விண்வெளியில் இந்தியாவின் கழுகு பார்வை.. களமிறக்கப்படும் AI உளவு செயற்கைக்கோள்.. இனி வாலாட்ட முடியாது
டெல்லி: நாட்டின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய உளவு செயற்கைக்கோள் கூட்டமைப்பை உருவாக்க மத்திய அரசு ரூ.64.05 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது.
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம், பெங்களூருவைச் சேர்ந்த அஸ்ட்ரோம் டெக்னாலஜிஸ் என்ற தனியார் ஸ்டார்ட்-அப் நிறுவனத்துடன் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

திட்டத்தின் பின்னணி என்ன?
இந்த உளவு செயற்கைக்கோள் திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ.128.11 கோடியாகும். இதில் சுமார் பாதித் தொகையான ரூ.64.05 கோடியை மத்திய அரசின் 'ஆராய்ச்சி, மேம்பாடு நிதியின் கீழ் TDB வழங்குகிறது. இது திருப்பிச் செலுத்தக்கூடிய கடன் பத்திரம் முறையில் வழங்கப்படுகிறது. வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்ட இந்தத் தொழில்நுட்பத்தை, விண்ணில் முழுமையாகச் செயல்படும் நிலைக்குகொண்டு செல்வதே இந்த நிதியுதவியின் முக்கிய நோக்கமாகும்.
இந்த செயற்கைக்கோள்கள் எப்படிச் செயல்படும்?
பொதுவாக விண்ணில் இருந்து புகைப்படம் எடுக்கும் சாதாரண உளவு செயற்கைக்கோள்களால், மேகமூட்டம் அல்லது இரவு நேரங்களில் தெளிவான படங்களை எடுக்க முடியாது. ஆனால், அஸ்ட்ரோம் நிறுவனம் உருவாக்கவுள்ள எலக்ட்ரானிக் இன்டெலிஜென்ஸ் செயற்கைக்கோள்கள் முற்றிலும் மாறுபட்டவை. இவை தரையிலும், கடலிலும், வானிலும் எதிரிகள் பயன்படுத்தும் ரேடார் கருவிகள் மற்றும் ரேடியோ அலைவரிசை சிக்னல்களை கண்டறிந்து, அவை எங்கிருந்து வருகின்றன என்பதை ஆய்வு செய்யும் திறன் கொண்டவை.
இந்தத் திட்டத்தின் கீழ் தலா 50 கிலோ எடையுள்ள சிறிய ரக செயற்கைக்கோள்கள் உருவாக்கப்பட்டு, பூமிக்கு மிக அருகாமையில் உள்ள வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்படும். இவை ஒரு வலைப்பின்னல் போல இணைந்து செயல்படுவதால், இந்திய எல்லைப் பகுதிகள் மற்றும் கடல்சார் பகுதிகளை 24 மணி நேரமும் இடைவிடாமல் கண்காணிக்க முடியும்.
மூன்று முக்கிய தொழில்நுட்பங்கள்
இந்த செயற்கைக்கோள் கூட்டமைப்பில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட மூன்று நவீன தொழில்நுட்பங்கள் களமிறக்கப்பட உள்ளன.:
பல்வேறு அலைவரிசைகளில் வரும் சிக்கலான மின்னணு சிக்னல்களை இடைமறித்து அடையாளம் காணும் கருவிகள்.
ஒரு செயற்கைக்கோள் சேகரிக்கும் தகவலை விண்வெளியிலேயே மற்றொரு செயற்கைக்கோளுக்கு உடனுக்குடன் பரிமாறிக்கொள்ளும் வசதி.
விண்வெளியில் இருந்து வரும் கோடிக்கணக்கான சிக்னல் தரவுகளை செயற்கை நுண்ணறிவு (AI) மென்பொருள் மூலம் நொடியில் ஆய்வு செய்து, ஏதேனும் அச்சுறுத்தல் இருந்தால் பாதுகாப்புப் படைகளுக்கு உடனடியாக எச்சரிக்கை விடுக்கும் திறன்.
வெளிநாட்டு சார்பிற்கு முற்றுப்புள்ளி
நவீன போர் முறைகளில், எதிரிகளின் படை நகர்வுகளுக்கு முன்பாகவே அவர்களின் ரேடார் மற்றும் தகவல் தொடர்பு சிக்னல்களைக் கண்காணிப்பது மிக அவசியம். இதுவரை இத்தகைய உயர்தர விண்வெளி உளவுத் தகவல்களுக்கு அரசு நிறுவனங்களின் செயற்கைக்கோள்களையோ அல்லது வெளிநாட்டு தனியார் நிறுவனங்களையோ நம்பியிருக்க வேண்டிய சூழல் இருந்தது. நெருக்கடியான நேரங்களில் வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து தகவல்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது.
இதற்குத் தீர்வு காணும் வகையில், உள்நாட்டு ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. ஏற்கனவே ரேடார் இமேஜிங் மற்றும் பசுமை எரிபொருள் போன்ற துறைகளில் இந்திய தனியார் நிறுவனங்களுக்கு அரசு நிதியுதவி அளித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்போது இந்த ஏஐ சாட்டிலைட் தொகுப்பு தயாரிக்கப்பட உள்ளது.




Click it and Unblock the Notifications
