்தல்களும் கூட இந்த வலுவான நட்பை அசைக்க முடியாது என்பதை மோடி அரசாங்கத்தின் தற்போதைய நிலைப்பாடு தெளிவாக்குகிறது. இந்தியர்கள் இந்தியப் பொருட்களை வாங்குங்கள் என மக்களுக்கு மோடி அழைப்புவிடுத்துள்ளதன் மூலம், அமெரிக்க மிரட்டலை எதிர்கொள்ள ரெடி என பிரகடனப்படுத்திவிட்டார். ரஷ்யாவா, அமெரிக்காவா என்றால், என் நண்பன் ரஷ்யாதான் எனக்கு முக்கியம். மேற்கத்திய குள்ள நரிகளை நம்புவதை விட, ஆசிய சிங்கத்தை நம்புவதே எங்களுக்கு நல்லது என்பதுதான் இந்தியாவின் நிலைப்பாடு.












Click it and Unblock the Notifications